எல்லையிலாத ஏகமவன்
எனையாளும் ஏகனவன்
தில்லையாடும் திகம்பரன்
திசையெங்கும் திளைப்பவன்...
ஈசனே நீயெத்தனை வித்தகன்
காமனே எரிந்த நெற்றிக்கண்
கந்தனே பிறந்த நெற்றிக்கண் கொண்டாய்...
சுடலை சவத்தில் என்ன ஞானம் கண்டாய்..
சுடலை சாம்பலில் ஏன் பிரியம் கொண்டாய்..
உடலை அழிக்கும் கடவுளா நீ - இல்லையே.
உடலை ஆளும் ஞானம் நீ ..
அடிமுடி கண்டோர் அண்டமெங்கும் இல்லை என்றார் சிலர்...
சடைமுடி கண்டுன் அடியடைந்தவர் பலரன்றோ..
கொன்றை பூ சூடும் உனை ..
கொல்லும் கடவுளாக சொன்னவர்
கொண்ட ஞானம் பொறுத்தருள்வாய்..
நினை கண்டவர் வாழ்ந்ததில்லை என்றார்..
நினைத்துனை கண்டவர் பாடியதை அவர் அறிகிலார்..
நினை காணும் ரகசியம் சொல்வாய்.. இல்லைநான்
நினை சேரும் நிலைவரலாம்..
ருத்ரன் என்றார் உனை யோகி என்றார்
உருத்திரன் என்றார் உனை ஞானி என்றார்
சித்தன் என்றார் சிலர் உனை யோனி என்றார்..
உண்மையில் நீ என்ன என்பதை அவர் உணரார்...
யோகி என்றோருக்கு தத்துவமாகிறாய்
ஞானி என்றோருக்கு யோகமாகிறாய்
ருத்ரன் என்றோருக்கு வரமளிக்கிறாய்
உருத்திரன் என்றோரின் உயிர்பறிக்கிறாய்
எத்தனை விசித்திரம் நீ..
உனை நான் அறிவியல் என்கிறேன். ஆமென்றாய்...
உனை சிலர் ஆன்மாவாய் உணர்கிறார்.. ஆமென்கிறாய்
உனையே கேட்கிறேன் அறிவியலா ஆன்மாவா?
உண்மையில் ஆன்மாவின் அறிவியல் நீ
பலர் உனை சூன்யமாய் சொல்லினர்
பரமனே நீ சூட்சமமாய் தெரிகின்றாய்
பலர் உனை பிச்சாண்டி என்றனர்
பாவி நீ பிரபஞ்சமாய் விரிகிறாய்..
மரத்தடி ஞானி நீ ; மனமறியா சக்தி நீ
சுகமழித்த பேரின்பம் நீ ; சூன்யவெளியின் பேரொளி நீ
அக்னிவடிவினன் நீ; அகத்துள் உறைவினன் நீ....
சில பெண்ணியவாதிகள் சம உரிமை கோருகின்றனர்
சிவனே பெண்ணின்பாதிதான் என உயரிய கோரிக்கை வைக்கிறாய்..
சில பெருஞானிகள் உனை வெற்றிடமாக்கி வியந்தனர்..
சித்தனே பெருவெளியின் உனை ஆற்றாலாக்கி வியக்கிறேன்..
அருவமான ஆண்டவா
உருவமாய் காணவா
திருவமான சோதியே
இருளான சேவனே..
தோழனாய் நிற்காதே
தந்தையாய் பார்க்காதே
தாயாய் மாறாதே - ஞானமளிக்கும்
நற்குருவாய் காத்தெனை கடைசியில்
ருத்ரனாய் தின்றாலும் சரி
நின்சோதியில் எரித்தென் சாம்பல் பூசி கிடந்தாலும் சரி..
Post a Comment