காதலிசை

தங்க நிறத்தில் திங்கள் நிறைந்து
தம்வழி சென்றோட - மலர்
அங்கந் தவித்து அங்கி மறந்து
அங்கவை பின்னோட - தனைச்
சுற்றி வலஞ்செயும் சுந்தர புவியினை
சூரியன் ஈர்த்தோட - கழிப்
பற்றி படர்ந்திடு பல்மலர் கொடியினை
பதுமையள் சேர்த்தாட - வளர்
நெற்றி பிறையென நெருங்கிட நெருங்கிட
நெறியது பிறழ்ந்தோட - புவி
வெற்றி புகழ்ந்திட வெண்கலி புனைந்திடு
வெண்டளை கைசேர - மனை
கட்டி அணைத்திட கண்கள் செருகிட
கன்னியும் கைகூட - இனி
இத்த மிகுத்தினை இந்த பிறவியில்
இனியேது ஈடேற..

எழுசீர் - நேரிசை..

கண்கரு மணியது கிண்கிணி எனவே
கண்ணுடை முகமது பொன்பிறை அணிந்தே
விண்ணுறை அகமுளல் என்னறை நுழைந்தே
மண்ணதில் புரண்டடம் செய்தெனை வதைத்தே
விண்வெளி அழைத்தெனை நட்சத்திரம் காட்டினாள்...

நன்னகை அழகுடை முன்பனி எனவே
புன்னகை நயமுடன் நின்றினி தொன்றை
தன்னிகர் எனவவள் தந்திடு மொன்றை
தன்னிரு விரலொடு சுண்டிடு முன்னை
மன்னிக்கும்  நற்குணம் என்னிடம் வேண்டுமோ

கொன்றெனை குழைத்து புதுவித யாக்கை
என்றெனை இழைத்து நலமொடு காக்குங்
குன்றென குவித்து உளமுற வாழ்த்தும்
நின்றனின் படைப்பும் விதவித மயக்கம்
இன்றிலா தீர்த்து என்னை வளைப்பாயோ..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post