என்னை ஆளும் ஏகர் பிள்ளை
தன்னை போற்றா தேதி உண்டோ
தன்னை என்னில் தானாய் செழித்து
என்னை தன்னில் ஏற்கும் ஆடலே.
அன்றும் பிறந்தேன் அகிலம் புகுந்தேன்
அன்றில் இருந்து அருகில் அமர்ந்து
இன்றை சமைத்து இனிமை நிறைத்தல்
என்றும் எளிதாம் எழிலாம் ஆடலே
கன்றை தழுவும் காளை அவன்தான்
நன்றாய் உழுவும் ஏரும் அவன்தான்
மன்றம் முழுதும் மூத்தோன் அவன்தான்
குன்றம் பரவும் கந்தம் அவனே.
வன்மை தொன்மை வாரா தின்மை
நன்மை தீமை நாளும் கோளும்
முன்பே தீர மாய்த்த வேலன்
ஒன்றில் ஒன்றாய் ஒன்றும் ஒன்றே.
இன்பம் துன்பம் இன்றி கர்மம்
நன்று செய்யும் நாதன் என்னை
கன்று போல கட்டி கொள்ள
பொன்றுங் காலம் போதாப் போதே
என்னில் தன்னில் ஏற்றி பூத்த
தன்மை சொல்ல சொல்லும் இல்லை
மென்மை கோர்த்த மின்னல் கொண்ட
பின்னல் ஊஞ்சல் மோதும் மாறே.
இன்னல் இன்னல் இன்னும் இன்ப
மின்னல் மின்ன மர்மம் நீங்க
கன்னல் கங்கு கவ்வி உண்க
சன்னல் சின்ன சித்தம் தானே.
என்னில் என்னில் ஏகம் சேர்ந்து
சன்னல் எங்கும் சாரம் ஊர்ந்து
சின்னச் சின்ன தூசும் சோதி
மின்ன மின்ன மின்னல் நானே.
பொன்னும் பண்ணும் பெண்ணும் போகம்
தின்னும் எண்ணம் தீர யோகம்
பின்னிப் பின்னி பித்தம் கூட
மின்னி தொட்ட மண்ணும் பொன்னே.
அன்னம் அண்டம் அங்கம் எல்லாம்
சின்னச் சின்ன தூசாய் போக
அன்பும் இன்பும் என்பும் நூலாய்
குன்றிக் குன்றும் கொண்ட நோயே. 10
Post a Comment