நிலமகளே... தேன்மழையே..

நீர்கடல் பல்நதி நீலமே நீர்சூடி நின்னகத்தே
ஓர்துகள் போலெனை ஓம்புமுன் நல்லருள் யாதுரைப்பேன்
வேர்புனை கூர்வலி தாங்கி மரங்கள் பலகொடுத்தாய்
நார்மலர் நல்மணம் நற்பயிர் யாவும் அருளினையே..

மாமலை யென்னும் மார்பினில் எம்மையே தாங்கினையே
பூமகள் நீயுமே பூசைக் குறியவள் ஆதனினால்
மாமழைக் கொண்டுனை மாகம் புரியுமே அர்ச்சனையே
மாமரம் தானுனக்கு மாலை யெனவே மாறிடுமே..

தேனொடு பாகும் தலைமகள் நீயிங்கு தந்தனையே
மானொடு மந்தியும் மண்ணிலே நீயிங்கு தந்தமையால்
வானொடு வாழ்வும் வார்நிதி பெற்றோம் வாழ்த்துதுமே
கானொடு மாரியும் காணவே தந்தாய் வணங்குதுமே..

யாதென் றுரைப்பேன் யானிங்கு நல்லவளே உன்னருளை
யாதென் றுரைப்பேன் யாமெல்லாம் வாழ்கின்ற வாழ்வினையே
மாதென் றலதுசெய் மாயமதை துய்த்திட தந்தவுனை
யாதென் றறிவதோ யென்னறி வும்நின் கொடையெனின்றே

நாளொரு புத்தென நாழிகைக் கொர்விதம் நின்றெனையும்
ஆளொன் றெனநீயே ஆண்டமையால் தாயே உனதிருநற்
றாளொடு காலம்பல் லாண்டெ னக்கு மருள்தரவே
கோளொடு கோளாய் திரிகுமென் தாயே விழையிதுவே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post