ஐந்து அங்குலமாய் சுருங்கிட ஆசை
அகில பிரபஞ்சமாய் விரிந்திட ஆசை
ஆழ்கடல் அடியில் சிலநாள் உறங்கிட ஆசை
பூமியின் கடைசிநாளில் உயர்ந்த சிகரம் தொட நான்கடி தூரத்தில் சிறு தேநீர் குடிக்க ஆசை
மலையாய் கடலாய் காற்றாய் பரந்திருக்க ஆசை
கலையாய் மடலாய் காவியமாய் கவர்ந்திருக்க ஆசை
எதிரிகளிடம் தோற்கவும் ஆசை
துரோகிகளிடம் வெல்லவும் ஆசை
நண்பர்களுடன் நடந்து செல்ல ஆசை
நடந்தால் எல்லைகள் இல்லாமல் போக ஆசை
கடிதமெழுத ஆசை கடைசி தந்தியாகிட ஆசை
புதுயுகம் தன்னில் பழமை பேசவாவது இருந்திட ஆசை
ஐக்கிய மாநாடுகள் எங்களூர் டீக்கடையில் நடத்த ஆசை
கற்காலம் சென்று பொற்காலம் காண ஆசை
பொன்னால் கப்பல் செய்து காற்றில் பறக்கவிட ஆசை
கட்டுமரமாய் கடலில் மிதக்க ஆசை
செயற்கை கோளாய் நிலவில் நடக்க ஆசை
நான் காணும் கண்ணெல்லாம் ஆனந்த கண்ணீர் சிந்த ஆசை
வையகம் யாவும் இன்பமெய்த ஆசை
பால்சோற்றில் உப்பாய் சில துன்பம் சுவைக்க ஆசை
ஆக்டோபஸ்ஸின் வண்ண திரவங்களை சேகரிக்க ஆசை
சக்கரை பொங்கலுக்கு ஆசை
அக்கறை பிரதேசங்களுக்கும் ஒன்றாய் பகல் காண ஆசை
துருவம் சென்று தொடுவானம் தொட ஆசை...
பலகாரம் கூட பகிர்ந்துண்ண ஆசை....
إرسال تعليق