நடுநிசி கனவுகள் - பாரதி எனின் குரு

பேரிருள் சூழ்ந்திட்ட மின்சாரமற்ற நள்ளிரவில் .. அறை முழுதும் தமிழ் வேட்கை வியாபிக்கும் தாகமெனக்கு... ஆவலில் அறை மயக்கநிலைகொள்ள.. இருள் என் கண்ணொளி மறைக்க.. காணாதிசைகள் காரணமாய் உறங்கிட... நள்ளிரவில் ஒரு விடியல்.. நான் கதவு திறந்த இடம் அவனே.. அரியதொரு காட்சி என்பதின் சாட்சி என வீற்றிருந்த வேளை...

எதிர்தெரியும் அவன் பாரதி என்பவன்... நான் வணங்காதவன்.. எனை வளைத்தவன்.. தனைமறந்த எனை தனை குருவாய் ஏற்க செய்தவன்.. கேள்விகளில் துளைக்கும்படி லட்சத்திற்கும் மிச்சமிருந்தது என் கேள்விகள்... அவனிடத்து எனக்கு சிறு அச்சம்கூட இருந்தது.. கேள்விக்கேட்கவோ.. துணிந்து பேசவா வாயில்லை.. வாயுரைக்க வருகுதில்லை.. எம்தமிழ் புனிதமெய்திய கங்கையவன்..

புலனறிவை மீறி புதுவெள்ளம் பாய்வதென மொழி என் குரல்வளைவிட்டு வெளிபட.. கேட்டேவிட்டேன்.. நினை குருவாய் ஏற்கிறேன்.. உபதேசம் உண்டோ உரைத்திடுவாய் என்கிறேன்..

அக்கம்பீர சிரிப்பில் செல்ல விசமம் தெரிந்தது.. அவன் குரல் கூறியதெல்லாம் இறையருள் பெற்றதொரு சொற்களின் குவியலாய் என் செவி சேர்ந்தன.. அவ்வரிகள் வரிசைபடி...

அன்றொரு தினந்தன்னில் .
அடியேன் யானொரு குள்ளசாமியின்
அடிபணிந்து கேட்தற்கொண்டு
அறிந்தவை பலவுண்டு
அதில் சில அன்றே பாடியதுண்டு..
அவற்றில் விளக்கியதுண்டு..
அடியேனை சரண்புகுந்த நின் வேண்டுதலுக் கிணங்கி..
அரும்கவிதை மொழிவேன் கேள்...

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.
...

இக்கவி மொழியும் பொருளுணர்ந்தாயோ?.. குறையுளதோ ? கேள்வியுளதோ? உரைத்திடுவாய் சீடனே..

கேட்பதற்கு அஞ்சி கேள்வி ஒன்றை மறைக்கிறேன்.. என் தைரியம் உயரும் காலமதில் கேட்கிறேன்.. அதுவரை எனை பொருத்தருள் குருவே..

பொருமைகாக்கிறேன் நீ உணர்ந்தவை விளக்குவாயாக...

தெளிந்த நீரை விளக்கவோ?.. என் பார்வை படிமத்தை சொல்லவோ?..

நின் புரிவை சொல்.. புதுமை கொள்கிறதா என்கவி என பார்க்கிறேன்..

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே .. நிற்கும் நடக்கும் பறக்கும் உயிர்களே / பொருள்களே என்பதுன் விழைவு ... காலத்தால் நிற்பதும் .. நடப்பதும் .. பறப்பதும் .. எல்லாம் நிகழ்நிலை கனவுகள் தானோ?.. என காண்கிறேன் நான்...

புன்னகையுடன் சொன்னான் பாரதி.. காலத்தின் திரிபுகள் எனது கவிதையை செழுமை செய்துளன..

கற்பதும் கேட்பதும் கருதுதலும் அற்பமாயை என்கிறாய்.. நானோ கற்பதும் கேட்பதும் கருதுதலும் காலம் பொருத்து மனநிலை பொருத்து திரியும் மாயைகள் என்கிறேன். அதன் ஆழம் ஏதுமில்லை என்கிறேன்...

என் எதிர்காலம் சிறந்திருக்கிறது என்றறிகிறேன்.. போதும் என் புலமை  பெற்ற பெயர் சிறப்பெய்துதல் கண்டேன்.. என்று கம்பீரமாய் சிரித்தபடி சென்றான் அவன்.. நான்  நல்லதொருதமிழை காண்கிறேன்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم