நானும் சொல்வேன் நல்லை அல்லை..

முகிலலையும் வான்வெளியும் நீயென்று
வான்பார்க்கும் வயல்வெளியாய் நானின்று
கண்பார்த்து காய்ந்தழியும் நாளின்று
நீவந்து  நீர்ததும்பும் முத்தம் சிந்தனும்.

கடலொழியும் சிறுதுளியும் நீயென்று
துளிவிழுங்கும் சிப்பியாய் நானின்று
உனைசேர்த்து கடலெங்கும் உழன்று
முகையீன்ற நீயிங்கு முத்தாக மாறனும்..

நதியோடும் பெருவெள்ளம் நீயென்று
அதில்வளையும் சிறுநாணல் நானின்று
வளைந்தாலும் நிமிர்ந்தாலும் வாழ்வென்று
உன்னில் வாழும் வரமதை தந்திடனும்

அதைவிடுத்து முகங்கடுத்து நீயின்று
புகைவெளுப்ப முகிலாகி சென்று
எனைதவிக்க மனம்பதைக்க வைத்து
வான்சேர்ந்ததனால் நீயும் நல்லை அல்லை..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post