ஆம் நான் ஆண்மகன் தான்
படைதீர தாக்கும் பெருவீரன் தான்
ஆகையால் என்ன அழுதற் தவறா?
ஆயிரம் காரணம் இருக்க அழுதல் பிழையா?
பட்டியலிடுவேன் பார்த்து சொல்லுங்கள்.
தாயிற் கருவறை பிரிந்து பிறந்த போதே
கடவுள் பதவி போனதென அழுதேன்.
பள்ளி பருவத் தோழி ஒருத்தி
தோழமைக்கே நாங்கள் பிரசித்தம்
வீட்டிற்கு அஞ்சி தகிக்கும் காய்ச்சலிலும்
பள்ளிக்கு வருவாள் நோய்தரு சோர்வில்
என் தோளிலும் மடியிலும் சாய்ந்து துயில்வாள்
நாள்செல காய்ச்சல் உயர வீடறிந்து
மருத்துவமனை சேரக்கபட்டாள் நாளொன்று அதனில்
நான் அருகில் இல்லாததாலோ
இன்றும் அழுகிறேன் அவளை இழந்து.. - என்
பன்னிரண்டு வயதினில் சாக்கடை யோரம்
வீசபட்ட சிசுஒன்றின் வயிற்றை குதறுதுநாய்
வீறிட்டழுதது குழந்தை பீறிட்டழுதேன் நான்.
மற்றொரு பெண் தேடி தந்தையும்
மாற்று கணவன்தேடி தாயும் போய்விட
சோற்றுக்கு விழியின்றி குழந்தை சாலையில்
மயங்கி விழுந்தநேரம் லாரியேறி
இறந்த கோரம் கண்டு துடித்து அழுதேன்.
நற்குணத்தாள் தம்பசிக்கு நற்குணமிழந்த அப்பெண்
வருவோர்க்கு விருந்தாகும் தீஞ்செயல்
புரியத் துணிகையில் தடுக்கவே அழுதேன்.
கூட்டமுள்ள இடமாயினும் எவரேனும் வந்து
யாசகம் கேட்டால் கைதரும் முன்னே
யான் அழுதிடுவேன். வெட்கமின்றி..
சமீபத்தில் நெடுஞ்சாலையில் என்னை திட்டிவிட்டு
முன்னே வேகமாய் சென்று பெருவாகனத்தில்
அடிபட்டு குருதிபொங்க துடிப்பவரை தூக்கியோரம்
சேர்க்கையில் எப்படி அழுதேன் தெரியுமா...
வாய்மொழிக்கும் என்தமிழ் உதவாதென விலக்கும்
பொய்தமிழர் தம்மேல் ஆத்திரம் கொண்டு
கவிஞன் என்பதால் அழுதனை எத்தனைமுறை..
யான் அழவில்லை என்றே எவ்வித
கோரமும் நிகழ்ந்த கூடாதென்றே
தனிமையில் சிலநாள் அழுதிருக்கிறேன்..
Post a Comment