பார்வையின் உளறல்..


வலதில் ஓர்வெளி கண்டேன் பின்னர்
இடதில் மறுவெளி கண்டேன் யானும்
புறத்தே ஒருவெளி கண்டேன் நாளும்
மனதில் இருவெளி கண்டேன் நாளும்
புறத்தே சிலவெளி கண்டேன் பேணும்
அகத்தே பலவெளி கண்டேன் நானே

பலவெளி  யானும் கண்டேன் அதிலே
சிலவெளியில் இன்பம் கண்டேன் இதுபோல்
பலவெளி அகத்தே கண்டேன் ஞானச்
சிலவெளி புறத்தே கண்டேன் - என்றன்
வனவெளி தன்னில் கண்டேன் இயல்பை
மனவெளி தன்னில் கண்டேன் பரனை

விண்டவர் தம்மரும் விஞ்ஞானம் கண்டேன்
கண்டவர் தம்பெரும் மெய்ஞானம் கண்டேன்
மாண்டவர் தம்வெளி மாயையும் கண்டேன்
தாண்டவன் தம்திரு உருவையும் கண்டேன்

வெந்தழல் செவ்வாயில் நன்னீர் கண்டேன்
வெந்திடா வெள்ளியில் எரிமலை கண்டேன்
எந்தனின் மனவெளி ஈறும் கண்டேன்
எந்தையின் பரநடம் தானும் கண்டேன்
சிந்தையின் சிரசென ஞானம் கண்டேன்
சந்தையில் இலையென தொலைவதை கண்டேன்

கண்டவை கண்டபின் நிலைகொளா யானுமே
அண்டமாய் பரந்துபின் அணுவென சுருங்கியே
பிண்டமாய் பிறந்தயென் பெரும்பயன் எய்தியே
சுண்டிய பாலதில் உறைமோர் என்றென்
விண்டிய நிலைகண்டு வீணென ஆயலுற
மண்டிய முன்னவர் போலின்றி வாழ்வனே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post