திருவார் தலைவன் திகம்பரத் தீசன்
உருவத் துணர்ந்தார் உலகத்தில் இல்லை
திருவாரூர் தேவன் அடியவர்க்கு அடியான்
கருவாகி அண்டம் படைத்த பரமன்
உருவாய் அருவாய் உறைந்தே நிறைந்தத்
திருவாய் சிவமே நிறைந்துறை லிங்கத்
திருமேனி தன்னை மனதில் இருத்தி
திருவைந் தெழுத்தை உளமாற சொல்ல
உருவாகி நம்முள் உறைகின்ற ஈசன்
அருள்வான் சுடராய் உடலுள் உறைந்து. .. (1)
அண்டம் படைத்தவன் அர்த்தநா ரீசுவரன்
பிண்டம் கொடுத்தத னுள்ளே குடிகொண்டன்
கண்டங் கழுத்திலே நீலங்கொண் டான்நம்முள்
சிந்தை சரத்திலே சிந்தும் அமுதென
எந்தை பிராணனாய் எம்மு ளுயிர்த்தவன்
விந்தை முழுதுக்கும் மூலப் பொருளவன்
வந்தனை செய்திடின் வந்தும்முள் வாழ்ந்து
வகைவகை ஆற்றல் அருளிட காண்பீர்
விதவித சித்தினை செய்த லறிவீர்
பலப்பல ஞானமது உள்ளுறக் கற்பீர்
சிவபுரத் தோனைப் பணிந்து.. (2)
பல விகற்ப பஃறோடை வெண்பா #சிவம் #லிங்கம்
إرسال تعليق