முகுந்தனின் முத்தம்.

குளத்து மீன்கள் குதித்தாடின கும்மாளமாய்
பழனத்து கமலம் மலர்ந்தது நிலவால்.
கொடியாடும் மல்லிகை தன்னிருப்பை காற்றிலனுப்ப
பொடிநடையாய் வந்தது அன்னமும் நாரையும்

மயிலாடும் சோலையிங்கே மயிலிறகு சூடன்வந்து
ஒயிலாக ஆடியபடி குழல்வாய் ஊதியபடி
கயலான கண்ணுடையாள் என்னை கர்வந்திட்டு.
அயலாக இச்சூழல் மாறிடும் மாயஞ்செய்து.

குழலினை விட்டு இதழினை இசைத்தான்
மண்ணள்ளி தின்றவனென் பெண்மையை தின்கிறான்
மதுசூதன் தானுமே இதழ்தேனை சுவைத்தே
மதுவுண்ட போதையை மாதவன் தந்தானே.

மண்தின்று உலகை காட்டிய மணாளன்
பெண்நின்று உலகை நீங்கிட உதவினானே.
கண்கண்ட போதிலே கற்கண்டு நாவூறுமே
இதழுற்ற போதிலே என்னானேன் யானறியேன்.

உலகளந்த குள்ளன்தான் ஊரரிந்த கள்ளன்தான்
உயிரள்ளி கொண்டானே உனக்கேதும் புரிந்ததோ
மயிலறகாய் என்னை முடிசூடி போனானே
மதியழகே சொல்லும் போனதிசை அறிவாயோ.

முகங்கண்ட போதே மனமிங்கு இல்லை
இதழொன்றிப் போக இயல்பிங்கு இல்லை
அசலின்றிப் போனேன் அயலாகிப்போனேன்
பசலைதின்று போகுமே பரந்தமா எங்குளாய்..?..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم