சூழல் வர்ணனை..

வாள்பாயும் நோக்கில் விரவிவேல் பாயுமே
தோள்மோதி தோற்கின் தேசமது போகுமென
தாள்விரவி எய்வோர் தமதுயிர் பறித்து
ஆள்காக்கும் எம்மண் களிறு.



[ விளக்கம் - வாள்பாயும் திசையில் வேகமாய் வேல் பாயுமாம் வீரர்கள் தேளில் மோதி தோற்றால் தன் தேசமே போகுமென அஞ்சி கால்கள் வேகமாய் சென்று வேல் எய்தியவர்கள் உயிர் பறித்து தம் நாட்டு வீரர்களை காக்கும் எங்கள் நாட்டு யானை ]


கோன்தன் குரலுக்கு குன்றிடும் புரவிகளும்
மான்கள் நிறைந்த மாவனப்புள் வாழ்நாடு
கான்நிறைந்து நாணுங் கதிர்நிறைந்த தேசமிது
யான்மகிழ்ந்து பாடவிழை நாடு.


[ அரசன் சொல்லுக்கு அடங்கி செயல்படும் குதிரைகளும். மான்கள் நிறைந்த சிறந்த வனத்து மயில்கள் வாழும் . காடுகள் நிறைந்து வெட்கத்தால் மண்பார்க்கும் நெற்கதிர்கள் நிறைந்த. நான் மகிழ்ந்து  பாட விரும்பும் தேசம்]


வான்நிறை வெண்மதி யொத்த பெண்டிரும்
வான்தனை பிம்பிக்கும் பொய்கை பலவுடை
காண்கவே மகிழ்தருங் நன்நில தேசம்
மாண்புடை மாந்தர்தே சம்.


[ வனத்து பௌர்ணமி நிலவைப் போன்ற பெண்களும். வானத்தை பிம்பாய் காட்டும் குளங்கள் பலவும். பார்க்கவே மகிழ்ச்சி தரும் நல்ல நிலமும். உயர்வும் மாண்பும் உடைய மனிதர்களின் தேசம் ]


மையல்கொள் நன்நிலமும் மையலுறை நற்றமிழும்
மையங்கொள் நன்நாடு தையல் விரும்புநாடு
அயல்வாழ் மனமெல்லாம் புகழ்வார் உளநாடு
கயல்நிறை பொய்கைநிறை மண்..


[ காதல்கொள்ளும் படியான நல்ல நிலமும் காதலையே கொண்ட நல்ல தமிழும். மையமாய் நிற்கும் நல்ல நாடு. பெண்கள் விரும்பும் நாடு. மற்ற நாட்டில் வாழும் மனங்களெல்லாம் புகழும்படி உள்ள நாடு ]


வானமே வந்துவந் துப்பொழியுந் தேசம்
மானமே வாழ்வாய் உடையதோர் தேசம்
சேனமே வந்தும் திசையறியா தழியுமே
ஈனமே வந்திடா நாடு.


[ வானமே வந்து உவந்து மழை பொழியும் தேசம். மானமே வாழ்வாய் கொண்ட தேசம். போர்படையே வந்தாலும் வந்தவழி தெரியாமல் அழிக்கும் வீரமுள்ள தேசம். தாழ்வே வந்திடாத நாடு ]


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم