கொல்லத் துணிந்தாரடி - அவர்
பிள்ளைக் கொன்றாரடி - புவி
அன்பைக் கொன்றாரடி - வலி
கொள்ளச் செய்தாரடி - விதி
செய்யச் துணியாததை - இவர்
செய்து இனித்தாரடி - மதி
செந்நிறம் ஆனதற்போல் - பிள்ளைக்
குருதியில் துடிக்குதடி - உயிர்
உள்ளுக்குள் வெடிக்குதடி - உடல்
காண நடுங்குதடி - இவர்
பாவியர்க்கு பிறந்தனரோ - கொடும்
துரோகியர்க்கு பிறந்தனரோ - பாரும்
பார்த்திடா பேரதர்மடி - ஊரும்
கேட்டிடா பாதகமடி- கண்
காண அஞ்சுதடி - கை
எப்படி செய்ததடி - இவர்
எவ்வித உணர்வினோரடி - சேயை
பிணமெனச் செய்தாரடி - கொன்று
குவித்த பிள்ளைபொட்டலங்களடி - வென்று
நிகழ்த்துவது யாதினியுளதடி - அன்னை
காணப் பிள்ளை சாதல்போல் - பாரில்
ஆனப் பெருந்துயர் உண்டோடி - மண்
மறைந்து போகட்டுமடி - இம்
மாந்தரினம் அழியட்டுமடி - வாயில்லா
மனிதம் இருந்தென்னபயனடி - சேயில்லா
தேசம் எதற்க்கோடி - தீயிற்பூமி
எரிந்தினும் தீதொன்றுமிலையடி..
إرسال تعليق