முருகவெண்பா

முருகா முருகா முருகா எனநான்
உருகி உருகி உளமால் அறுக்க
வருவாய் வருவாய் வடிவேல் குகனே
குருவாய் குருவே வர

திருவாய் திருவாய் திருச்சொல் அருள்வாய்
அருள்வாய் அருள்வாய் அடியன் நிறையும்
பொருளாய் பொருளுள் பெரிதாய் உரையும்
தருவாய் குருவாய் உடன்

வருவாய் வருவாய் விரைவின் விரைவாய்
மருவில் மறையை மருந்தாய் தருவாய்
அருவாய் அறிவாய் அறிவின் திருவாய்
திருவாய் மொழிவாய் எனக்கு

முருகா முருகா முருகின் தலைவா
அருகா அருகா அறிவை கொடுத்து
ஒருகால் இருகால் சுழுவை நிறுத்து
இருதாள் இருத்தி உதவு.

இருளை மருளை இருவாய் பிளக்கும்
திருவே சுடராய் திருவார் நிலைக்கு
ஒருங்கே செலுத்து ஒருமால் அறுத்து
உருவாய் உளத்தில் நிலைத்து.

விரும்பும் விருப்பம் விரைவாய் பெறவே
அரும்பும் அரும்பை அறுத்தே உதவு
கரும்பும் கமலம் கடிந்தே துறத்த
பெருவேல்  அதனை செலுத்து..

ஒருகால் முயங்கி ஒருநிலை படவே
வருகும் பிணியை வருமுன் விரட்டு
பெருமை சிறுமை புகழை விலக்கி
ஒருமை நெறியை வழங்கு

எருவாய் எனதுள் எனையே கொடுக்க
குருவாய் நெறியை கொடுத்து உணர்த்து
கருவாய் எனதுள் கடம்பை நிறுத்த
வருவாய் குகனே விரைந்து...

மருவா முருகா முதியா குமரா
வருவாய் அழகா வடிவேல் வரதா
விரும்பி எனையே விலையாய் கொடுப்பேன்
கருவின் உடனுள் துணை.

பருகும் பசியும் புசிக்கும் பசியும்
அருகா துனையே அழைத்தேன் அடியேன்
வருங்கால் எல்லாம் வரைதாள் கொடுத்தேன்
இருந்தே இசைப்பாய் எனை.

இருக்கும் பிழைகள் இலைபோல் கலைய
இருக்கும் பிணிகள் இனிதாய் மலர
இருக்கும் பலவும் இலதாய் விலக
இருக்கும் துணையே மனம்..

இருக்கும் இயல்பை பெருக்கும் வழியை
அருள்வாய் அடியன் அடியை பிடித்தேன்
கருணைக் குருவே குருவே அமரர்
திருவே அதகா அருள்

முருகும் முருகும் முருகா எனையுன்
முருகில் மயக்கி முயக்கும் நெறிசெய்
அருகா முழுமை அருகும் வகைசெய்
முருகா முருகாய் முயக்கு..

எருதாய் திரிந்தேன் எதையும் புவியில்
கருதா திருந்தேன் கடம்பா எனதுள்
கருத்தில் இருந்து களையை விலக்கு
குருத்தாய் உனையே விதை.

திருவே திருவே திருவின தலைவன்
மருகா முருகா முழுமை பெறவே
குருவாய் இருந்து குடிமை புரிந்து
கருகும் முதலை திருத்து. .

வருவாய் வருவாய் வரமாய் வருவாய்
வருவாய் வருவாய் எனவே வருவாய்
தருவாய் தருவாய் தனங்கள் புவிமேல்
மருவா நிலையை கொடு

உருவால் உடலால் உனையான் உணரேன்
உருவில் பொருளுள் உறைவும் அறியேன்
அருவாய் அமையும் அருமை அறியேன்
வருவாய் உருவாய் எனக்கு.

பருகேன் அமுதம் பகரும் தமிழை
பருகி அடைந்தேன் பழனிப் பதியை
பெருகும் உணர்வை பெரிதாய் மொழிந்தேன்
உருகும் மனத்தை நினை. ..

ஒருவாய் செறிந்த அறுவே அரணே
ஒருவாய் செதுக்கி ஒருமால் கொடுத்து
சருகாய் மறையும் சவத்தில் இருந்து
கருகும் உயிரை பிடி..

விருதா சலத்தோன் விரும்பும் முருகா
கருதும் அறிவும் கழன்றே மறைய
கருதும் நிலைக்கு கரத்தை கொடுத்து
இருத்து எனையும் பிடித்து..

சருகா செருகா செருக்கின் கிறுக்கா
அருகா அறத்தை அறியும் முறையை
திருவாய் மலர்வாய் தணிகை தலைவா
குருவாய் பணிந்தேன் உனை.

இருளில் இடும்பில் இருந்து விலக்கு
மருளை மதத்தை மறைத்தே விலக்கு
முருகை உணர முறைகள் படுத்து
கருணை அதனை கொடுத்து..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم