கணபதி துதி .
நும்பி அடியில் நுழைய துணையாய்
தும்பி கரத்தோய் தமிழை தருவாய்
ஈசர் பணிதல்.
நேசர் மனதே நகராய் அமர்ந்துதாசர் தமக்கே தகய தருளும்
ஈசர் பரனே இளையோன் தனையே
பேசர்க் கருள்வாய் பெருமைத் தமிழே..
தமிழன்னை துணை வேண்டல் :
அம்மா உனையே அடைத்தேன் மனதுள்
பெம்மான் தனையே படைத்தேன் உனக்கே
எம்மான் முருகன் எளியர் குமரன்
செம்மை புகழ செய்வாய் துணையே..
முருகனருள். :
உன்னை அறியும் உயர்ந்த அறிவை
என்னை பெறுவேன் எளியன் எனக்கும்
உன்னை அறியும் உணர்வை அருள்வாய்
தன்னை அறியத் தெரியேன் எனக்கே.. 1
அன்னை அனையாய் அன்பை தருவாய்
என்னை முழுதாய் எழுத்துள் நிறுத்தி
உன்னை தெளிவாய் உணரக் கொடுக்கும்
என்னே கருணை எளியன் மொழியேன் 2
முன்னை பிறவி முனிந்த பலவும்
பின்னை பிறப்பும் பிறவும் அறுத்து
நன்னை கொடுத்து நலனில் செலுத்த
உன்னை விடவும் உடனார் உளரே. 3
வன்மை வளர்த்தே வடிவை திருத்த
தன்மை வளர்த்தே தகைமை கொடுக்க
இன்மை இலதாய் இயல்பை வழங்க
உன்னை பணிந்தே உரிய செய்க. 4
ஆறாம் நெறிகள் அறிவாய் அருளி
ஆறா ரணங்கள் அகல விலகி
ஆறாம் நிலையை அடையத் துணையாய்
ஆறாய் பிறந்த அறுவே வரவே.5
சீராய் பயில்வேன் சிறப்பாய் பகர்வேன்
சீராய் சிகரம் சிறப்பாய் அமர்ந்த
சீராய் அலையும் சிலிர்க்க பணியும்
சீராய் உனையே சரணே குகனே. 6
வேறா குமெனை வளமே குமரா
மாறா இளையோய் மரணம் தனிலே
மாறா நிலையில் மயங்கி இருக்க
வேறார் உதவ வருவார் குருவே.. 7
பாராய் எனையும் பரிவில் நிலையோ
பாராய் எனக்கும் பிறிதார் உளரோ
பாராய் எனையும் பிடியாய் கொடுத்தேன்
பாராய் பரந்த பதிநீ எனவே..8
யாதாய் இருந்தும் யவனப் பெரியோய்
நாதா உனைதான் நினைவில் இருத்தி
போதா முறைக்கே பகர்வேன் முருகா
வேதா விளங்க விவரித் தவனே. 9
மாதர் விழியில் மயங்கா தெனையே
பூதர் பழியில் படியா தெனையே
சேத மிலதாய் செழிவாய் வளர்த்தாய்
ஏது மறியேன் எனையாள் வடிவே.10
பேதங் கருதா பழனிப் பதியே
பாத மதனை பதியப் பதியே
நாத மதனின் நிகரில் பதியே
மேதப் பொருளே முருகப் பதியே11
ஆதிப் பொருளை அறிய பகர்வாய்
மீதிப் பொருளை மிளிரப் பகர்வாய்
நீதிப் பொருளை நினைவிற் பதிய
சேதிப் பொருளாய் செவியில் மொழிவாய். 12
கந்தா கடம்பா கதிர்வேல் கதம்பே
எந்தா எதிர்க்கும் எதையும் எதிர்க்கும்
செந்தில் உருவாய் செகத்தின் பதியே
அந்தம் வருகில் அடியேன் துணையே.. 13
வண்டாய் வருமென் வருகைக் குவந்து
செண்டாய் திரிந்து செயலை புரிந்து
அண்டுந் துயரை அறியா தெனையே
வெண்பா வெனவே வளர்த்தாய் குருவே. 14
சேவல் கொடியாய் சகத்தி லமர்த்தி
ஏவல் புரியும் எளியார் துயரை
தூவல் முகிலாய் துடைக்கும் எழிலோய்
நாவல் தமிழர் நிறைந்த உறவே.. 15
என்ன புகழ்வேன் எதைத்தான் புகழ்வேன்
சின்ன துகளும் சிவத்தை பெறவே
சொன்ன பொருளை சொரூப வடிவை
என்ன புகழ்வேன் எதுவும் அறியேன். 16
ஆடும் மயிலும் அணிகொள் வடிவேல்
தேடும் அடியர் தொலையும் கவலை
நாடும் அடியர் நிகரில் புகழை
நாட புரியும் நிதமும் நலமே. 17
வெல்வேல் அகிலம் வெல்வேள் கரத்து
காெல்வேல் அவுணர் கொல்வேள் தமிழின்
சொல்வேல் எனையாட் கொள்வேள் அடியார்
நல்வேல் தனையே கொள்வேள் கதிரே..18
வேண்டும் எதுவும் வேண்டா நிலையை
வேண்டிப் பணிந்தேன் வேலா உனையே
வேண்டும் வரங்கள் வேண்டத் தருவோய்
வேண்டும் முதலே வேண்டா அகற்று. 19
கூடும் வினைகள் கூடா வினைகள்
தேடும் வினையும் தேவை யிலதாய்
ஆடும் மனதை ஆட்டிப் படைப்பாய்
ஓடும் வினைகள் ஓய வருவாய்.. 20
மண்ணில் உயர்வாய் மலைமேல் அமர்ந்தாய்
எண்ணில் உயர்வாய் எதிலும் நிறைந்தாய்
கண்ணீர் பெருகி கழலை பிடித்தேன்
வண்ண மயிலில் வருகும் குகனை. 21.
إرسال تعليق