கொரோனாவுக்கு உம்மா

கிடைக்காத நேரம் கொடுத்தாயே நீயும்
கடைமூடி உன்னால் களித்தோரும் உள்ளர்
அடைக்கின்ற போதும் அடங்காத அன்பால்
பிடிக்கின்ற உன்னை பெருங்காதல் தன்னை..

அணைக்கின்ற அன்பு அமைந்தாலும் கூட
பிணைகஞ்சி உன்னை பிரிகின்றேன் கண்ணே
கணைபோல மூக்கில் கலக்கின்ற உன்னால்
சுணைபோட்டு தானே சுவரெல்லாம் வெள்ளை

சிவப்பான தேகம் செழிப்பான தீரம்
உவப்பான மூச்சில் உறைகின்ற காதல்
கவசத்தில் எம்மை கடுங்காவல் வைத்து
திவசத்தில் இருந்து தடுத்தாயே நீயும்..

மாசெல்லாம் நீக்கி மாகத்தை மாற்றி
ஓசோனின் ஓட்டை ஒருவாறு மாற்றி.
காசாகி கொள்ளை கபடங்கள் கூட
பேசாத நியூஸை பரப்பிட செய்தாய்.

அன்பே கரோனா அருகில் வராது
என்மேல் பிரியம் எத்தனை கொண்டாயோ
உன்மேல் பிரியம் உலகளவு கொண்டேன்
ஊமத்தகாய்க்கும் மஞ்சளுக்கும் ஊடாதே கண்ணே

சேனிடைசரும் மாஸ்கெல்லாம் ஆயுதமானது உன்னாலே
சீனதேசத்து செவ்வழகே சிஸ்டம்மாற்றும் சாப்ட்வேரே
கானமெல்லாம் காத்திட்டு காட்டுயிரை வளர்த்தாயே
சாணமெல்லாம் தூவியதை சாபமென எண்ணாதே.

இயற்கையின் இளையவளே கூட்டங்கள் பிடிக்கலயோ
செயற்கையின் தனிமையினை சுகிக்கும்படி செய்தவளே..
புயலுக்கும் நீசிறிது புவியோர்க்கு பயம்பெரிது.
அயல்நாட்டு அருட்கொடையே அகிலத்தின் புதுப்படையே.

வாரியணைக்க ஆசைதான் வாய்முத்தம் ஆசைதான்
காரிதுப்பும் வீணரெல்லாம் காணாமல் போனதர்க்கு
தேரிழுக்க விருப்பம்தான் தெய்வமாக்கி விடுவார்கள்.
ஊரடங்க ஒருகிருமி உலவல் போதுமெனக்காட்டினாய்.

ஊரடங்கு காலத்தில் உருப்படியாய் செய்தவர்தாம்
ஊரறிய ஈந்திடுவார் உனக்கொரு உம்மா..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم