முன்னஞ்செய் பாவங்கள் முற்றும் அழித்துநீ
என்னைப் புதியதாய் செய்வாய் முருகாசெம்
பொன்னை நிகர்த்த பதமிரண் டில்நானும்
என்னை கொடுத்தேன் எனதியல் பெல்லாந்தூள்
செய்தே மனதினில் செவ்வேல் நிறுத்துவாயா
எய்தே மலையினை ஈறாய் பிளந்ததுபோல்
கொய்தே மனதினை கொற்றத்தாற் சீர்படுத்தி
வெய்யோய் தவறினை வேலதில் சுட்டொரு
தூய அறத்தினை தூவி யருட்புரிந்
தாய அறிவினை தாழ்ந்து தயைபுரி
நேய நெறியினை நெஞ்சில் நிறைத்துநீ
தேய வடிவினில் தெய்வமாய் நின்றிடு
காலன் திருக்கரம் கவ்வி செலுமுன்னே
ஞாலத் தருள்பவன் ஞானப் பழமுந்தன்
காலை பிடித்திட்டேன் காத்து அருள்புரி
வேலை பிடித்திட்டேன் வேண்டும் வரங்கொடு
மாறன் கணையது மார்பில் தொடாவண்ணம்
மாறன் உனதருள் மாய வலைதரும்
தூறுங் கருணையாற் தூய நிலைதரும்
மாறும் உலகிலே மாறா குமரனே.
நீரும் மணலும் நெருப்பும் வளிவெளி
சேரும் உடலது சேவற் கொடியோனே
தீரும் தருணத்தில் தீதின்றி தாளது
சேரும் வழியினை செல்வக் குமரனே
காட்டி துணையிரு காட்டில் பயமிலை
நாட்டில் மனிதரால் நாளும் நலமிலை
ஏட்டில் வரைந்திடா ஏரகச் செல்வனே
பாட்டில் படர்ந்திடும் பாவலர்ச் செம்மலே
கூட்டி உடல்வைத்தாய் கூற்றை எதிர்வைத்தாய்
நீட்டி அருள்செய்வாய் நீட்சி நிறையும்முன்
தீட்டி விதிசெய்தாய் தீவினையாற் சென்றதினால்
வாட்டி வதைக்கிறதே வந்தெனை காத்தருள்வாய்
மூட்டி எரித்தகனல் முக்கண்ணில் வந்தகனல்
ஈட்டி எரிந்தகனல் ஈறாய் பிளந்தகனல்
பூட்டிப் புதைக்கும்முன் பூதியனே பேரருள்வாய்
விட்டுப் பிரியேன் விடுதலை வேண்டிலேன்
பட்டுத் தவிக்க பழகிலேன் பிள்ளைநான்
எட்டி நடக்க எதிர்வினை கோடியா?.
கட்டி பிடித்திட்டேன் கந்தாவுன் காலடியை.
முற்றும் அறியேன் முழுதும் அறிகிலேன்
சிற்றும் அறியேன் சிறுவினை செய்திலேன்
கற்றுத் தெளியேன் கவிதைகள் செய்கிலேன்முற்றும் கொடுத்தாய் முருகா உனதருள்
அற்றுப் பறந்ததே அத்தனை பற்றுகள்நம்
எல்லோர்க்கும் வேலன் துணை..
إرسال تعليق