முந்தைய கட்டுரையை படித்த மூத்த நண்பர் திரு. சங்கரலிங்கம் (முன்னாள் இடைநிலை ஆசிரியர்,) ஆமாடா தம்பி மகிழ்ச்சிங்கிறது நாமா உருவாக்கிக்கனும்டா அத மத்தவங்க கிட்ட தேடித்தேடியே வாழ்க்கை ஓடிப்போச்சி.. இதுல நாம தேடிய இடத்துல கிடைக்கலனா ஏமாற்றம் ரொம்ப வலிக்கும்டா…
இந்த 67 வயசுலயும் எனக்கிட்ட படிச்ச பசங்கள்ள பலர எனக்கு அடையாளம் தெரியும் ஆனா அவங்க என்கிட்ட வந்து ஐயானு பேசுவாங்களான்னு ஆசையா எதிர்பாப்பேன். அப்ப அவன் நம்மல தெரியாத மாதிரி போகும் போது வர ஏமாற்றம் ரொம்ப கோபமும் வலியும் வரும்டா..
ஆமாம் ஐயா . எனக்கும் இதுமாதிரி நிகழ்வு எல்லாம் உண்டு ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடைபட்ட இடத்துல இருக்குறதுல இது பெரிய சங்கடம்..
ஆமாம் தம்பி நீ சொல்லு இதுக்கு என்ன வழி சொல்லுவ , நாம உருவாக்கின மகிழ்ச்சிக்கூட இதனால கெட்டு போயிடும் இல்ல. சரி போன கட்டுரை மாதிரி இதுக்கும் பதில் சொல்லு.. நான் மகிழ்ச்சியா இருக்கும் போது வெளியில இருந்து நான் துன்பப்படுற மாதிரியான விசயம் வந்தா என் மகிழ்ச்சி கெட்டு போகுது . இப்ப என்ன பண்ணலாம்…
சொல்றேன் ஐயா இருங்க ரெண்டு வடை எடுத்துக்குறேன்..
ம் நமக்கு வெளிய இருந்து வர விசயம் ரெண்டு விதமா பிரிக்கலாம்.
தகவல் - அது நம்மோடு சம்பந்தமில்லாதது
செயல் - அது நம்மோடு சம்பந்தப்பட்டது..
தகவல்ங்கிறது ஒரு செய்தியா எங்கயோ நடந்தத சொல்றது . செயல் நம்ம உறவுல நட்புல ஒருத்தர் செஞ்சதால வரது..
இதுல தகவல் ல வர துன்பத்த நாம கடந்துடலாம்.. உதாரணமா வர வழியில நடந்த விபத்து நம் மனச பாதிச்சாலும் அத கடந்து வந்துடுவோம்.. பெருசா நம்ம மகிழ்ச்சிக்கு பாதிப்பு இருக்காது..
ஆனா செயல்ல வர துன்பம் நம்பல பாதிக்கும் நிறைய வலிக்கும் கடக்க முடியாது.. உதாரணமா நம்ம உறவுக்காரர் நம்மள எடுத்தெரிஞ்சி பேசிடுறாருன்னா நம்மளால வருடங்களானாலும் கடக்க முடியாது..
இதுல பாதிப்ப குறைக்கலாம். அதுக்கு ஒருவழி இருக்கு..
ஆன்மீகத்துல ஒரு வியாக்யானம் உண்டு அதாவது உயிருக்குள்ள பரமாத்மா சாட்சி மார்த்தமா..
இல்ல அது வேண்டாம் ரொம்ப பக்தி குழப்பமாகும்..ம்.. ம்… அந்நியன் படம் பார்த்துருப்பீங்க.. அதுல ஒரே ஆளுக்குள்ள ரெண்டு மனிதர்கள் மாதிரி ஒரு பிரச்சனை இருக்கும் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்.. அதுபோல நாமளே நமக்குள்ள ஒரு பர்சனலிட்டிய உருவாக்கனும்..
புரியலயே தம்பி..
ஐயா . இப்ப உங்களுக்கு பேஸ்புக்ல ஒரு கணக்கு இருக்கு பேங்க்ல ஒரு கணக்கு இருக்கு . ரெண்டும் ஒன்னா?. இல்லதான..ஆனா அந்த ரெண்டுலயும் இருக்குறது நீங்க தான.. பேங்க்குக்கு உங்க பேஸ்புக் கணக்கு தேவைபடுறதில்ல. பேஸ்புக்குக்கும் உங்க பேங்க் கணக்கு தேவைபடுறதில்ல.. ஆனா இங்க நீங்க தனித்தனி ரெண்டு நபரா இருக்க முடியுது இல்லயா.. சரி இன்னும் சுருக்கமா சொல்றேன்..
இப்ப முகநூல்ல போலி கணக்கு இருக்கு அதுல பாக்கலாம்.. ஒரு பையன் பொண்ணு மாதிரி ஒரு கணக்குல நுழையுறான். அந்த கணக்குக்குள்ள அவன் செய்வது எல்லாம் ஒரு பொண்ணாவே இருக்கும். அதுல எந்த சிக்கல் வந்தாலும் அந்த கணக்குல இருக்குற போலியான ஒரு பெண்ணுக்கு தானே தவிர அந்த பையனுக்கு கிடையாதில்ல..
ஆமா அதுக்கென்ன?.
அப்படிதான் நமக்குள்ள ஒரு போலியான இல்ல ஒரு நகலான ஒரு பர்சனாலிட்டிய உருவாக்கனும் . இப்ப இதுதான் நான்..
பவித்ரனுக்குள்ள ரெண்டு பவித்ரன் இருப்பாங்க (பேய் எல்லாம் இல்ல ) இவங்கள ஒரே ஆளா இல்லாம ரெண்டு பேரா வெச்சிக்கலாம்.. உள்ள இருக்குறது பவித்ரன். வெளிய இருக்கிறது சம்திங் சும்மா சுரேஷ்னு வெச்சிக்குவோமே.. இந்த சுரேஷ் தான் வெளியுலகத்தோட சம்பந்த பட்டுருப்பான். இவன் வழியாதான் எந்த விசயமும் பவித்ரனுக்கு போகனும் அப்ப பவித்ரன் தான் உருவாக்கின மகிழ்ச்சிலயேதான் இருப்பான் வெளிய இருந்து வர துன்பம் எல்லாம் சுரேஷ் ஓடவே நின்னுடும்..
புரியிற மாதிரி தெளிவா சொல்லு..
சரி இப்ப கேளுங்க நான் ஒருத்தன் எனக்குள்ள ஒரு அந்நியன்.. இப்ப உங்க எல்லார்கிட்டயும் என் அந்நியன் தான் பேசுவான் விளையாடுவான் . ஆனா மாற்றான் சூரியா மாதிரி அந்நியன் ஓடுற பக்கம் எல்லாம் பவித்ரனும் ஒட்டிக்கிட்டே ஓடிவருவான்.. ஆனா நடக்குறதுல எல்லாம் பவித்ரன் கலந்துக்க மாட்டான் . அந்நியன் மூலமா தேவையானத தெரிஞ்சுக்குவான். ஆக பவித்ரனுக்கு நடக்குற எல்லாமே அந்நியன் தர செய்திகள் தான் அதனால பவித்ரனோட மகிழ்ச்சிய அந்நியன தவிர யாராலையும் எதுவும் செய்ய முடியாது.. இப்ப இந்த பவித்ரன் அந்நியன கேடயமா வெச்சி அவன் நகர்வான்..
ஓ . புதுகதையா இருக்கு இப்ப நான் என்ன பண்ணனும்ங்கிற..
சங்கரலிங்கத்துக்குள்ள ஒரு அந்நியன உருவாக்குங்க அவன் முதுக்கு பின்னாடி சங்கரலிங்கம் பாதுகாப்பா மகிழ்ச்சியா இருக்கலாம். இந்த அந்நியன் நம்ம மகிழச்சிக்கு கேடயமா இருந்து வெளிய இருந்து வர துன்பத்துக்கு அவனே சமாளிச்சுப்பான்.. அப்ப நாம எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கலாம்..
நல்லாயிருக்குடா.. இந்த ஐடியா இத எங்க இருந்து எடுத்த?..
முதல்ல சொன்னனே ஆன்மீகம் அதுல தான். ஒரே கடவுள் சிவனாவும் விஷ்ணுவாவும் அல்லாவாவும் கர்த்தராவும் இருக்க முடியுதுன்னா அவர் அத்தனை கேடயம் வெச்சிருக்காருன்னா. நம்மாள ஒரு கேடயம் உருவாக்க முடியாதா? என்ன?
சரி இத எப்ப எழுதப் போற? தம்பி..
கொஞ்ச நாள் போகட்டும் ஐயா ரெண்டு தொடர்கதை இருக்கு..
இல்லடா தம்பி கதைய விட இதுதான் முக்கியம் பல பேருக்கு உதவும் இது முதல்ல எழுதிடு..
------------------------------------------------------------
எழுதிட்டேன் ஐயா.. உங்கள் ஆன்மா சாந்தியடைட்டு்ம்.. ( 9/8/2020 - அவர் இவ்வுலகத்தை விட்டு பிரிந்துவிட்டார்).. இத்தனைக்கும் பின்ன இவர்கூட ஒரு செல்பிக்கூட எடுக்கலங்கிறது தான் வருத்தமே.. ஆனா எனக்கு அவர் நினைவிருக்கு செல்பி தேவைபடல.. பலமுறை கேட்டார் ஒருவேளை வயசாகி மறந்துட்டேன்னா இந்த போட்டாவ காட்டுவ இல்ல அதுக்காகவாவது எடுத்துக்கலாம்னு. ஒரு வீம்பு கொள்கையால இழந்துட்டேன்..
إرسال تعليق