கேட்டவர் - உமா மகேஸ்வரி
பாரதம் பலவகையில் நிறைய கிளைக்கதைகள் வர இடம் தந்துள்ளது சரியாக கதையை கோர்க்கத் தெரிந்த யாரும் புதிதாய் கோர்க்கலாம்.. அதற்கான இடங்கள் புராணம் முழுதும் உள்ளது.. அந்த வகையில் நானும் ஒரு கிளைக்கதையை தங்கள் வேண்டுதல் பேரில் உள்நுழைக்கின்றேன்..
பாண்டவர்கள் சூது விளையாட்டில் தோற்று காட்டிற்கு வந்திருந்த பிறகு பல நாட்கள் கழிந்தன . ஒருநாள் பாண்டவர்கள் இருந்த காட்டிற்கு கிருஷ்ணர் வந்து கொண்டிருந்தார்.. வழியில் பிதாமகர் பீஷ்மரை கண்ட கிருஷ்ணர் வணங்கினார்.. பதிலுக்கு பீஷ்மரும் வணங்கினார்..
பீஷ்மரின் முகத்தில் படிந்திருந்த துயர ரேகைகளை கண்ணுற்றதும் வந்த காரியத்தை விசாரித்தார் கிருஷ்ணர்.. பீஷ்மர் மனதின் துக்கத்தை நீண்ட பெருமூச்சாய் மாற்றிவிட்டிருந்தார்.. பெரியவர்கள் செய்யும் காரியங்களில் இதுவும் ஒன்று.. இருந்தும் அவரது மனக்கிலேசம் மட்டும் அடங்கியதாய் இல்லை. பிதாமகர் நிலைமையை வைத்து ஓரளவு கிருஷ்ணர் ஊகித்திருந்தாலும் அவர் வார்த்தையின் வழியாக வெளிவர காத்திருந்தார்.. அப்போதுதான் வந்த விதுரரும் கிருஷ்ணரை கண்டு பணிவாக வணங்கினார்.. கிருஷ்ணரும் விதுரரை கண்டு மகிழ்வாக வணங்கினார்.. விதுரர் பிதாமகரை கண்டு முகத்தை சோகையாக அசைத்தார்..
இதைக் கண்டதும் கண்ணன் தன் ஊகத்தை உறுதிசெய்து கொண்டான்..
ஆம், கங்கை மைந்தரே தாம் இந்த கானகத்தில் வந்ததன் நோக்கம் பற்றி தாம் இன்னும் பதிலுரைக்கவே இல்லையே ; என்றான் விசமத்துடன்..
கண்ணா தாம் அறியாதது ஏதுமில்லை , அன்று அரசவையில் நடந்த சம்பவங்களுக்கு பின் பாண்டுவின் மைந்தர்கள் வனவாசம் வந்துவிட்டனர்.. அவர்கள் சிரமப்படக்கூடாது என்று பிதாமகர் அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு தரவே வந்தோம் . என்றார் விதுரர்..
எனினும் விதுரரே இந்த உலகில் இயல்பிலேயே யாரும் துன்பம் கொள்வதில்லை . அவரவர் தேவையும் ஆசையுமே அந்த துன்பத்தை பிறப்பிக்கிறது. இதனை அறிந்தால் நம் ஆசைகளை அடக்கி அநேக துன்பங்களில் இருந்து விடுபடலாம் , என்று வாடிக்கையான தன் பாணியை தொடங்கினான்..
ஆம் வாசுதேவரே தாம் கூறும் வார்த்தைகள் சத்தியமான உண்மை என்று தன் மனஉணர்வை வெளிப்படுத்தினார் விதுரர்..
நான் எப்போதும் பொய்யுரைப்பதில்லை என்பதை அகிலம் நன்றாக அறியும் ; என்று கேலியாக சொன்னான் கண்ணன் . ஆம், தாம் மேற்படி நடந்தவற்றை சொல்லுங்கள்.
பிதாமகர் பாசத்தோடு கொண்டு தந்தாலும் பாண்டவரில் மூத்தவனான தருமனோ அது முறையன்று என்று ஏற்க மறுத்துவிட்டான்.. தாம் சுயமாக வாழவே தம் விருப்பம் என்றும் உரைத்தான்.. அதன்பின் நாங்கள் திரும்பும் வேளையில் தங்களை சந்தித்தோம்.. என்று விதுரர் முடிக்க..
உத்தமம் விதுரரே , எனினும் இந்த சிறு உபாகாரத்திற்காக பிதாமகரே நேரில் வந்திருப்பது ஆச்சரியம் தான். என்று கண்ணன் உரைத்த ஒலியடங்கும் முன்.
அதுமட்டுமல்ல யாதவர் குலத் தலைவரே. நான் பாண்டுவின் மகன் சகாதேவனிடம் சில சாத்திர விளக்கங்களை கேட்டறிய வந்திருந்தேன்.. என்றார் பீஷ்மர்..
இதை கேட்டவுடன் விழித்துக் கொண்ட கண்ணன் மந்திரி விதுரரே தாம் முன்னே பயணக்கலாம் நான் பிதாமகருடன் சற்று தனிமையில் உரையாட விழைகிறேன்.. என்றான்..
நல்லது மாதவா நான் முன்னே செல்கிறேன்.. என்று விதுரர் விடைபெற்றதும்..
அன்பு கங்கை மைந்தரே தாங்கள் முகத்தில் கொண்டுள்ள துக்கத்திற்கும் தாங்கள் சகாதேவனிடம் அறிந்த சாத்திரங்களுக்கும் உள்ளர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.
ஆம் மதுசூதரே , சகாதேவன் இனி வரப்போகும் விடயங்களை விளக்கமாக சொன்னான்.. அந்த துக்கம் தான் என் மனதை வாட்டுகிறது..
ஞானிகளும் எப்போதும் பின்வரும் காலத்தை நன்கு அறிவர் பிதாமகரே , தர்மம் நிலைபெற இந்த நிகழ்வுகள் அவசியம் நிகழத்தான் வேண்டும்..
ஆனால் சகாதேவன் என்னிடம் ஓர் உதவியை வேண்டினான்.. நான் எனது குருநாதரை சந்திக்க வேண்டி பணிந்தான்..
ஓ என்ன காரியமாக தாங்கள் சந்திக்குமாறு அவன் வேண்டுகிறான்.
மதுசூதனா தாம் அறியாதது போல் வினவுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. எதிர்காலத்தில் குந்தியின் மகனான கர்ணன் எனது குருநாதர் பரசுராமரிடம் வித்தை கற்க செல்வான் அப்போது அவனை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கவே என்னை வேண்டினான்.. அதனால் பல நன்மைகள் நிகழும்..
ஆனால் பிதாமகரே தாம் எனக்கொரு வாக்கினை நல்க வேண்டும் .
நான் தமக்கு வாக்களிப்பதா? என் புண்ணியம் அதுவாகிடும் வாசுதேவரே..
ஆம் கர்ணனின் விசயத்தில் தாம் எந்த விதத்திலும் தலையிடக் கூடாது . மேலும் அவன் யார் என்பதும் யாருக்கும் தெரியக்கூடாது.. இந்த வாக்கை தாம் எனக்கு வழங்க வேண்டும் என்றான் கண்ணன்..
ஆனால் கண்ணா கர்ணனை தடுத்தால் யுத்தமே இல்லாது போகும் அல்லவா. எண்ணற்ற உயிர்கள் ரட்சிக்கப்படும் அல்லவா..
ஆம் கர்ணன் பலமிழந்தால் இந்த யுத்தம் நிகழாமல் போகும் வாய்ப்பு உண்டு ஆனால் தர்மம் நிலைபெறும் வாய்ப்பில்லாமல் போகும். அன்று தாம் செய்த ஒரு தவற்றை இன்று இத்தனை உயிர்கொடுத்து சரி செய்கிறோம்.. மேலும் கர்ணனின் முடிவும் இங்கு அவசியமே.
ஆகட்டும் கண்ணா என்னுயிர் உள்ளவரை இவ்வுண்மையை உரைக்க மாட்டேன் . ஆனால் நான் உள்ளவரை கர்ணனை யுத்திற்கு நுழையாமல் தடுப்பேன்..
அது உங்கள் விருப்பம் என்றால் அப்படியே ஆகட்டும் பிதாமகரே எனக்கும் அதிலொரு லாபம் உண்டு என்று விசமமாக சொல்லி.சென்றான் கண்ணன்..
إرسال تعليق