பெங்கிவரும் அன்பர்கள் கங்கையென பொங்கிவர கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - பக்தர்கள் அன்போடு காவடியும் காணிக்கையும் பலவும் கொண்டு கூட்டம் கூட்டமாக கந்தனை கந்தா கந்தா என்று கொண்டாட.
அங்கமது தங்கமென அங்கமது மின்னுகிற கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - அங்கம் கைகால் போன்ற உடலுறுப்புகள் தங்கம் போலவும் . தங்கமது அங்கம் போலவும் மின்னுகின்ற கந்தனை கந்தாவென கொண்டாட..
வந்தவினை அந்துபட வந்துதவும் செந்தழலாம் கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - விதியால் வரும் தீய வினைகள் துண்டுதுண்டாய் போகும்டி வந்து உதவும் நெருப்பாம் கந்தனை கந்தாவென கொண்டாட
சங்குபிறை பொங்குநதி தங்குசிகை கொண்டவரும் கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - சங்கு போன்ற நிலவின் பிறையும் கங்கை நதியும் தங்கும் தலையை கொண்டவருமான சிவனும் கந்தமிது கந்தனெனக் கொண்டாட..
முந்துபிணி வெந்துவிட முந்திவரும் பந்தமது கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - முந்தி வேகமான வரும் நோய்களை வெந்துவிடும் படி நெருப்பாய் முந்தி வரும் பந்தமாக கந்தனை கந்தாவென பக்தர்கள் கொண்டாடிவே.
அந்தகனும் பந்தமற விந்தமது விந்திவரும் கந்தமது கந்தமென - கொண்டாட..
பொருள் - அந்தகனான எமனும் பந்தங்கள் அறுபட விந்தையானது விரைந்து வருகின்ற கந்தனை கந்தனென கொண்டாட.
செந்தமிழும் சந்தமொடு செஞ்சுருதி மந்திரமாய் கந்தமது கந்தமென - நின்றாட.
பொருள் - செழுமைமிக்க தமிழும் சந்தமோடு செம்மையான சுருதியில் மந்திரமாய் கந்தன் நின்று ஆட.
உந்திவரும் உந்திதலை நந்தியவரும் சங்கமித்த கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - உந்தி (வயிற்றில்) வரும் பிரம்மனும் வயிற்றின் தலைவரான திருமாலும் நந்தியான சிவனும் ஒன்றாய் சங்கமித்த கந்தமிது என அன்பர்கள் கந்தனை கொண்டாட.
வெஞ்சினத்து செங்குருதி பொங்குநிலம் செஞ்சமரில் கந்தமிது கந்தமென - வென்றாட.
பொருள் - கடும் கோபத்தில் சிவப்பு ரத்தம் பொங்கிய நிலமது சிவந்த போர்களத்தில் கந்தம் இது கந்தனென வென்று ஆட..
வந்ததுவும் வென்றதுவும் கொன்றதுவும் கண்டிலர் கந்தமிது கந்தமென -புகழ்பாட.
பொருள் - வந்ததுவும் வென்றதுவும் கொன்றததுவும் எவரும் காணவில்லை . அவ்வாறு காணாதவர்கள் ஆவலால் கந்தா கந்தா என புகழ் பாட.
மந்தியொடு மாந்தியவர் காந்துபட வெந்தழலின் கந்தமிது கந்தமென - இசைபாட..
பொருள் - அனுமனொடு சனியும் வெம்மைபட வெந்த தழலின்(சிவனின்) கந்து இது கந்தனென இசைபாட
சங்குகரன் சங்கரனும் மங்கையவள் மங்குவொளி கந்தமிது கந்தமென - கொண்டாட
பொருள் - திருமாலும் சிவனும் சக்தியும் மங்கும்படி ஔிவீசும் கந்தன் என கொண்டாட
பஞ்சுபுனை இஞ்சியிடை வஞ்சியவள் நெஞ்சமதில் கந்தமிது கந்தமென - நின்றாட
பொருள் - பஞ்சினால் செய்த இஞ்சி போன்ற இடை உள்ள வஞ்சி அவள் நெஞ்சத்துள் நின்றாடும் கந்தனை.
நஞ்சுகுடி நஞ்சனவன் செஞ்செவியில் கொஞ்சுதமிழ் கந்தமிது கந்தமென - நின்றேக.
பொருள் - நஞ்சை குடித்த நஞ்சன் அவன் சிவந்த செவியில் கொஞ்சு தமிழில் கந்தன் கந்தமென - நின்று ஏக
அஞ்சலிலை அஞ்சலிலை அஞ்சுவது எஞ்சவிலை கந்தமது கந்தமென - கண்டேனே..
பொருள் - அச்சமில்லை அச்சமில்லை அஞ்சுவது மிச்சமில்லை கந்தமது கந்தம் என கண்டேனே.
إرسال تعليق