இருபுறமும் மரங்கள் வளர்ந்த சாலையினில ஊர்விட்டு வெளிவந்த ஒரு வழிப்போக்கன் சில தூரம் நடந்து கொண்டிருந்தான். அங்கே மரத்தடியில் சமதளமான தரையில் ஒரு ஜென் துறவி அமர்ந்திருப்பதை கண்டார்..
அந்த துறவியை நெருங்கியவர் அவர் முகத்தில் ஔிரும் தேஜஸை கண்டு மனம் மகிழ்ந்தார். அந்த முகத்தில் தோன்றும் ஆனந்தம் தான் வழிப்போக்கன் முகத்தில் புன்னகையை பிரசவித்தது.
வழிப்போக்கனும் தான் சொந்த ஊரிலிருந்து சில மைல் தூரத்திலிருக்கும் ஒரு இடத்தில் தான் ஜென் துறவிகள் இருப்பதாக கேள்விப்பட்டு அவர்களை சந்தித்து வாழ்விலிருந்து விடுதலைப் பெறவே எண்ணி பயணத்தை தொடங்கினான். அவன் பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தான் ஒரு துறவியை சந்தித்ததில் ஆனந்தம் அவனுக்கு.
அந்த ஆர்வத்தினாலேயே அந்த துறவி இவனுக்கு சாத்யாத் பரபிரம்மமாகவே தெரிந்தார். ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுள் பொங்க அதை கோர்க்கும் வார்த்தைகளுக்குத் தான் வாய் உதவவில்லை.. எதை எதையோ கேட்க நினைத்தவன்.
சுவாமி நீங்கள் எத்தனை பெரிய ஞானி நீங்கள் இப்படி மரத்தடியில் வெறும் தரையில் அமர்ந்திருக்கிறீர்களே?. என்று அற்ப கேள்வியை முன்வைத்தான்.
அவனது மனக்கவலைகள் சந்தேகங்கள் எல்லாம் பார்வையிலேயே படித்துவிட்ட துறவி அனைத்திற்குமாய் "தரையில் இருப்பவன் விழுவதில்லை" என்று சூசகமாக பதிலளித்தார்..
எனக்கு இது புரியலங்களே?. எனக்கேட்டான் அவன்.
மலை உச்சியில் இருப்பவன் கீழே பள்ளத்தை பார்த்தால் பயம் தோன்றும் . அதுவே பள்ளத்திலிருப்பவன் சிகரத்தை பார்த்தால் வியப்புதான் தோன்றும். சமதளத்தில் இருப்பவனுக்குத்தான் பள்ளத்தில் பயமும் இருக்காது உயரத்தின் வியப்பும் இருக்காது. அதுபோலத்தான் வாழ்க்கையும் இன்பங்களை மலையாகவும் துன்பங்களை பள்ளமாகவும் காண்கிறாய் உண்மையில் மனதை சமதளமான தரையில் அமர்த்திப் பார் . இங்கே மலைகளும் இல்லை பள்ளங்களும் இல்லை என்ற புரிதல் கிடைக்கும். என்று விளக்கமளித்தார் அந்த துறவி.
தான் தேடிவந்த சந்தேகத்தை வெறும் சாதாரணக் கேள்வியின் பதிலாகவே சொல்லிவிட்ட துறவியை பணிந்து விட்டு. மீண்டும் தன் வாழ்க்கைக்கே சென்றான் அந்த வழிப்போக்கன்..
إرسال تعليق