சுந்தரரும் நானும் - கிரிவலப்பா

 

சுந்தரரும் நானும் - கிரிவலப்பா




முன்னுரை 


பக்தி இலக்கியங்கள் பிறப்பது அருகிவரும் வேளையில்... என் சிவனை யார்யாரோ களவாட முயலும் வேளையில்.. ஆதியோகி என தமி் தெரியாது என பிதற்றுவோர் மத்தியில்.. இதுவென் சிறு முயற்சி....  தனித்தியங்குதல் சரிவருமா யானும் அத்தனை பிரபலமல்ல.. ஆகவே நால்வரில் ஒருவராய் அமர்ந்திருந்தவரை.. துணைக்கழைத்து.. அவர் புகழை பயன்படுத்துகிறேன்.. மற்றபடி அவர் பெயரிலும் நானே எழுதுகிறேன்...சுந்தரரை தேர்ந்தெடுக்க காரணம்.. எனக்கு ஈசன் நண்பனாக வேண்டியதால்.. சுந்தரர் ஈசனின் நண்பர்.. நண்பரின் நண்பர் நண்பர் ஆகுமே..

இப்பா தொகுதி எதிலும்.. முற்றிலும் இலக்கணமோ ஓசையோ சார்ந்த மரபுப்பாக்கள் அமைந்திருக்காது... இது பக்தியின் ஊற்று... பெரியவர்கள் திருத்தலாம் ஏற்றுகொள்வேன்.. இலக்கணவிதியினை பின்பற்றும் அதில் சந்தேகமில்லை...

ஈசனையே உடனழைத்துக் கொண்டு கிரிவலம் செல்வதில் எத்தனை ஆனந்தமோ... அதனில் சிறுதுளி உமக்கும் தர முயல்கிறேனா ?.. சிந்தும் பாக்களிலன சிவனையே தருகிறேனா ? தெரியவில்லை .... அது உங்கள் மனத்திடம் விட்டுவிடுகிறேன்.. இங்கு நான் என்று குறிப்பிடக் காரணம் படிக்கும் உங்களுக்கு நீங்களாகவே நான் என்ற எண்ணம் வரவே




விநாயகர் :

மாத்து உறைத்த விநாயகா ஆலயமாய்
ஆத்தங் கரையமர்ந் ஆழ்கேள்வி ஞானமே
காத்து துணைவரு வாயென வேண்டி
பூத்த மலரிட்டு தாள்பணிந்தேன் அருள்வாயே.. #சுந்தரர்..

பார்த்திருப் பாய்சாட்சி பாரென விருப்பாயே
பேர்த்தெடுத்த தந்தத்தால் பேருளுள் பாரதத்தை
கோர்த்தெழுதி கொண்டுதந்தாய் வேழன் கணபதியே
வார்த்திடுவாய் வரியென நின்று... #நான்..

பரணி தீபம் :

பரமனே சோதியாய் பற்றுளோர்க் கருளாய்
பரணிதீபச் சோதியாய் நின்றே நடமாடும்
தரணியிற் சோதியாய் உயிராய் இருப்பாய்
அரணாய் அமைந்தாய் வரமளிப் போனே... #சுந்தரர்.

அரவ மணிந்தோனே அன்பர்க் கமுதே
புரம்மூன்று சுட்டோனே புண்ணியமே புயங்கனே
முரணி யோருக்கு முடிவென நிற்கும்
பரணிதீபச் சுடரே மரணித்தோருக் கரணே.. #நான்..

ராஜகோபுரத்தில் இருந்து தொடங்குதல். ...

எக்கணம் யானுமே ஏற்றம் புரிந்தேனோ
இக்கணம் யானுமே இக்கோ புரங்காண
தக்கதோர் நற்செயல் தர்ம மெதுவோ
மிக்கவே நல்கினன் மின்னுமேனி யனே.. #சுந்தரர் #விருத்தம்


அப்பா அரசே அருளுக்கு ராஜனே
செப்பனே நின்றன் செழுமேனி தன்னையே
ஒப்பெனக் காட்டுதே ஓங்குநற் கோபுரம்
முப்பெரும் போகமொடு முக்தி யருள்வதே.. #நான் #விருத்தம்.


நடையில்...

நற்றுணை யாகும் நமசிவாய வொதிநம்
பற்றினை வெட்டி பிறப்பினை அறுத்து
வெற்றியை வேண்டி வென்றவன் தாள்பணிய
நெற்றியில் சிந்துவான் நெறியுடை ஞானமே.. #சுந்தரர் #விருத்தம்

கற்றுனை கண்டாரோ கல்மனத் தன்பது
உற்றுனை கண்டெனது உளமது பொங்கிட
மற்றவை மாயமாய் மாய்ந்தது மாயனே
பொற்கழல் காட்டிப் பொழுதுய்ய வந்தாயே.. #நான் #விருத்தம் .


இந்திர லிங்கம்..

யாதிலும் நீயென யாவுமாய் நின்றிட
யாதிலும் இந்திரனாய் யாவிலும் வாழுமுன்
பாதியாய் தங்குநற் பார்ஓதி தன்னொடு
ஓதிய பாவினை ஓதக்கேளும் நாதனே.. #சுந்தரர் #விருத்தம்..

தேவனே நீயுமே தேகமாய் நிற்பதாய்
சேவகம் செய்யுமார் சோதியாய் வாழ்வதாய்
மேவதோர் இந்திரனாய் மேவுநல் லின்பத்து
ஆவதோர் ராசனே ஆண்டவா ஆதியே.. #நான் #விருத்தம்

நடை பயணத்தல்..:..

சட சடவென நடப்பாய் சடவுலகை நீங்கவே
படபட வெனவருவாய் பரமனைப் போற்றவே
கடகட வெனநடப்பாய் கனியுளம் பொங்கவே.
மடமட வெனவே மலரும்சொல் கவியுமே.. #சுந்தரர்..

வையத்தார் உயரவே வந்தோனை பாடவா
ஐயனின் அருளுரு ஐயினைக் காணவா
மையல் கொளும் முருகினை காணவா
தையலொரு பாகனில் ஐயமின்றி சேரவே.. #நான்..

அக்னி லிங்கம்...::::.. சுடரிலிங்கம் என்றும் சொல்வர்..

அண்ணலே அம்மையே அன்பா அமுதே
கண்ணிலே காண்கிறேன் கனிந்துளம் பூத்திட
எண்ணமே நிறைந்ததே எம்மையே இன்பமே
வண்ணப் பசியுன் னெழில்..#சுந்தரர்..

அக்னியே தீஞ்சுடரே அண்டம் பிரசவித்தாய்
அக்கடனாய் இன்றும் அரணாய் இருக்கிறாய்
முக்கண் ணுடையோனை மூலப் பொருளோனை
இக்கண்கள் கண்டென் இடுக்கண் ஒழிந்ததே..

நடையில்....

மாபெரு மாழியாய் மாயனுனை தேடிவரும்
மாபெரு கூட்டத்தே மையத்தில் யானுமோர்
துளியென கலந்தேன் துயரினி யில்லைநீர்
ஔியென உள்ளச் சுடர்.. #சுந்தரர்.. #வெண்பா

பஞ்சமா பூதனாய் பற்றியென் னுள்ளே
பஞ்சாட் சரனே பதமிட்டு ஆடிட
கொஞ்சுமா றென்னையும் கொன்றையோன் வளர்த்திட
அஞ்சுமே தீயவை அஞ்சேலென் றிடுவாயே... #நான் #கலிவிருத்தம்.

ஔியுயி ரென்றே ஔிர்ந்தாய் உமையாள்
ஔியுள் ளொளியாய் ஔிர்ந்திட பக்திக்
கொளியாய் வரும்பக்தர்க் குள்ளொளியாய்  உள்ளாய்
ஔிரும் பக்தரெல்லாம் ஒவ்வொரு தீபமே.. #சுந்தரர் #கலிவிருத்தம்.

உமையொரு பங்கில் உறைந்திட சொல்வேன்
உமையாள் மனத்தினள் உத்தமா உண்மை
உமையவள் உம்கருணை ஊற்றவ ளாதலால்
உமையாள் தனக்கே புகழ்.. #நான் #வெண்பா..

ஆறுமுக வேலர் சன்னதி...

நூறுபடை வீரரை கூறுபட செய்த
மாறுயிலா குமரனை ஆறுமுக வேலனை
நெற்றிக்கண் பற்றிட நெறித்து பெற்றனை
பற்றொடு நல்லிசைப் பாடு.. #சுந்தரர் #வெண்பா

சூரனை வென்றதேவ வீரனை வணங்கிட
தாரகனை வென்றவன் தம்பிசிங்க முகனை
வாரனைய தீயவுனரின் வாழ்வழித்த வேலனின்
சீரடை சீடனை பாடிபுகழ் பெறுவமே... #நான் #விருத்தம்..
வாரனைய - வார் - கடல் போன்ற..
சீரடை சீடனை... - பிரவணப் பொருளை சீடனாய் நின்று கேட்ட சிவனை..

எமலிங்கம் - ஏமலிங்கனின் மருவுப்பெயர். ஏமன் என்பதே எமன் என்றானதாம்... சொன்னாங்க..

ஆரமுதே அன்புடை மார்கண்டே யன்தனக்காய்
சீரடை வாழ்வருள் சீலனே எமனை
ஓரடி எத்தினாய் ஓதா மறையே
ஈரடிக் கண்டேன் எனக்கிலை ஏமமே.. #சுந்தரர் #கலிவிருத்தம்.

பேரருளே பெம்மானே பேரன்பிற் கன்பாளாய்
ஆரனே ஏமம் தனையுதைத் தஞ்சேல்
தாருமென் செம்மையே வெம்மையே உம்மையே
சேருமெனக்கு சேவடி தா.. #நான் #வெண்பா..

நடையில் ....

வஞ்சனை நீக்குமுனை வந்தனை செய்வேனே
துஞ்சுத லின்றியென் தோழனாய் வந்தனை
விஞ்சியொன் றில்லை விருத்தனுக் கீடென
மிஞ்சிய தென்னன்பே மின்னுமேனி யோனே.. #சுந்தரர் #கலிவிருத்தம்

காணலே கோடிபெரும் கண்டவர் கோடிபெரும்
ஆணலா தம்மையுறை ஆண்டவனை கண்டாலினி
காணலாமே கண்டு பெறலாமே ஞானமே
நாணலாது நித்தியம் நல்கிடு்ம் நாதனே. #நான் #கலிவிருத்தம்..

நாண் - கட்டு..

நிருதி லிங்கம் ...

அறுதியாதி யற்றவனை அரும்பரம் மூலனை
உறுதிபட யெண்ணத்தில் ஊன்றச் செய்தால்
குருதியின் னுள்ளே குடியிருந்து காப்பான்
நிருதியுரு லிங்கனை போற்று.. #சுந்தரர் #வெண்பா..

நிருதியென நின்றானை நித்தயனை சிந்தை
உருகிடச் செய்துளம் உவக்கச் செய்யும்
அருளுரு வானவனை அன்பினால் கட்ட
பொருளுயர் ஞானம் பொங்குமே  உள்ளத்தே.. #நான் #கலிவிருத்தம்…


மாணிக்கவாசகர் சன்னதி..

(சுந்தரரை நானெழுத வேண்டாம் என்று சொன்னேன்..  காரணம் சமதளத்தில் நால்வரும் ஈசனை பாடலாம் ஒருவரை ஒருவர் புகழ்வது ஏற்பல்ல என்றேன் ... அத நான் பாத்துக்குறேன் என் புலமையில உனக்கு சந்தேகமா ? என்றார் சுந்தரர் அவருக்கு என் மனக்காரணம் புரிந்திருக்கும் நண்பராயிற்றே)

ஆவலால் ஈசரை ஆசானாய் கொண்டழுது
தாவலால் நம்பிரான் தாளினை சேர்ந்திட்டாய்
ஆதலால் ஈசனே உம்மொழியை தானெழுத
காதலால் கண்ணீர்சிந் தும்வாசகம் வாழியே... #சுந்தரர் (விசமக்காரன்டா ) #விருத்தம்

ஆரனாய் சிந்தையில் ஆதியனை கொண்டாயே
சூரனாய் சிந்தையுருக் கும்வாசகம் தந்தாயே
தீரமிகு நெஞ்செலாம் தீக்குருகி தேன்சிந்தும்
ஈரமிகு வாசகர் வாதவூரார் வாழியே... #நான் #விருத்தம்

#ஆதி_அண்ணாமலையார் ...மாணிக்கவாசகர் சன்னதியிலிருந்து வலதுபுரத்தே உட்செல இருக்கும்.. ஆதிகால அண்ணாமலையார் கோயில்.. தற்போதைய அண்ணாமலையார் கோயிலுக்கு முன்னரிருந்து இருப்பது...

நன்னொளிச் சோதியாய் நின்றமலை தன்னின் கோயில்
அன்னொளிச் சின்னமாய் அருளுமிக் கோயில்
அண்ணாம லைக்கோயி லாதியாமே எம்பிரான்
அண்ணாம லையானின் வீடு.. #சுந்தரர் #வெண்பா



அண்டத்தின் ஆதியே அண்ணாம லைக்கருகே
அண்டத்தின் மூலமாய் அன்னையொடு வீற்றிருக்க
பண்டங்கள் வேண்டுமோ பட்சணங்கள் வேண்டுமோ
பிண்டத்தி னுய்வெல்லாம் பொங்கிடக் காண்பாயே.. #நான் #விருத்தம்..

நடையில்....

தித்திக்கு மீசா துணையென வந்தாயே
எத்திக்கு மொளிர எழுந்திங்கு வந்தாயே
சித்திக்கு இறைவா சிவபரனே வந்தாயே
முத்திக்கு முதல்வனே முக்கண்ணா வந்தாயே.. #சுந்தரர் #சந்தவிருத்தம்..

மூலமே முக்கண்ணா மூலவனே முன்னோனே...
ஆலமே உண்டதிரு ஆலங்கண்டங் கொண்டனே
மாலனே வணங்கும் மாண்புரை சோதியே
காலனை உதைத்த காளைவாக னத்தோனே. #நான் #விருத்தம்..

#சூரியலிங்கம்


சோதியனே நின்னரும் சோதிக் கிணையேது

ஆதியெனச் சொல்லிட ஆதவனை காட்டினாய்

நீதிக்கு நின்றாடும் நித்திலமே சொக்கனே

பாதிக்கு பெண்ணாகி பாவந்தீர் சோதியே #சுந்தரர் #விருத்தம்


சொக்கா திறனுள சோமமே நின்னொளி

நிக்கா வுலகினில் நில்லா தடியனை

மக்காது காக்கும் மனதினில் பூக்கும்

இக்காணல் காட்டவே கோடியான சூரியனே.. #நான் #விருத்தம்



#வருணலிங்கம்

அருணமலை யாளும் அரசனே அன்பால்
வருணந் தருதயாவே வானாகி வாருண்
வருணமாய் நின்றநீர் வரமே அருளும்
திருவே நீர்மேனி திருநீரனே பெம்மானே.. #சுந்தரர் #விருத்தம்..

செம்மேனி யோனே பொன்னொளி வீசி
எம்மனதுள் வாழ்நேசா எவ்வகையில்  ஈடாற்றி
உம்மன்புக் கென்கடன் தீர்ப்பேன் உமைபாகா
மும்மாரி தருவருண முனக்கே இறைவனே... #நான் #விருத்தம்

நடையில்...

பொங்குநற் சாந்தொடு வெண்நீரும் பூசிநீர்
குங்குமத் தேவியொரு பாதியாய் கொண்டிட
தங்கநிற வேலனொடு தந்தமுடை வேழனிருச்
செங்கமழந் தாள்பணிந் தென்பிறவி நீங்கவே.. #நான் #விருத்தம்

தென்மலையும் வெள்ளிப் பொன்மலையும் கொண்டையில்
நன்நதியும் வெண்மதியும் பண்ணுடுக்கை சூலமும்.
பொன்னணிந்த காற்சிலம்பும் கிண்கிணியும் தந்தனவென
நின்னடையே காண்க வெழில்... #சுந்தரர்  #வெண்பா..

#வாயுலிங்கம் 6

செம்புனலாய் தீயாய் செழுமேனிக் காந்தாய்
வெம்மையன் தன்மையள் வாயுவாய் நின்றதென்
அம்மையே எவ்வகை விந்தையோ விளம்பாய்
உம்மையே கொண்ட உள்ளத்துக் கருளே .  #நான் #விருத்தம் ..



கண்மூன்று கொண்டானை கண்ணள்ளி தந்தனக்கு
கண்மீட்டுத் தந்தானை கண்ணிட்ட மாலனுக்கு
சக்கரம் தந்தானை சற்றிங் கழைத்தேன்
அக்கறை கொண்டு கருணைதந்தான் ஈசனே.. #சுந்தரர் #விருத்தம்..



#குபேரலிங்கம் 7 (இந்த லிங்கம் ஆலயம் பிரம்மாண்டமா தெரியும் மற்றதைவிட சற்றேதூக்கலாய்.. இதுவரை இந்த லிங்கத்தில்நானொரு நகையையும் பார்த்ததில்லை.. கேட்டால் இருப்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருப்பதால் அணிய நேரமில்லையாம்.. இதுவரைக்கும் அத்தனைப் பௌர்ணமியிலும் இங்குதான் கூட்டம் அதிகம்.. பணத்தாசை...)

ஐயனே போதும் ஐஸ்வரியம் வேண்டாம்
தையலொரு பாகனின் தாளாத பாசம்போல்
மையலுள் பெண்டிரும் மாளாசெல் வமமும்
கையடை பட்டிடுமோ சொல் #நான் #வெண்பா...


அப்பா பிறைசூடி அன்பர்க்காய் நிற்பாய்
எப்போதும் காப்பாய் முப்போதும் தாயாய்
தப்பா தருள்வாயே தன்னருஞ் செல்வமே
எப்போதும் போதும் ஏதும் பெரிதிலையே.. #சுந்தரர் #விருத்தம்..
பஞ்சமுக தரிசனம் 


பற்றோர் முகமொடு பாசம் முகமுடை

உற்றன்பு ஓர்முகமும் உண்மை யொருமுகமும்

நற்சித்து முகமொன்றும் நான்மறை யோர்முகம்

கற்றறிவு ஓர்முக முன்பஞ்ச முகமே..#சுந்தரர் #விருத்தம்


சிரமைந்து கொண்டனை சீரைந்தெழுத் தும்கொண்டு

வரமருளு மெந்தையின் வாரனைய நற்கருணை

தரமளந்தோ ருண்டோ தனையறிந் தாருண்டோ.

அரணவ னென்றே அமைந்தாலே இன்பமே..

#நான் #விருத்தம்.. 



நடையில்....

நாதனே நாயகா நானிலை வலுவுடன்
ஆதலால் நீயே கதியினி உன்பணி
காதலால் சேர்ந்தனை காவலாய் காத்துனது
பாதத்தால் சென்றெனை ஆலயம் சேர்ப்பாயே... #நான் #விருத்தம்

தேற்றுவான் நம்மைத் தெளிவித்து வித்தகன்
ஆற்றுவான் நம்பிணி ஆகும்நீ நம்பியே
போற்றுவாய் தோழனே பொற்பதங் காட்டுவான்
மாற்றுவான் யாவையும் பார்.. #சுந்தரர் #வெண்பா..

தேன்பா வெனவே தேம்பாது பாடினீர்
நான்விரும் புந்தமிழாற் நாவிசைத்து பாடினீர்
தான்நோக விட்டாலென் தாகமெங்கு தீருமென
வான்கருணை வள்ளல் வழங்குபல முணர்வீரே..  #நான் #விருத்தம்.

#ஈசான்யலிங்கம்

ஈசனே லிங்கமாய் நேசனே வீற்றுளாய்
தேசனே தென்னவனே தேவனே தெய்வமே
பாசமாய் பக்கமிருந்து பார்த்தருள் நல்குவாய்
வாசமலர் கொன்றை யணிந்து.. #சுந்தரர் . #வெண்பா


ஈசனை உள்ளன்பு தேசனை உற்றதோழ
நேசனை கள்ளமில்லா வாசனை சாேதியை
பூசனை செய்திட புன்னகையாய் நின்றனை
பேசனை பார்க்கா வரம்வேண்டும் ஈசனே...  #நான் #விருத்தம்..

மீண்டும் ராஜகோபும் வருதல்...

மூண்ட பணிநன்றாய் முடிந்த துன்னாலே
வேண்டத் தருமெங்கள் வேதமறை சொல்லிடா
ஆண்ட வனைப்பாடி ஆசைதீர கண்டோமே
மாண்ட தெம்பிணி மாயத்துயர் யாவுமே... #நான் #விருத்தம்


நாடி வருமுனது நாட்டைச் சேர்ந்தோமே
கூடி குதுகலம் கொட்டி கொடுத்தனை
பாடி பதம்சேர்ந்து பாவம் கழித்தமே
கோடி இன்பங்கொள் மனது...
#சுந்தரர் #வெண்பா..





கலசாபிசேகம் 


ஒற்றைபடை சுந்தரர் இரட்டைப்படை நான்..


அண்ணல் அலங்காரன் அண்டம் பலக்காரன்
கன்னல் கரும்பாக கண்ணிலே கண்டிட
தென்ன னவனுமே பொன்னொளி காட்டிட
என்ன வேண்டுமினி  வாழ்வு...

அண்ட மாயினனை அன்புரு வாயினனை
விண்டர் வியப்போனை அண்டர் அறியோனை
கண்டங் கருத்தோனை கண்டு களிப்போட
கண்டமே கசிந்து கலச நீராட்டே..

பாரில் பெரியோனை பாருரு வாயனை
ஊரில் மிகுத்தில்லம் நூறு கொண்டோனை
வாரி இறைப்போனை வானத் திருவோனை
காரி கழுத்தோனை கண்டுயர்ந் தோமே..

நறுமன மலரினை நன்று படைத்து
கறுமணல் கிழத்திமேல் காதல் கொடுத்து
அறுமுகன் வேழனை அள்ளி யனைத்து
மறுமையிற் காக்கும் மணியோனை கண்டோமே..

திருமக ளுடையவன் தினம்வருந் தலமிதில்
திருவாச கத்தடியவர் திருத்தலம் கொண்டிட
உருகாயோ சோதியே உம்மடியெந் தமிழே
பெருகாதோ உள்ளம் பெருவெள்ளம் போலவே...

உச்சத் துறைவனே உண்மைப் பொருளே
எச்சி லுலகினில் எத்தனை வாழ்வுகளோ
எந்தை பரமனே நுந்தை யருளினால்
கந்தை யுடல்கிழித்து கா...

முன்னை பிறவியை முழுதறுத்து தூய்வித்தாய்
என்னை பிரியமாய் ஏகனீர் ஏற்றருளி
தன்னை துணைதோளாய் தந்தாட் கொண்டனே
நன்னை புகழ்பாடா நாவிருக்கு மோசொல்லே ....

அங்கமெங்கும் அனலாக அபிசேகப் பற்றானே
திங்கள்பிறை தன்னைசூடு திண்முடியுள் குன்றியுள்ள
கங்கையிற் குளிர்ந்தோனை எங்கைகொண்டு நீராட்ட
சங்குடை சங்கரனே சிந்தையுள் சிறப்பே

நகையென கண்டத்தே நாகத்தினை சூடியனை
பகைதனை தீர்க்கும் பரமனை பக்தியில்
முகையென சிந்தும் மழையா யன்பிற்கு
தகையாய் உறைவோனை தண்டையோனை போற்றுகவே..

முப்புரம் சுட்டனை முக்கண் முதல்வனை
எப்புரம் காணுவேன் எம்முள் ளுறைகையில்
ஒப்புரத்தே ஒன்றிட ஒன்பது வாயிலுடல்
அப்புரத்தே நின்றிடு அப்பிரானை காண்கவே..

முற்றும்



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم