கந்த விருத்த சதகம்

 







கந்த விருத்த சதகம்

பவித்ரன் கலைச்செல்வன்.



கணபதி துதி

நும்பி அடியில் நுழைய துணையாய்

தும்பி கரத்தோய் தமிழை தருவாய்

நம்பி துதித்தால்  நலனே அருள்வாய்

எம்மை வழிசெய் எயிறு கரனே.. 


ஈசர் பணிதல்.

நேசர் மனதே நகராய் அமர்ந்து

தாசர் தமக்கே தகய தருளும்

ஈசர் பரனே இளையோன் தனையே

பேசர்க் கருள்வாய் பெருமைத் தமிழே.. 


தமிழன்னை துணை வேண்டல் :


அம்மா உனையே அமைத்தேன் மனதுள்

பெம்மான் தனையே படைத்தேன் உனக்கே

எம்மான் முருகன் எளியர் குமரன்

செம்மை புகழ செய்வாய் துணையே.. 













முருகனருள்.  :


உன்னை அறியும் உயர்ந்த அறிவை

என்னை பெறுவேன் எளியன் எனக்கும்

உன்னை அறியும் உணர்வை அருள்வாய்

தன்னை அறியத் தெரியேன் எனக்கே.. 1


அன்னை அனையாய் அன்பை தருவாய்

என்னை முழுதாய் எழுத்துள் நிறுத்தி

உன்னை தெளிவாய் உணரக் கொடுக்கும்

என்னே கருணை எளியன் மொழியேன் 2


முன்னை பிறவி முனிந்த பலவும்

பின்னை பிறப்பும் பிறவும் அறுத்து

நன்னை கொடுத்து நலனில் செலுத்த

உன்னை விடவும் உடனார் உளரே. 3


வன்மை வளர்த்தே வடிவை திருத்த

தன்மை வளர்த்தே தகைமை கொடுக்க

இன்மை இலதாய் இயல்பை வழங்க

உன்னை பணிந்தே உரிய செய்க. 4


ஆறாம் நெறிகள் அறிவாய் அருளி

ஆறா ரணங்கள் அகல விலகி

ஆறாம் நிலையை அடையத் துணையாய்

ஆறாய் பிறந்த அறுவே வரவே.5


சீராய் பயில்வேன் சிறப்பாய் பகர்வேன்

சீராய் சிகரம் சிறப்பாய் அமர்ந்த

சீராய் அலையும் சிலிர்க்க பணியும்

சீராய் உனையே சரணே குகனே. 6


வேறா குமெனை வளமே குமரா

மாறா இளையோய் மரணம் தனிலே

மாறா நிலையில் மயங்கி இருக்க

வேறார் உதவ வருவார் குருவே.. 7


பாராய் எனையும் பரிவில் நிலையோ

பாராய் எனக்கும் பிறிதார் உளரோ

பாராய் எனையும் பிடியாய் கொடுத்தேன்

பாராய் பரந்த பதிநீ எனவே..8


யாதாய் இருந்தும் யவனப் பெரியோய்

நாதா உனைதான் நினைவில் இருத்தி

போதா முறைக்கே பகர்வேன் முருகா

வேதா விளங்க விவரித் தவனே. 9


மாதர் விழியில் மயங்கா தெனையே

பூதர் பழியில் படியா தெனையே

சேத மிலதாய் செழிவாய் வளர்த்தாய்

ஏது மறியேன் எனையாள் வடிவே.10


பேதங் கருதா பழனிப் பதியே

பாத மதனை பதியப் பதியே

நாத மதனின் நிகரில் பதியே

மேதப் பொருளே முருகப் பதியே11


ஆதிப் பொருளை அறிய பகர்வாய்

மீதிப் பொருளை மிளிரப் பகர்வாய்

நீதிப் பொருளை நினைவிற் பதிய

சேதிப் பொருளாய் செவியில் மொழிவாய். 12


கந்தா கடம்பா கதிர்வேல் கதம்பே

எந்தா எதிர்க்கும் எதையும் எதிர்க்கும்

செந்தில் உருவாய் செகத்தின் பதியே

அந்தம் வருகில் அடியேன் துணையே.. 13


வண்டாய் வருமென் வருகைக் குவந்து

செண்டாய் திரிந்து செயலை புரிந்து

அண்டுந் துயரை அறியா தெனையே

வெண்பா வெனவே வளர்த்தாய் குருவே. 14


சேவல் கொடியாய் சகத்தி லமர்த்தி

ஏவல் புரியும் எளியார் துயரை

தூவல் முகிலாய் துடைக்கும் எழிலோய்

நாவல் தமிழர் நிறைந்த உறவே.. 15


என்ன புகழ்வேன்  எதைத்தான் புகழ்வேன்

சின்ன துகளும் சிவத்தை பெறவே

சொன்ன பொருளை சொரூப வடிவை

என்ன புகழ்வேன் எதுவும் அறியேன். 16


ஆடும் மயிலும் அணிகொள் வடிவேல்

தேடும் அடியர் தொலையும் கவலை

நாடும் அடியர் நிகரில் புகழை

நாட புரியும் நிதமும் நலமே. 17


வெல்வேல் அகிலம் வெல்வேள் கரத்து

காெல்வேல் அவுணர் கொல்வேள் தமிழின்

சொல்வேல் எனையாட் கொள்வேள் அடியார்

நல்வேல் தனையே கொள்வேள் கதிரே..18


வேண்டும் எதுவும் வேண்டா நிலையை

வேண்டிப் பணிந்தேன் வேலா உனையே

வேண்டும் வரங்கள் வேண்டத் தருவோய்

வேண்டும் முதலே வேண்டா அகற்று.  19


கூடும் வினைகள் கூடா வினைகள்

தேடும் வினையும் தேவை யிலதாய்

ஆடும் மனதை ஆட்டிப் படைப்பாய்

ஓடும் வினைகள் ஓய வருவாய்.. 20


மண்ணில் உயர்வாய் மலைமேல் அமர்ந்தாய்

எண்ணில் உயர்வாய் எதிலும் நிறைந்தாய்

கண்ணீர் பெருகி கழலை பிடித்தேன்

வண்ண மயிலில் வருகும் குகனை. 21. 


அஞ்சுகிற அன்பரவர் அஞ்சலை அறுக்க

வஞ்சமுடை வன்மனதில் வந்துநீ. இருக்க

செஞ்சமரில் வென்றமர்ந்து செங்கவிக்  குவந்து

நெஞ்சமென வந்தமர்ந்த நாதனே குகனே  . 22


தஞ்சமென வந்தடைந்தன் தங்கரத் தருள்வாய்

எஞ்சுதுயர் பற்றுமுதல் எம்பிற விநீக்கி

பஞ்சுதனை ஒத்ததொரு பண்மனத் துநின்று

கெஞ்சுமெனை கொஞ்சுமொரு கந்தவ டிவோனே. 23


ஏகாந்த தத்துவம் எடுத்தெனக் குரைசெய்

மாகாரி வான்மழை முடியதோர் முறையாய்

ஆகாய வீதியினர் அடுசமர்த் துணையாய்

ஏகாந்த நாதனாய்  எழிலதன் வேந்தே. 24


ஆளாட ஆட்டிடும் அரணவன் சுடரே

தாளாட கண்டென துளமது மகிழ

கோளாட ஆடிடும் கருவுரான் மகனே

வாளாடு வீரரும் விரும்புகின் றவனே 25.


வல்வினை வெல்தகு வேலனை அவுணரை

கொல்வனை நல்லருள் கொண்டெனை அருளவே.

தொல்முனி பல்வரை தென்புலத் தனைவரை

கல்வியை முன்புனைந் தன்பொடு பணிகிறேன்.. 26


நம்மூலர்க்கு முறைசொன்ன நந்தியின் நந்தனை

தம்மூலர்க்கு முறைசொன்ன தீரனை கந்தனை

வெம்மூலர்தம் முனிக்கண்ணில் வந்தனை வேந்தனை

செம்மஞ்ஞை முதுகமர்ந்த செந்திலை வேண்டினேன்.. 27


அகத்தியன் தன்னுடைய அகத்தியனை குகனை

அகத்தினை தன்னிடமாய்  அமைத்தனை சகனை

இகத்தினை தன்னிருதாள் இருத்தியே மனதை

குகத்திடை வைத்தெனையே குழைத்தனை இனிதே.  28


அரவினை அடியினில் அடக்கியே வைத்தனை

சரவண பெருமிறை சிரகிரி வேந்தனை

மரமது மொழிந்திட மரமதி கொண்டவன்

சிரமது பணிந்திட சிறப்பொடு வேண்டினேன்.. 29


வரமது அருளென வரதனை வேண்டினேன்

கரமது தருகவே கரகுவேல் கந்தனே

தரமொடு சிவபுரம் தனைபுக நட்பொடு

வரவுனை விரும்பியே விழைகிறேன் வேலனே. 30


பெருநிலை தருவதற்கே பெருந்துணை யாகநீ

வருகவே விழைகிறேன்நீ வருவதற் கென்றொரு

திருவுளம் புனைகிறேனென் துணைவரு தோழரும்

அருளொடு நுழைகவேவுன் அனுமதி வேண்டினேன்..31


வந்தனை செய்வோர்க்கு வந்துடன் உதவுவானை

நிந்தனை செய்வோர்க்கும் நல்லருள் புரிவோனை

எந்தனை ஏகவேதான் எம்முடன் வருவானை

சிந்தையில வைத்திங்கு சென்றடைய வேண்டினேன்.. 32


இந்திரனும் பெற்றமகள் இவ்வுலகம் பெற்றவளாம்

அந்தகுற வள்ளியுமே அன்னையதை ஒத்தவளாம்

செந்துவடி வேலகுகன் செப்புமொழி ஒத்தவனாம்

கந்தனுடல் ஏந்துமயில் கண்டுமனம் குளிர்ந்ததே.. 33


பன்றியென புவிசுமந்த பாற்கடலோன் மருகனே

வென்றுவர துணையருளும் வெற்றிவேலு முடையனே.

கன்றுயென கனியமனக் குன்றதிலே குடியமர்

நன்றுபுரி நெறியதனை நன்குபயி ரிடுவேளே.. 34


அந்தகாலன் ஆயுளினை அறுக்க வருகையில்

முந்திகால தீவினையை முறித்து நிலைதந்து

நந்திகாலில் தங்குகிற நிலையினில் எனையேற்ற

வந்துதவ உன்யினையில் வருபவர் யாரோ!. 35


சுத்தநெறி சுடர்விடு சுத்தவித்தை கற்றறிய

மெத்தமதி தனையருள் முத்துகந்த முத்தரசே

வித்தகமும் வினையறு வித்தகத்தில் வெற்றிபெற 

சித்தமது  சிறப்புற செய்கசித்த நாதமதே.. 36


திருப்புகழ் விருப்பமொடு திளைத்திட கேட்கும்

ஒருத்தரும் விருப்பமொடு ஒருமுகஞ் செய்து

திருத்தலம் விருப்பமொடு திரண்டவர் கொண்ட

வருத்தகள் திருத்துமொரு திருப்புமு னையே.. 37


கந்தமென வந்தகுகன் நந்திமகன் முந்துதமிழ்

சொந்தமவன் பந்தமென வந்தடியில் நோந்துபடும்

செந்தமிழர் தந்தையென சந்ததமும் வந்துதவு

செந்திலிறை சுந்தரனும் சிந்தனையில் சந்தனமே.. 38


முத்தையன் முதியா முருகையன் எங்கள்

சித்தையன் சிவனார் சிருங்கையன் என்றன்

முத்தையன் எனையாள் மருதையன் இன்னும்

எத்தையன் எமக்காய் எழுமையன் தானே.. 39


தென்பழனி நில்பழமே தென்பொதிகை தன்முனியின்

தொன்தமிழின் முன்பழமே தொன்முதன்மை தானதுவும்

தென்படா தொன்பழமே தொன்மமெனுஞ் சொல்தனக்கும்

தொன்பழமே செந்தமிழின் தொன்பழமே தொன்மயமே..40


ஆசை கொண்டுனை அன்றாடம் அடிமனதில்

பூசை செய்கிறேன் பண்போடு படுதுயராங்

காசை வெய்யொளி கொண்டேகி எரித்திடு

தூசை துண்டினை தென்படா வகையழி.. 41


வல்லதோர் விதியினை வேலவா உன்னருளால்

வெல்லவோர் வழியினை வேண்டினேன் என்னுயிரில்

நல்லவை விதையென நாடியே உன்னடியில்

பொல்லவை விடுகிறேன் புண்ணியம் சேர்த்திடவே.. 42


அம்மானின் பெம்மானின் அம்பிகை தம்மானின்

செம்மானை வெம்மானை செந்திலை அன்பாரின்

தம்மானை எம்மானை தண்டுடை கோமானை

எம்மாவாய் அம்மாவாய் எண்ணியே துதிப்போம்  . 43


சந்தனமும் குங்குமமும் சரவணனின் திருநீறும் 

செந்தமிழும் வெண்மனமும் செழித்ததிரு திருத்தாளும்

வந்தனை செய்பவரை வருவினை விலக்காகும்

எந்தமையன் எம்குமரன் எண்ணிட வருவானே.. 44


சரவண பொய்கையில் சிறுவனாய் இருந்தயிறை

வரமென கேட்கையில் வரமழை தருந்தயையை

சிரகிரி வேளையே சிரமதில் உருவெனவை

நரனவர் வேட்கையை நலமொடு தணிப்பானே.. 45


இருமையில் துணையென இருப்பவன் திருமுகன்

முருகியல் தனைதரு முருகியற் தலைமகன்

அருகினில் பயமற அடியவர்க் குறைபவன்

பெருகிடு பிழையினை பொறுத்தருள் கருணையே.. 46


ஞானமதை வேலெனவே ஞாதும்படி ஈபவனே

வானமதன் நூறுமிணை வாகவரா மாமதனே

ஆனமகள் வென்றடைந்த ஆதிபர மானவனே

ஆனமுகன் தூதுவர ஆவினன்  பாலகனே.. 47


தாளவகை யாவும் தாள்பணி மாறு

தாளமதில் ஆடும் தேயவன் நேயா

வாளைவிழி யென்னும் வள்ளியின் நேயா

தாளைபிடித் திட்டேன் தக்கது தானே.. 48


மஞ்ஞையதில் வாஞ்சையொடு மஞ்சளென மங்களமே

வஞ்சியொடு வானையொடு வந்தகுக மங்களமே

அஞ்சிகிற அஞ்சலதும் துஞ்சிவிட மங்களமே

வஞ்சனைகள் மிஞ்சவிடா கஞ்சமலை மங்களமே.. 49


பொன்னினொளி என்னும்படி பொன்னெவே விளங்கும்

மின்னுமொளி மின்னலென மின்னலதும் மருங்க

பொன்னனொளி கண்குளிர தன்னொளியை உணர

என்னயினி என்னும்படி எல்லாமும் வந்ததே.. 50


வியாழகுரு தானுரை வரலாற்றை கேட்கவே

வியாபித்த போரினை விளையாட்டாய் தீர்க்கவே

தயாளகுரு வாகவே திருவார்க்கு ஞானமே

மயானமுறை காளிக்கு மதியாரை ஊட்டவே .. 51


வாகான போரதில் வேலோடு நின்றனன்

ஆகாய போரதில் ஆகாய மாகினன்

ஆகாத வீணரை ஆதார மின்றழி

வேகாத சோதியை வேதாக மம்போற்றும் .. 52


அன்பினில் அடங்கிடும் அருந்தமிழ் விரும்பிடும்

என்குரு உடன்வர எதுவரும் எதிரென

நன்குர அறந்தரு நெஞ்சுளக் கடவுளும்

என்மத மறந்திறம் எனவிரி கதிரதே.. 53


வேதமுதல் ஆனைமுகன் விரும்பு மிளையோனே

காதலொடு ஆசைகொள கடம்பன் வருவானே

மோதல்வர ஆதிபரன் மனமுளன் வருவானே

ஓதமறந் தாலுமவன் ஔியொடு வருவானே.. 54


சீரொடு பாடிடு சந்தமதில் தங்குபவன்

வேரொடு பூத்திடு கந்தமலர் என்றபவன்

நீரொடு தாமரை தந்தமலர்  கந்தபவன்

தேரொடு தான்வரு செந்திலவன் எங்ககுகன்.. . 55


யாரொடு நானுரைப்பேன் யாதுமாய் நீயிருக்க

யாரொடு நானழுவேன் யானனென நீயிருக்க

யாரொடு நானலைவேன் யாரென நீவிலகின்

யாரொடு நானுறைவேன் யாதென போவதுவோ?. 56


நீரொடு பிறந்தவர் நீயும் நானும்

நீரொடு பிணைந்தவர் நீயும் நானும்

நீரொடு தொடர்பவர் நீயும் நானும்

நீரொடு பிரிவதோ நீயும் நானும்.. 57


தீவினையில் எனையிருத்து தீயனென நீவிடுவதோ

தீவினைபோல் தனித்திருக்கும் தீமையதை நீதருவதோ

தீவினையை விலக்கிவிட்டு தீயவினை நீவளர்ப்பதோ

தீவினையாய் எனைபடுத்த தீதெதனை நானிழைத்தேன்? 58


வேறெனவே நீநகர்ந்தால் வேறெவரை நானறிவேன்

வேறெவரும் தான்வருவார் வேறெதுவும் நானறியேன்

வேறெவரும் நான்பணியேன் வேதமதும் நானறியேன்

வேறெதனை நான்புரிவேன் வீண்பிறவி தீர்ப்பதற்கே.? 59


பாதமதை பற்றிவிட்டேன் போதாதோ பெருமானே

பாதமதில் செத்துவிட்டேன் போதாதோ பொறையோனே

பாதமதை பற்றிடினும் பார்வையும் செலுத்தாயோ

பாதமதில் சிந்துவிழி பாரமதை உணராயோ.. 60


அழுவதை விடவும் அடுத்தறியேன் அன்பனுனை

தொழுவதை விடவும் தெளிவறியேன் தென்பழனி

கொழுவுறை கடவே குறையறியேன் குற்றமதன்

கழுவினை விடவும் குகனுனது பிரிவடக்கேன். .. 61


மலையேறி வருவனன்றி மனமேறும் வழியறியேன்

நிலையேறி வருவனென்று நினைத்தாயோ படிப்பறியேன்

அலைமேவு கடலதனில் அலையாது விடிவறியேன்

தலைமேலில் திருவடியை தைத்தேநீ நடத்திடுவாய்.  62


குஞ்சரனை தான்பணிந்தேன் குற்றமில தாகினேன்

வெஞ்சினத்தை தான்துறந்தேன் வெற்றுமன தாகினேன்

சஞ்சலத்தை தீர்தருள்வாய் சண்முக மானமே

வஞ்சமது தான்துறந்து வந்துன தாகினேன்.. 63


வெண்பொடியாம் திருநீறு வாரியே பூசினும்

புண்ணுடலின் கொடுஞ்சேறு போகவே போயிலை

உண்ணுதலை விடுத்தாலும் ஊனமனம் ஆறலை

எண்ணுதலை விடுத்தேதும் என்னுளம் சேரலை .. 64


கஞ்சனிலை  கந்தனே கரவாது கருணைசெய்

பஞ்சமனம் வந்தனை மறவாது அருணைபோல்

மஞ்சனம் தீண்டலை மதுவேதும் அருகாது

நெஞ்சினில் நின்றனை நினையாது மறப்பதோ.. 65


அரணவனின் திருகுருவே அருணையின் திருவிளையே

மரமதியுள் சிலையுருவே மருளினை திருத்தினையே

சிரமதனுள் சிறப்புறவே சரவணனுன் திருவடிவே

இருப்பினுமே வெறுப்பதுவேன் இடும்பினை கொடுப்பதுவேன்?. 66


ஒருமனத் துள்ளே ஒருமுகம் வைத்தேன்

அருமுக கந்தன் திருவருள் தந்து

குருவென நின்று குறுமனம் செந்து

கருவென தங்க கடினமும் ஏது! 67


அவனொரு விந்து அழகிய கந்து

அவனியில் முந்து அமிழ்தென வந்து

பவனமே தந்து பகைபடை வென்று

சிவநிலை எய்த சிரமமும் ஏது.. 68


சத்தப்பறை கத்தப்படை சித்தப்பரம் மொத்தம்நிறை

வித்தக்கனி எட்டிப்பெற கொற்றமயில் சுற்றிவர

மெத்தப்புனை சொக்கப்பனை மெச்சிப்பணி முத்துக்குக

வித்துத்தனை பற்றிப்பிணி பற்றைவிட உற்றதுவே.. 69


மழலைக் குழவை மனிதப் பெருவை

தழலின் வடிவை தமிழின் தலையை

எழிலின் முடியை எளியர்க் கிறையை

அழகை அணுக அழிவும் இலையே.. 70


சுப்பனை சூழ்காக்குங் செந்திலை சுமையோடு

தப்பினை தோள்தாங்கி தன்னடி பணிவோரின்

முப்பினை வேல்கொண்டு முந்தியே களைவோனுக்

கொப்பவர் ஏதென்று ஒப்புவார் அறிவோரே. 71


வம்பினை விளைந்தே வாங்கிய பிறவியை

எம்பிரான் இளையோன் ஏந்தி சமனிடு

நம்பிரான் முளைவிடு நோயை சமரிடு

தம்பிரான் கரிமுகன் தம்பிதான் உணர்ந்திடு.. 72


அம்பாய் பிறவியில் அலையும் எனதிலக்கை

எம்மான் சரவணன் எளிதினில் புரிந்தனுப்பி

பெம்மான் திருவடி பெறுமுறை தெரிந்திடசெய்

எம்மாழ் நினைவினில் நிலையுறை குருகுகனே.. 73


எத்தால் மறவேன் எனதாம் முருகனை

எத்தால் மறவேன் எனதிறை குருவினை

சித்தால் பிறந்தேன் சரவண கடம்பனை

செத்தால் மறவேன் சடவுடல் எனுமெனை.. 74. 


ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

ஆறுமுகம் என்றுமொழிந் தாறுமுகன் பார்புகழ்

கூறுபவர் வென்றுவினை கூறுபவர்  கூறுயபின்

மாறுயில தாயதொரு மாயவுடல் ஏகுவாரே... 75


தேருமடி யாரவருளத் தேரில் வலம்புரி

சீருமுடை யானவனருள் சீற்றத் துறையினில்

சேருமடி யாரவருடை சித்தம் அடிவரை

ஏருயென ஊன்றியுழவு செய்யும் ஏரகனே.. 76


யாருமிலை என்றிலது யாவருக்கும் ஆனவனாம்

யாருமவன் குன்றிருக்க யாதுமுறைசெய் தேவருமே

யாருமவன் சீருரைப்பின் யாவுமுடனே தந்திடுவர்

யாருமவர் அன்பினை யாவருமே பெறலாமே.. 77


வகைவகை தத்துவ வெளிவழி உயரேன்

பகைபகை சூழ்பட பழிபட உயரேன்

தகையது இன்றியே தனியென உயரேன்

முகைமுகை யென்றே மலர்கிற உயர்வே..  78


மஞ்ஞை தனிலோடி மறிக்கும் கால்வந்தென்

கெஞ்சல் அறிந்தாடி  கடுவினை தூள்செய்தென்

துஞ்சல் பொழுததில் துணையென தான்நின்று

அஞ்சல் அறுவேலே முடிவில் வாழ்வீந்து 79.


தனங்கள் வேண்டேன் தயைகொடு போதுமே

கனங்கள் வேண்டேன் கடையிரு போதுமே

மனங்கள் வேண்டேன் முருகனே அருகிருப்பாய்

சனங்கள் வேண்டேன் சரவணன் போதுமே.. 80


ஆறு விதமாக அழிக்கும் காலனிடம்

ஆறு விதமாக அழிவில் காத்துரட்சி

ஆறு விதமான கொடுமைகள் செய்திலனே

ஆறு விதமான அறிவினை தந்திடுவாய்.. 81


ஒருநாளே உடலினை ஒதுக்குவர் உறவானோர்

ஒருநாளே உடலினை ஒடுக்குவர் உறவானோர்

ஒருநாளே உடலது ஒழிபடும் உறவாக

முருகாநீ உடனிரு முடிதலும் திருநாளே.. 82


வாதாட போகிலேன் வஞ்சனைகள் செய்கிலேன்

சூதாட போகிலேன் சங்கடங்கள் தந்திலேன்

மாதோடு போகிலேன் மஞ்சத்தில் வீழ்ந்திலேன்

யாதோடும் போகிலேன் என்னுள்ளம் உன்னதே... 83


சாதலுக் கஞ்சேன் சாபமெதும் கொள்ளேன்

மோதலுக் கஞ்சும் மானிடன்நான் கோழை

வேதலுக் கஞ்சேன் வேலவனை வொன்றி

போதலுக் கேயென் வீண்பிறவி காத்தேன். . 84


மறுமையினில் முருகனடி முக்தியினை தருகுமடி

வெறுமையினில் இருபிறவி வாழ்கிறபொ ழுதுகளைதான்

வறுமையினில் இருப்பதுபோல் வாடுகிறேன் குருகுகனே

பொறுமையிலை கணம்பல பொறுமையிலை காக்கவே.. 85


முத்தமிழின் சந்தமதை சிந்துகவி உண்டுகளி

சித்தகுரு செந்திலினை கந்தமற முந்துபடை

செத்தபிணம் செந்தழலில் அந்தமதை சென்றடைய

கத்துமுடல் கந்துபட வெந்துபொடி ஆயினவே.. 86


மந்தமது வெந்துவிட வந்ததழல் வேளே

பந்தமது அந்துவிட கந்தமர பாகி

சந்தனமும் செந்தமிழும் சொந்தயின மாக

இந்திரனும் வந்துபணி விந்துருவ னாமே.. 87


சங்கு கரத்தினன் சங்கர பிரமன்

மங்கு வொளியெனும் மந்திர பிரபை

பொங்கு வொளியினில் பொன்னது மறைய

தங்கு குணத்தினில் தன்தமிழ் அவனே.. 88


பொழியுங் கருணையிற் புவியும் மறையுமே

வழியும் வடிவினில் உலகம் மயங்குமே

எழிலை அளக்கவே எதுவும் இணையிலை

மொழியின் முதல்வனுக் குவமை எதுமிலை .. 89


பழநி திருத்தணி பழமுதிர் சோலை

அழகு கருமலை அலகிலா செந்தூர்

பழகு குருமலைப் பதிக்கருள் சாமி

தழலும் குளிர்தரு மருதம லையே.. 90


துதிசெய் அடியர்க்கு துணைவரு முருக

பதியே குறமகள் பதியுனை பணிய

விதியும் விலகிடும் வினையது மறையும்

கதிநீ எனவடி கிடப்பதென் பணியே.. 91


இமயவர் குமரனே இடும்பா யுதனே

அமரவர்  குடிவுயர் அமரா பதியே

சமயவர் குலமுயர் சிவபா லகனே

சமரதில் வெடிசுடர் சிகாம ணியோனே.. 92


பயந்தவர் நெஞ்சப் பயமது தீர

நயந்தரு செந்தில் நலமது வாக

அயனவன் கந்தே அடைக்கல மாக

வியனவன் தானே விடையிலன் தானே.. 93


சூரனொடு தாரகன் சிங்கமுகன் மூவரும்

சூரபடை மாயவர் சூடுபட தேவரின்

வீரபடை சேனபதி வீரமதி காரனே

தீரமொடு கூறுயிடு தீயினுரு வாகவே.. 94


நவதுளையில் நிறைவழிகள் நவபாச 

மாக 

அவதிபடு அடியனையும் அமர்தாட்சி செய்ய

புவனமென பழமனதை புகுவீடாய் தந்தேன்

யவனமது மெருகுபட யெனைசீர்செய் வாயே.. 95


வந்தனைகள் வந்தனைகள் வந்த வண்ணமாக

சிந்தனைகள் சந்தமதை தந்த வண்ணமாக

சந்தனத்தின் அந்தமனம் வந்த வண்ணமாக

செந்தமிழில் என்மனதை தந்த வண்ணமாறே.. 96


ஆறுபடை வீடுவுடை ஆறுமுகத் தண்ணல்

நூறுபடை வீடுபெற கூறுபடத் தெங்கள்

மாறுயில ஈடுமில  மாறுமன மென்றே

கூறுபட வீடுபெற கூறுமெனை கண்டே.. 97


சேவற்கொடி சர்ப்பமடி சேனை தலைதன் னை

ஏவற்படி சர்வமது ஏகு நிலைபின்னை

தாவுமடி தந்தயிடி தாங்கு பொருளில்லை

நோவுமது நொந்துவிடும் நெஞ்சி லவன்நின்றால்.. 98


அடுசமரை அளந்துவிட அத்தனையும் தோற்கும்

சுடுகணையை எரிந்துவிட சூரியன்கள் தோன்றும்

படுகளத்தில் பகைமுடிக்க பந்தமின்றி போகும்.

தொடுவதர்க்கு மனதயின்றி தோன்றவில்லை ஏதும்.. 99


ஆடுமயில் சேவலொடு ஆனைவேள் வாழ்க

கூடுமடி யாரவர் கூட்டம்வேல் வாழ்க

ஈடுயிணை யற்றதொரு ஈசர்வேள் வாழ்க

பாடுகிற பாவலரும் வள்ளியுமே வாழ்க. .. 100




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم