தீர்ப்பான் துயரங்கள் தீர்ப்பான் நல்லின்பம்
சேர்ப்பான் செல்வங்கள் சேர்த்துயர்த்தி வண்ணம்
பார்ப்பான் எழில்மங்கை பாரன்னை சேர்த்துயர்
தீர்த்த கிரியுறையெம் கோன்.
கார்போல் கருணை கிரிபோல் பெருமையன்நல்
வார்சூழ் பஞ்சன் விரிசடை வேந்துமணத்
தார்சூடி மங்கை தனைகூடி நேசர்க்கு
தீர்த்தமாய் நின்ற தீர்வு..
ஓர்சிரிப்பால் முப்புரம் ஓய அழித்தவா
வேர்தானாய் லோகம் விளைந்திட வித்தானாய்
பேர்கோடி கொண்டாயே பெற்றானே நற்றாளே
தீர்வென்று பற்றினேன் தீர்த்து
நெஞ்சத்துள் வைத்தேன் நெறியெல்லாம் தானாகி
வஞ்சத்தை நீக்கும் வலியானை பெம்மானே
செஞ்சோற்றுக் கடனல்ல செல்வனே என்னன்பு
நெஞ்சாற்றுங் கடனாய் கொள்..
நின்றானை சோதியை நண்பர்க்கு தூதாக
சென்றானை சேர்மலர் செண்டாகி குழலிலே
நின்றானை நெஞ்சத்துள் நின்றானை நானிங்கு
நன்றானேன் தன்னை பணிந்து.
வில்லானை வென்றானை வித்தகனை நல்லொரு
சொல்லாலே நான்பணிந்து சொல்கின்றேன் பற்றாகி
செல்லானை செல்லாத செல்வனை செம்பொருளை
எல்லாமுமாய் உள்ளானைக் கண்டு..
إرسال تعليق