சிறுகையில் வேலேந்தி சூரனை வென்ற
சிறுமயில் தானேறி சூழண்டம் சுற்றிய
சிறுமலை பிளந்து சிரகிரி நின்ற
சிறுவனாம் வேலனை வாழ்த்து #வெண்பா
அருட்கரம் நீட்டி அருந்தமிழ் தந்தனை
அருணகிரி பாட அருளிய கந்தனை
மருவிலா மாவீரன் முருகனை வந்தனை
புரியவந்த வாழ்வை போற்றி பாடுகவே
விருட்சம் பிளந்து விழைந்த துயர்நீக்கும்
ஒருக்கை கொடியில் ஒருக்கை இடையில்
ஒருக்கை அருளும் ஒருக்கை வழங்கும்
ஒருக்கை முருகன் திருக்கை தானே.
மறையாம் பொருளை மறைவாய் நிறைவாய்
உறைத்தான் குருவாய் உமையாள் மகனே
மறைத்தான் துயரை நிறைத்தான் மனதை
உறைந்தான் உளத்தில் இறை..
நரையில் குமரன் நமரர் தலைவன்
வரையில் கந்தன் வனத்தின் துணைவன்
கரையும் மனதில் நதியின் புதல்வன்
விரையும் துணைவன் முருகு..
அறுமுக குகனவன் அன்பர்க்கு அன்பன்
வறுமையை நீக்கும் வள்ளியின் கேள்வன்
அறுசுடர் பொருளாய் அமைந்த முருகன்
அறுவடை பொருள்கொள் அரசன் அவனே..
மனவயல் தன்னில் மலர்கின்ற மலரோன்
தனங்களை தந்த திருமகள் மருகன்
வனமகள் கொண்ட வானவர் தேவன்
இனமென செந்தமிழ் இணைத்த வேளே..
தடமது பதித்து தடைகளை முறிக்கும்
கடனது செய்து கரமது திரும்பும்
மடமது நீக்கி மாயையை அறுக்கும்
வடிவேல் கொண்ட வடிவன் வாழ்கவே..
இடமதில் மங்கை இணைத்தவன் பிள்ளை
நடனிடும் ராஜன் நெருப்பின் கிள்ளை
உடனெனக் கொண்டால் உயர்தரும் நல்லன்
அடல்நிறை வேலன் அரசொடு வாழ்கவே..
யானைமுகன் தம்பி அம்பலத்தோன் நம்பி
சேனைமுதல் வேந்தன் சோலைமலை அரசன்
வானைவிஞ்சும் வேலன் வாடுதுயர் போக்கும்
தானைத்துணை எங்கள் திருச்செந்தூர் வாழ்கவே..
إرسال تعليق