சண்முக சட்கண்டம் - 15 - ஆரி ராராரோ

 அரணவன் மகனே அரிதிரு மருகா ஆரி ராராரோ

சரவண பவனே சிரகிரி முருகா ஆரி ராராரோ

அரவணைப் பதற்கே அலைமகள் வருவாள் ஆரி ராராரோ

அரவமும் மதியும் அணிந்தவர் குமரா தாலே தாலாலோ. 1


இரவியும் மதியும் இருபதம் பணிவார் ஆரி ராராரோ

புரவியை செலுத்தும் புரந்தரன் மருகா ஆரி ராராரோ

சிரங்குவி முனிவர் சிறந்துனைப் புகழ்வார் ஆரி ராராரோ

வரம்பல கொடுத்தே மலர்கரம் சிவந்தாய் தாலே தாலேலோ 2


அரகர சிவனார் அருட்புனல் செரிந்தாய் ஆரி ராராரோ

தரணியில் குடிகள் தழைத்திட விழைந்தாய் தாலே தாலேலோ

விரதமும் புரிந்தே விரிகடல் கடந்தாய் வேலா தூங்காயோ. 

பரங்கிரி முதலாய் பனிவளை மணஞ்செய் பாலா தாலேலோ.  3


கரமது சிவந்து கலங்கிட வரஞ்செய் கந்தா தூங்காயோ.

தரமுடை மனிதர் தனித்துணை புரிவோர் தேசா தூங்காயோ

அரவணத் துனையே அருகினில் கிடத்த அன்பே தூங்காயோ

பரமனின் புதல்வா பருவதன் முருகா பொன்னே தாலேலோ.. 4


மரமதை இரண்டாய் மயிலெனப் பிளந்தாய் மானே தூங்காயோ

புரவலர் புனையும் புதுமொழி தனிலேப் பாடத் தூங்காயோ. 

குரம்பருள் குகனே குறமகள் கணவா கந்தா தூங்காயோ

வரகவி புனைவை விரும்பிடும் கவிஞா வேளே தாலேலோ. 5


சிரமதில் நதியை சுமந்தவன் குமரா சேயோய் தூங்காயோ

அரக்கரின்  படையை  அழித்திட பிறந்தோய் ஆறோய் தூங்காயோ

சரவணக் குளத்தில் சிதறலாய் விழுந்த தேசோய் தூங்காயோ 

உரமென அடியார் உளமதில் விளையும் ஊற்றே தாலேலோ. 6


சரணமே தருகிற சகத்தவர் அடியார்  சீலா தூங்காயோ

பரணிகள் புகழும் படையழித் தவனே பாகாய் தாலேலோ

புரவிகள் பரவும் படைகளத் ததிலே பூவாய் தோன்றாங்கே

இரவிகள் நெகிழ  இருடிகள் எரிசெய் வெய்யோய் தாலேலோ 7


கரமிடு பவர்க்கே கரங்கொடுப் பவனே காவோய் தூங்காயோ

விரலினை பிடித்தே வருங்குக அழகா வேலா தூங்காயோ

சுரபிகள் சுரக்கும் சிரந்தரு அமுதை செய்வோய் தூங்காயோ 

மரபினில் முதியா முழுயிளங் குமரா மாறா தாலேலோ 8


புரமதை எரித்த புதிரவன் புதல்வா பூவே தூங்காயோ

குரம்பினை தரித்த குடிகளை உயர்த்தும் கண்ணே தூங்காயோ

வரம்பினை கடந்தே வரும்வினை அறிந்தோர் வேந்தா தூங்காயோ

இரந்திடும் எனது இதயமே உனதே ஈசா தாலேலோ 9


துரத்திடும் துயரை துரத்திடும் துணையே தேனே தூங்காயோ

சரணமே சரணம் சரணமே சரணம் சாமி ஆரீரோ

அரணென வருவோய்  அருமருந்  தமுதோய் ஆரோ ஆரீரோ

சரணமே சரணம் சரவணா சரணம் செந்தில் தாலேலோ.. 10






إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم