சண்முக சட்கண்டம் - 18 - வெண்ணைமலை பதிகம்

வெண்ணை மலைவாழ் வேலா குமரா
வண்ணக் கனவை வீசும் அழகா
எண்ணப் படிகள் ஏறி வந்தேன்
எண்ணில் வினைகள் எல்லாம் அறவே. 1

வெண்ணைமலை வித்தகா வேதமோதும் ஏரகா
தண்டமிழின் சீலனே தென்பழனி பாலகா
வண்டழையும் பூவனம் வென்றிறங்கி நின்றவா
மண்மிசையே நின்றுநீ மண்ணாள வேண்டுமே. 2

அன்றொரு நாளதிலே ஆதிபொருள் சொல்லியவா
தென்றலின் சாரமென தென்பழனி நின்றபவா
இன்றியல் பாகவேதான் இன்பமுற வெண்ணமலை
நின்றருள் சேரவேதான் நிர்மலம் தந்தவனே. 3

உண்டு களித்தேன் உனதரும் அருளமுதம்
கண்டு புளிக்கும் கனியனை உனதருளை
கொண்டு திளைத்தேன் கொடியவை பிரிந்திடவே
தொண்டு புரிவேன் தெளிந்தரும் உனகெனவே 4

பண்டு பணித்த பணிகள் முடித்து
பண்ணின் இனிய பதமும் படித்து
எண்ணி னரிய எழிலை வியந்து
எண்ணம் மறைய எதிலும் நிறைவே. 5

துண்டுத் துண்டாய் துயரப் பிறவி
கொண்டுக் கொண்டே குழைந்தேன் இளைத்தேன்
நண்டு மறைக்கும் நுரைசேர் கரையும்
கண்ட பிறப்பும் கணக்கில் இலதே. 6

எண்டிசை பாலரும் ஏகரும் பாம்பணை
கொண்டதோர் மாலரும் காலனும் நான்முகன்
கொண்டதோர் பாமகள் காணவர் கோமகள்
தண்டமிழ் பாடியே தாள்பணி பாலனே. 7

விண்மிசை வேந்தனும் வெண்கரி ஈந்தனன்
மண்மிசை சூரனோ மஞ்ஞையாய் தாங்கினன்
சண்முக வேலவா சக்தியின் பாலகா
வெண்ணையாய் குன்றதில் வேதமுதல் ஆனவனே. 8

வெண்முடி பெரிதாய் வைத்தவர் தலைவா
எண்ணொலி உருவாம் ஏந்தியோன் மருகா
கண்மலர் திறக்க கங்கெனப் பிறந்தாய்
நுண்பொருள் புரிய ஞானமும் தந்தாய் 9

பெண்ணவள் குறமகள் பெற்றவள் மலைமகள்
கண்ணதில் கதிரவன் காதலில் மதிமுகன்
மண்நலப் பிரியனே மந்திர வடிவனே
வெண்ணை மலைவாழ் வேலவா சரணமே. 10


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم