சண்முக சட்கண்டம் - 23 - விளக்கியென் மதிபுக

 விளக்கியென் மதிபுக விதிப்பல விதித்தனை விளங்கிட உதவிடு வடிவேலா

இளகிய மனதொடு இரக்கமும் பெறுகிட இனித்திட வகைதரு இடம்போனே.

அளக்கிடின் அளவில அதிபரப் பெரிதுள அவனிகள் துளிபடும் பெருந்தாளை

தளத்தினில் பதித்தெனை தவிப்பதில் விலக்கிடும் தனிப்பெருங் கருணையுள் பெருமானே 1


நதிதரு மறுமுக நவமரும் வணங்கிட நுதிதரும் அழகிய முருகேசா

பதித்தநல் பதத்தினில் பகைப்புயல் புகைந்திட பருப்பொரு ளுணர்த்திய அருளாேனே.

அதிகர முடையவ அரவணி மகசுடர் அளித்தநல் குருபர குகவேளே

முதிர்ந்தநல் கருத்தினை முடிவொடு இருத்தியென் முனைதவம் பலித்திட அருள்வோனே..2


மதிவளர் பிறையென மதியது வளர்ந்திட முழுஅறி வினைதரும் குருவாகி

பதிபசு கயிறென பகுத்தநன் நெறிதனை புரிந்திட புனைதவப் பலனாகி

ரதிமன கணவனை ரதமதில் திரிபுரம் ரசமென எரித்தவர் சுடராகி

அதிசய இளையவ அழகிய குமரனே அனுதினம் உனைபணிந் திடுவேனே. 3


கதியென பிடித்துனை கரைதொட நினைத்தனை கருணையில் எனக்கருள் புரிவாயே

பதியென பிடித்தனை பசுகுணம் அறுக்கவே பதமதில் சரணெனப் புகுந்தேனே

விதிதரும் அசைவினில் வினைபடும் கசைதனை  வெறுத்துஉன் அடிதனில் விழுந்தேனே. 

உதிர்ந்திட விழுந்தனை உனதிரு கரத்தினில் உயர்த்திடு உமைமக பெருமானே.4


எதிர்வரும் துயரமும் எனக்கினி இனிதென எதிர்வினை படுத்திடு குருநாதா

சதிகளை சமரென சரவணத் திருகுக சடுதியில் அறுத்திடு கதிர்வேலா

எதிலுமே எனக்கினி எதிர்படு வினையதை எரித்திட சுடர்கொடு சுபலீலா

முதிர்பழ மெனஉன தடியவர் புசித்திடும் முதுவிலா குமரனே சிவபாலா. 5


நதிநுதி தனைசிகை நறுமலர் அணிந்தவர் நமசிவ யவர்பணி பெருஞான

பொதியது சுமந்தவ பொதிகையன் குருவென பனிமலர் தமிழினை தருஞ்சேயே

புதியதோர் கருத்தொடு புனைகிற புலவரின் புனைவதில் புதைந்துறை அழகோனே

மதியநல் கதிரவன் மிகுகிற வெயிலதன் மலர்முகம் ஔியுடை பெருமானே. 6


சுதியொடு இசைபட சரவண குகனுனை சரமென புனைந்திட வருவோனே

ததிகிட தகதிமி தகதக வெனதினம் தகதிகு தகவென நடமாடும்

வதியொரு புரத்தினன் விரும்பியே வணங்கிடும் விதமுடை பொருளுடை முருகோனே

ததிபல வருமதில் தினமுனை தொழுதிட திகம்பர நிலையருள் பெருமானே.7


துதிசெய ஒருதினம் துணிதரும் கருத்தினன் துதிசெயும் மருகனே சிவபாலா

துதித்திடும் அடியரை துயர்தர நினைப்பவர் தொலைந்திட அயில்விடு துணையாகி

செதிலதை செதுக்கிடும் செகக்கடல் உலவிடும் பரதவர் வணங்கிடும் கடற்வீரா

பொதியுடல் புனிதமாய் பிரிந்திட பரிந்தருள் புரிந்தவன் வணங்கிடும்  பெருமானே 8


கதிரவன் எழுகணம் ககனமும் ஔிர்ந்திட கருணையில் சிரித்திடும் கதிர்வேலா

மதியதை விரும்பியே முழுமதி தினமதில் மனமதை தருபவ அதிதீரா

குதித்துயர் வெழுந்திடும் கடலலை யதுதினம் பணிந்திட வரும்புகழ் உடையோனே

வதிக்குற மகளவள் வளைகரம் பிடித்தவ வரம்பல தருபவ பெருமானே 9


எதிர்பட எதுவரின் எனக்கொரு துணையென எழுந்திடு எழுகரை முருகேசா

துதித்திட துதித்திட துதிப்பினில் திளைத்திட திருவுளம் அருளிடு குருபாலா

புதிதென தினம்தினம் பிறந்திடும் உணர்வினில் புவியினை கடந்திட அருள்வாயே

நதிமக அறுமுக குருபர சரவண குககடம் பழகனே பெருமானே.  10






إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم