இல்லறவியல் - ஒழுக்கம் உடைமை

இல்லறத்தார் பேணும் நற்குணங்களாக வள்ளுவ பேராசான் நமக்கு விளக்குவன படியில் ஒழுக்கம் குறித்து விளக்கம் செய்கிறார். வாழ்வில் சகல நிலையிலும் ஊரார் முன் பீடுநடை தருவது ஒழுக்கம் ஒன்றே  .

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

உரை : ஒழுக்கம் முக்தியையும் மற்ற நன்மையும் தந்து உயர்வை தருவதால் ஒழுக்கம் உயிரை விட பெரியதாக பேணப்பட வேண்டும்.

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

உரை : உயிர்கள் மீதுள்ள கருணையால்   ஒழுக்கம் பேணுக. உலகில் மேலோர் தெரிந்து  காத்து முன்னேறிட அதுவே துணை

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

உரை: இல்லறத்திலும் சமூகத்திலும் சரி ஒழுக்கம் கொண்டிருப்பது அவசியம் ஒழுக்கம் இல்லாத இழுக்கு உடையவர் உலகத்தார் ஒதுக்கும் இழிந்த பிறப்பாய் ஆகிவிடுவர்.

134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

உரை : கற்ற கல்வி மறந்தாலும் மீண்டும் ஓதி கற்றுக் கொள்ள முடியும். உலகின்மிசை பிறந்த குலத்தின்மிசை வந்த ஒழுக்கம் குறைந்தால்  அக்குலம் கெடும்.

135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

உரை : பொறாமை கொண்டவனிடம் உயர்வதற்கான முயற்சி இல்லாதது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கும் உயர்வு இல்லை

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

உரை : இழுக்கம் அழிவை தருமென அறிந்த மனஉறுதி உடையோர் ஒழுக்கத்தை விடுவதில்லை

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

உரை: ஒழுக்கமடையார் மேன்மை பெறுவர். இழுக்கமுடையார் ஏற்கக்கூடாத பழியையே பெறுவர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

உரை: நன்றி(நன்மை) விளைவிக்கும் விதையாகும் நல்ல ஒழுக்கம்,  தீய ஒழுக்கம் எப்போதும் துன்பத்தையே தரும்..

தீயஒழுக்கம் என்று குறிப்பது ரெண்டு ரவுண்ட் மட்டும் தான் குடிப்பேன் என்று தீமையில் கூட ஒழுக்கமாக இருப்பவர்கள். அவர்களுக்கே துன்பம் என்றால் ஒழுக்கம் இல்லாதவர் நிலை.

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

உரை: ஒழுக்கம் உடையவர்களுக்கு தீயவற்றை தவறியும் வாயால் சொல்லக் கூட ஆகாது.

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உரை : உலகத்தோடு இணைந்து ஒழுக்கம் பேணும் அறிவில்லார் பலநூல்கள் படித்தும் கல்லாதவர் ஆவார்.

இங்கு தனித்து என் கருத்தை கூற விழைகிறேன். ஒழுக்கம் உலகோடு இணைந்து என்பதும் ஒரு தனி அறம். பாரதக்கதையில்  பீஷ்மரும் கர்ணனும் துரோணரும் தான் கொண்ட ஒழுக்கத்தில் ஒப்பில்லாதவர்களே. ஆனால் உலகம் கெடும் போது ஒழுக்கம் கடந்தாவது நல்வழி செய்யாது போனது அவர்தாம் அழிவிற்கு பெற்ற பழியாகும் .. ஆதலால் ஒழுக்கம் என்பது அனைவருக்கும் எப்போதும் நன்மை செய்வது என்பதாகும் ..


 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم