இல்வாழ்க்கை - மக்கட்பேறு

 இல்லறத்தின் பயனாய் விழைவது மழலை செல்வம் என்னும் மக்கட்பேறு.  மக்களை பெறுவதின் சிறப்பையும் வாரிசுகளால் ஒருவன் பெறும் இன்ப துன்பங்களையும் விளக்கி உரைக்கிறார் வள்ளுவப் பேராசான்..

61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

உரை : பெறுகிற செல்வங்களில் எல்லாம் தானாய் அறியக்கூடிய அறிவை அறிந்த குழந்தைகளை விட வேறு சிறந்த செல்வம் இல்லை.  செல்வங்களில் சிறந்தது உயிருள்ளவை  உயிர்களில் அறியும் தன்மை வாய்ந்தவர் மனிதர்களே அத்தகு மனித நிலை பெற்ற குழந்தை தனக்கு என்கிற உரிமையோடு வருவதால் அதை விட சிறந்த செல்வம் வேறு இல்லவே இல்லை. 


62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

உரை : ஒருவன் ஊரார் இழிவாக பேசாத வகையில் நல்ல குணங்களை உடைய பிள்ளைகளை பெற்றவன் என்றால் அவனது ஏழுபிறப்புக்கும் தீயவை தீண்டாது . என்று நன்மக்களின்  சிறப்பை உரைக்கிறார்


இக்குறளில் பிற உரைகள் ஒரு குறிப்பை விட்டமையால் இதனை விளக்கி எழுதுகிறேன்.. 

நற்குணங்கள் பெற்று ஒழுக்கமுடன் வாழ்கிற பிள்ளைகளால் ஒருவன் தன் ஏழு பிறவிக்கும் துன்பம் அடையமாட்டான் என்பது இந்துமத கோட்பாட்டில். தன் முன்னோர் குறித்து பிள்ளைகள் செய்யும் நற்காரியங்களான திதி . அன்னதானம் . கொடை ஆகியவையால்  பெறும் புண்ணியத்தை தென்புலத்தார் என்னும் பிதுர் தெய்வங்களால் நல்வினைகளாக்கி அவன் தற்போதைய பிறவியில் நற்பயன்களாக பெறுவான் என்கிற நம்பிக்கையை உணர்த்துவதாய் இருக்கிறது.. உரைகள் இக்கருத்தை மறுக்காததும் உண்மை என்றாலும். 

ஏழுபிறப்பு என்பது சந்ததிகள் என்கிற பொருளில் நாம் தர்க்கரீதியாக பார்க்கும் போது. நல்ல பிள்ளைகளை பெற்ற ஒருவனால் அவனது மரபுதொடர்ச்சியான எழுதலைமுறையும் துன்பம் அடையாது என்கிற கூற்றை வள்ளுவர் வைத்திருப்பது புரிகிறது.. உதாரணமாக ஒரு நல்ல ஜெமின்தார் இருக்கிறார் ஊருக்கு பல நன்மைகளை செய்கிறார். அவருக்கு பின் அவரது மகனுக்கும் அதே மதிப்பை ஊர் தரும். அவனுக்கான சிக்கல்களில் துன்பங்களில் ஊரே ஒன்றுகூடி நிற்கும்.    


63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

உரை : மேற்சொன்ன குறளின் இரு கருத்தினையும் உறுதி செய்யும் இ்க்குறள். 

ஒருவர் தன் மறுமை காலத்திற்கு சேர்த்த செல்வம் அவரது பிள்ளைகள். ஆதலால் அப்பிள்ளைகள் செய்யும் நற்காரியங்களின் படிவரும் அந்த செல்வமானது தன் மறுமைகாலத்தில் பயன்தரும்.. 

தான் பெற்ற பிள்ளைகள் தனக்கான பிதுர் காரியங்களை செய்வதால் கிடைக்கும் மறுமை பலன் என்பதால் மறுமைக்கு நாம் சேர்க்கும் செல்வம் பிள்ளைகளே.. 

64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

உரை : இதுவரை பெறுவதின் அவசியத்தை கூறிய பேராசான் . பெற்றதால் வருபவையை விளக்குகிறார். 

குழந்தை தன் சிறிய கையால் பிணைந்து அலசி தந்த கூழ் என்பது அழுதினை காட்டிலும் இனிமை அதிகம்.   வாழ்வில் இத்தகு ரசனை மிகுந்த அனுபவங்கள் பிள்ளைகளால் மட்டுமே கிடைக்கின்றன. 

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

உரை : தவழ்ந்து வந்து பாதம் தீண்டும் குழந்தையின் தொடுதல் உடலுக்கான இன்பம். அந்த குழறல் மொழி காதுகள் பெறும் இன்பம். 

66. குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

உரை: குழலிசையும் யாழின் இசையும் இனிதென என்றொருவர் சொல்கிறார் என்றால் இன்னும் அவர்தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கவில்லை என்று பொருள்.

67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

உரை : மேற்சொன்ன இன்பங்களை அள்ளியள்ளித் தந்ததற்காய்  தந்தையானவன் மகனுக்கு செய்யும் நன்றி உலகம் மதிக்கும் அறிஞர்கள் அவையில் அவன் முந்தி இருப்பதற்கான அறிவை தருவதாகும்.


68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

உரை : நம் குழந்தைகள் அறிவாய் இருப்பது நம்மை விடவும் உலகில்  மற்ற உயிர்களுக்கு எல்லாம் இனியது. என்பதால் அறிவாய் இருக்கும் படி வளர்க்க வேண்டும்..



69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

உரை : தாயானவள் தன்னிலிருந்து பெற்றதால் பெருமகிழ்வு பெறுவாள். அத்தகு மகிழ்வினை விடவும் ஊரார் அம்மகனை அறிஞன் என்று போற்றும் போது தான் பெற்றதால் வந்த பயனை எண்ணி இன்னும் மகிழ்வாள்.  ஆதலால் மகன்கள் ஊரார் மதிக்க சான்றோனாய் இருக்க வேண்டும், அதற்கு தந்தை அறிவினை வழங்க வழி செய்ய வேண்டும். 


70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

உரை:  மேற்சொன்ன வகையில் அறிஞனாக்கிய தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய உதவி  . இவனை மகனாய் பெற இவனது தந்தை என்ன தவம் செய்தான் என்று ஊரார் ஏங்கும் வகையில் நடப்பது..  

அதன்வழி தந்தை அறிஞனாக்க அரும்பாடு பட்டதின் பயனை அடைவார். 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post