கவிதை என்பது என்ன?.

கவிதை என்பது என்ன?.

நாம் பார்க்கும் அத்தனை விசயத்திலும் இருவித கோணம் இருக்கும் என்பது இயற்கையின் நியதி.  அது போல கவிதையும் இரு வடிவம் சார்ந்தது. ஒன்று கருத்தை ஆதாரமாக கொண்டு கட்டுக்குள் அமையாமல் சுதந்திரமாய் வருவது.. மற்றொன்று. இலக்கணம் மற்றும் ஓசை ஒருங்கில் அமர்ந்து வெளி வருவது..

இரண்டில் எது சிறந்தது? என்று நினைப்பதே தவறு.. ஆனால் எழுதும் எல்லாமும் கவிதை ஆகிவிடுமா? என்றால் என்ன பதில் சொல்வது.?..

இல்லை என்றால் புதுக்கவிதை தவறா? எனலாம். ஆம் என்றால் உரைநடை எல்லாம் கவிதையா ? எனலாம். இந்த இடத்தில் தான் கவிதைக்கு ஒரு வரையறை தேவைப்படுகிறது.. எழுதும் முனைப்பு இருக்கும் எவரும் கவிஞர் தான் என்றாலும் எழுதிய ஒன்று கவிதையா? என்றொரு பார்வை மேலெழும்பும். 

கவிதை என்பது கதை சொல்லும் பணியல்ல. கதைக்கு தகவல் மட்டும் போதும் கவிதைக்கு உணர்வு தான் முதலிடம்.. வாசகனை ஒரு வீணைபோல் நம் இஷ்டத்துக்கு மீட்டுவதற்கு கவிதை ஒரு ஆயுதம்..

ஒரு வரி ஆனாலும் வாசகன் சிலிர்க்க வேண்டும் . அழ வேண்டும் உச்சிமுகர வேண்டும். அந்த தகுதியை கவிதைக்கு தருபவனே கவிஞருள் கவிஞனாக மேலெழுகிறான்..

உணர்ச்சிக்கு கொடி தூக்குவதாலே தான் கவிதைக்கு பொய்யும் உவமையும் தரப்பட்டன. ஓசை அதற்கு துணை நின்றது.

இதில் உரைவீச்சு என்பது கவிதை ஆகாது என்று ஒரு வாதமும் உண்டு. ஆனால். கவிதை ஒரு வடிவத்தினது இல்லை..

சப்தமிடாதீர்கள்
எங்கள் கல்லறை தூக்கம்
கெடுகிறது..

என்பதை கவிதையாக அங்கிகரிக்காமல் விட முடியுமா?.

வாட்கண் விழியால் விளைபோர் புரிவாள்
பாட்டின் சுவையாய் புதிதும் மொழிவாள்
ஆட்கள் எதிரே அலைதல் அரிதாம்
ஈட்டி எனவே இருகண் கொண்டாள்..

இந்த அமைப்பிற்கு அழகில்லை என்றுவிட முடியுமா?.  இல்லை. கவிதை வடிவம் எதுவாயினும் நெஞ்சில் கூராய் பதிதல் அதன் கடமை.

கம்பன் ஒன்றை சொல்கிறான். கவிதை நதி போல இருக்க வேண்டும் என்கிறான்.

நதி - ஊற்றெடுப்பது போல் கவிதை ஊற்றெடுக்க வேண்டும்.
நதி - வளைந்து நெளிந்து வேகமாக பயணிப்பது போல் கவிதை பயணிக்க வேண்டும்.
நதி - வாழவும் வைக்கும் ஊரையும் அழிக்கும் அதுபோல் கவிதை வாழ்வும் தர வேண்டும் வீழவும் செய்தல் வேண்டும்.

நதி - சலனமற்ற இருந்தாலும் சப்தமிட்டு பறந்தாலும் அழகு தரும். கவிதையும் அதுபோல அழகு தர வேண்டும்.

சொற்கள் காடு போல நிறைந்து இருந்தால் கவிதை கிடையாது. சொற்கள் இறகு போல குறைந்து இருந்தால் தான் கவிதை பறவையாய்  பறக்கும்..

ஆம் கவிதை என்பது காலத்தை தாண்டி பறக்கும் கால இயந்திரம். அதற்கு செற்கள் செதுக்கப் படவேண்டும்.. பார்வை விரிவுபட வேண்டும்.. இங்கே ஒற்றை சொல் ஒரு கதை சொல்லும்..

தொடர்ந்து அந்த சொற்கள் கதை சொல்லும் கவிதைகளை காட்டுகிறோம்.. கற்கை நன்றே என்றே எண்ணுகிறோம்..  

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post