இல்லறத்தில் ஈடுபட்டு சமூகத்தோடு வாழும்போது தேவையான குணங்களைவகுக்கும் படியில் பிறர் பொருளை அநீதியாக கவராமை பற்றி பேராசான் விளக்கம் செய்கிறார்.
171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
உரை : நீதியான நடுநிலை இன்றி நல்ல பொருளை பறித்துக் கொண்டால் அவர் குடி அழிந்து அதில் குற்றங்களும் மிகும் .
172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
உரை: நடுநிலையை மீறுதலை இழிவாக கருதுபவர் பிறர் பொருளை அநீதியாக பறித்து பழிபடுவதை செய்ய மாட்டார்.
173. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
உரை : அறவழியில் வரும் மற்ற பெரிய இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர் அறமின்றி பறிக்கும் சிறியஇன்பம் தரும் செயலை செய்ய மாட்டார்.
174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
உரை : ஐம்புலனை வென்று புனிதமாய் காட்சி தருபவர் . தன் வறுமையினால் கையில் இல்லாத போதும் அநியாயமாய் பிறக்க மாட்டார்.
175. அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
உரை : பிறர் பொருளை கவர்தல் செய்பவன் பரந்து விரிந்த அறிவுடையவனாக இருந்தும் என்ன பயன்?.
176. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
உரை: அருள் விரும்பி அறவழி நின்றவன் கூட பிறர் பொருள் விரும்பி பொல்லாதவை செய்ய நினைக்க அழிவான்.
177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
உரை : அநியாயமாய் பறித்த பொருள் எப்போதும் நன்மை செய்யாது என்பதால் கவர்ந்து பயனடைய வேண்டாம்
178. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
உரை : குறைவில்லா செல்வம் பெற என்ன வழியென்றால் பிறர் செல்வத்தை கவர எண்ணாதே.
179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
உரை : அறம் அறிந்து கவராத (திருடாத) அறிவுடையாரின் திறமை அறிந்து சேரும் செல்வம்..
180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
உரை : பிறர் பொருள் விரும்புதல் அழிவு தரும் . விரும்பாமை கர்வம் கொள்ளும் பெருமை தரும்.
إرسال تعليق