திருசெந்தூர் பிள்ளைத்தமிழ்

 முன்னுரை


யேல் என்னும் அடுக்கு.  தாலோ, தாலேலோ என இணைத்தும் தால் எனத்

தனித்தும் மரீஇயிற்று.  இது ஏழாந் திங்களில் நிகழ்வது. 


சப்பாணிப் பருவம்:- இருகைகளையும் ஒருங்குசேர்த்துக் கொட்டும்

பருவம்.  இஃது ஒன்பதாந் திங்களில் நிகழ்வது. 


முத்தப் பருவம்:- குழந்தையை முத்தம் தருமாறு தாய் தந்தை

முதலியோர் வேண்டும் பருவம்.  இது பதினோராத் திங்களில் நிகழ்வது. 


வருகைப் பருவம்:- நடக்கும் பருவக் குழந்தையைத் தம்பால் நடந்து

வருமாறு தாய் தந்தை முதலியோர் வேண்டுதல்.  இது பதின்மூன்றாந்

திங்களில் நிகழ்வது. 


அம்புலிப் பருவம்:- சிறுமியர் சிறு வீடுகட்டி விளையாடுகின்ற காலை

அதனைச் சிறுவர் தம் காலால் அழித்துக் கெடுத்தலைக் கூறுகின்ற பருவம். 

இதிற் சிறுமியர் ‘எம் வீட்டை அழிக்க வேண்டா’ என வேண்டுவதாகக்

கொண்டு அமைத்துக் கூறுவது, இது பதினேழாந்திங்களில் நிகழ்வது.


சிறுபறைப் பருவம்:- குழந்தை சிறுபறை கொட்டுகின்ற பருவம்.  இது

பத்தொன்பதாந் திங்களில்நிகழ்வது. 


சிறுதேர்ப் பருவம்:- சிறுதேர் உருட்டி விளையாடு தலைத்தெரிவிக்கும்

பருவம், இது இருபத்தொன்றாம் திங்களில் நிகழ்வது.


சிறப்புப் பாயிரம்


நேரிசை வெண்பா 


செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங்

கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான்- அந்தோ

திருமாது சேர்மார்பன் தேர்பாகற் கன்பு

தருமால் பகழிக்கூத் தன்.


(அருஞ்சொல் உரை) பிள்ளைக்கவி - பிள்ளைத்தமிழ் நூல்.  அந்தோ.

வியப்பிடைச்சொல்.  திருமாது-இலக்குமி தேவி.  தேர்ப்பாகன் -

அருச்சுனுக்குத் தேரோட்டும் சாரதியான கண்ணன்.  மால்-அழகு,

பெருமை.             


(1)


அவையடக்கம்


   அத்தனையும் புன்சொல்லே யானாலும் பாவேந்தர்

எத்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார்-முத்தி

புரக்குமரன் தந்தகந்தன் பூணணிமுந் நான்கு

 கரக்குமரன் பிள்ளைக் கவி.



2


திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்


    (அ-ரை) அத்தனையும் - முழுமையும்.  புன்சொல்.  புன்மொழி. 

பாவேந்தர் - கவிராயர் முத்திரபுரக்கும் அரன் வீடு உதவும் சிவன்.  கந்தன்

- பற்றுக்கோடாயுள்ளவன்.  கந்து - பற்று.  முந்நான்கு கரம்குமரன்-

பன்னிருகைகளுடைய முருகன்.                               


(2)


நூற்பயன்


மருநாள் மலர்ப்பொழில் உடுத்ததட மெங்கும் அலை

வாய்கொழித் தெறியுமுத்தை

வண்டலிடும் எக்கர்புடை சூழ்திருச் செந்தில்வரு

மயில்வா கனக்கடவுளெங்


    குருநாதன் ஒரு தெய்வ யானைதன் பாகன்

குறக்கொடிக் குந்தழைசிறைக்

கோழிக் கொடிக்குங் குமார கம்பீரன்

குறும்பிறை முடிக்கும்பிரான்


    இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமும்

    எங்குமுட் டாதளக்கும்

இறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகும்

    எம்பிரான் இனிய பிள்ளைத்


    திருநாமம் எழுதுவார் கற்பார் படிப்பார்

    செகம்பொது அறப்புரந்து

தேவாதி தேவரும் பரவுசா யுச்சியச்

 சிவபதத் தெய்துவாரே.


    (அ-ரை) மரு-மணம்.  நாள் மலப்பொழில்-அன்றலார்ந்த

பூக்களையுடைய சோலை.  தடம்-தடாகம்.  குளம்-வண்டல் இடும்-மகளிர்

விளையாடும்.  எக்கர்-மணல்மேடு.  வாகனம்-ஊர்தி


காப்புப்பருவம்


3


தெய்வயானைதன் பாகம்-தெய்வயானையைப் பாகத்திலுடையவன். 

குறக்கொடி-குறக்குலத்திற் பிறந்த கொடிபோன்ற வள்ளியம்மை.  குறும்பிறை-

ளஞ்சந்திரன்.  பிரான்-எப்பொருட்கும் இறைவன் கம்பீரன் -

செருக்குடையவன்.  நாழி-நான்குழக்குக் கொண்டது.  அறம்-தரும்

வகைகள்.  முட்டாது-குறைவு படாமல். நாமம்.  பெயர்.  பொது அறபுரந்து-

னக்கே உரிமையானதாகக் காத்து பரவு-துதி.  சாயுச்சியம்-இறைவனோடு

இரண்டறக் கலப்பது.


க. காப்புப்பருவம்


திருமால் 


 பூமா திருக்கும் பசுங்களபப்

புயயூ தரத்துப் புருகூதன

போற்றக் ககன வெளிமுகட்டுப்

புத்தேள் பரவப் பொதிகைமலைக் 


    கோமா முனிக்குத் தமிழுரைத்த

குருதே சிகனைக் குரைகடற்குக்

குடக்கே குடிகொண் டிருந்தசெந்திற்

குமரப் பெருமான் தனைக்காக்க 


தேமா மலர்ப்பொற் செழும்பொகுட்டுச்

         செந்தா மரையில் வீற்றிருக்குந்

    தேவைப் படைத்துப் படைக்குமுதல்

         சேரப் படைத்துப் படைக்கும்உயிர் 


ஆமா றளவுக் களவாகி

         அனைத்துந் தழைக்கும் படிகருதி

    அளிக்கும் படிக்குத் தனியேசங்

         காழி படைத்த பெருமாளே.


4


திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்


(அ-ரை) களபம்-மணப்பொருள்.  புயபூதரம்-தோளாகியமலை.  புருகூதன்-இந்திரன்.  ககனவெளி-ஆகாயவெளி, முகடு-உச்சி.  புத்தேள்-சிவபெருமான். 

முனி-அகத்தியன்.  தேசிகன்-ஆசிரியன்.  குரைகடல்-ஒலிக்கின்ற கடல்,

குறை: வினைத்தொகை.  குடக்கு-மேற்கு.  குமரப்பெருமான்-முருகனாகிய

பெருமையையுடையவன்.  பெர்குட்டு-தாமரைக் கொட்டை.  தேவு-பிரமன். 

படைக்கு முதல்-படைப்புக்கு முதலாகிய பிரகிருதிமாயை. அளிக்கும்-காக்கும். 

சங்கு ஆழி-சங்கும் சக்கரமும்.  படைத்த-கைக்கொண்ட, பெருமாள்-

பெருமையை ஆளுதலைப் பொருந்தியவன், திருமால்


(1) 


சிவபெருமான் 


உடல்வளை குழவி மதியமும் நதியும்

உரகமும் ஒழுகு செஞ்சடைக் காட்டினர்

உமைமுலை குழைய மருவிய புனிதர்

உரைகொடு பரவு தொண்டரைக் காத்தவர்

உமிழ்திரை மகர சலதியில் விளையும்

உறுவிட வடவை கண்டமட் டேற்றினர்

உடைமணி கனக பரிபுர முரல

ஒருமுறை பவுரி கொண்டமெய்க் கூத்தினர் 


    வடவரை முதுகு நெளிநெளி நெளிய

வரிசிலை யெனவொர் அம்பினைக் கோத்தவர்

மறுவறு முழுவெண் நிலவெழு முறுவல்

வளரொளி இருள்வ னங்கெடப் பூத்தவர

மருவிய சகள வடிவினர் அரிய

வடகலை தமிழ்வ ளம்பெறச் சேர்த்தவர்


காப்புப்பருவம்


5


மதுரையில் இறைவர் இரசத பொதுவர்

மணமலி பதயு கங்களைப் போற்றுதும் 


இடவிய மதுர வரியளி குமுறி

இடறிய களப குங்குமத் தூட்பொதி

இமசலம் உழுகு கனகன விரகம்

எழுகுற வனிதை சிந்தையிற் சேர்ப்பனை

இடிபடு முரச முழவுடன் அதிர

எதிர்பொரு நிருதர் தம்படைப் போர்க்களம்

இடமற முதிய கழுதுகள் நடனம்

இடவடல் புரியு மொய்ம்பனைத் தூற்றிய 


கடதட வழுவை முகமுள கடவுள்

   கருணையின் முதிய தம்பியைப் பார்ப்பதி

கரமலர் அணையில் விழிதுயில் மருவி

    களிபெறு குதலை மைந்தனைப் பூப்பயில்

கடிகமழ் தருவின் இறைமகள் புதிய

    கலவியின் முழுகு கொண்களைப் போற்றிசெய்

கலைமகள் பரவு குமரனை மதுர

    கவிதரு குரிசில் கந்தனைக் காக்கவே. 


    (அ-ரை) குழவி-இளமை.  உரகம்-பாம்பு : மார்பால் நகர்வது.

 குழைய மருவிய புனிதர்-குழையும்படி தழுவிய தூயர்.  கச்சியில் கம்பை யாற்றில் சிவபூசை யாற்றிய உமையம்மை, வெள்ளப் பெருக்கால் தான்

அமைத்து வழிபட்ட மணல் இலிங்கம் கெடாத வண்ணம் மார்போடும்,

வளைக்கையோடும் தழுவிய வரலாறு ஈண்டு குறிக்கத் தக்கது.  மகரசலதி-மகர மீன்களையுடைய கடல்.  வடவை வடவைத்தீ.  கனகபரிபுரம் முரல-பொற்சிலம்பு ஒலிக்க.  பவுரி-கூத்துவகை. முறுவல்-சிரிப்பு. இரசத


6


திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்


பொதுவர்-வெள்ளியம்பலாவாணர்.  பதயுகம்-இரண்டடிகள். அளி-வண்டு.

குறவனிதை-குறமாது.  விரகம்-வேட்கை.  நிருதர்-இராக்கதர், கழுதுகள்-

பய்கள். அடல்-வலிமை, கொலை.  இடவிய-அகலமான.  பயில்-பொருந்து. 

தருவுக்கிறை-கற்பக தருவின் நிழலில் அரசு புரியும் இந்திரன்.  கொண்கன்-கணவன்.  குரிசில்-நம்பி.  பெருமையிற் சிறந்தவன்-கடிகமழ்-மணம்

வீசுகின்ற.         


(2) 


உமையம்மை



அரிபிரமர் சந்த தம்பு கழ்ந்திடு

பரசுடைய நம்பர் பங்கின் மென்கொடி

அகிலலோகமும் ஆதரத் தாற்ப டைத்தவள்

அரிவைமட மங்டகை மென்க னங்குழை

திரிபுரை அணங்கு கங்கை அம்பிகை

அகளமாய்அனு பூதியிற் பூத்த பொற்கொடி

அபினவை முகுந்தர் தங்கை சுந்தரி

உரகபண பந்தி கொண்ட கங்கணி

அமுதமூறிய பாடலுக் கேற்ற சொற்குயில்

அறுசமய முங்க லந்து நின்றவள்

மறலிபர வும்ப்ர சண்ட சங்கரி

அழகெலாமிது தானெனப் போற்று சித்திர



    முரிபுருவ வஞ்சி திங்கள் தங்கிய

திருமுகம லர்ந்த பைங்க ருங்கிளி

முதல்விபூரணி ஞானவித் தாய்க்கி ளைத்தவள்

முருகுவிரி கொந்த ளம்பி றங்கிய

மணிமவுலி மண்ட லங்கொள் செஞ்சடை

முடிமனோன்மணி வாலைவற் றாக்கு ணக்கடல்

முகிழ்முலை சுமந்து நொந்த சைந்திறும்


    இறுமென மருங்கி ரங்க இன்புறு

       முறுவலாடிய கோமளத் தாற்பெ ருத்தவள்

முறைமுறை முழங்கு கின்ற கிண்கிணி

பரிபுரம் அலம்பு செம்ப தம்புரை

முளரிநாண்மலர் வாழ்வெனப் போற்றி நிற்குதும் 


   உரியபதி னெண்க ணங்க ளஞ்சது

மறைமுனிவ ரும்ப ரிந்து நின்கழல்

உறுதிதானென நாவெடுத் தேத்தி நித்தலும்

உளமிக மகிழ்ந்து செங்க ரங்களின்

மலர்கொடு வணங்கி யஞ்சல் என்றெமை

உடைமையாயருள் நீயெனக் காத்த நட்பனை

உடுமுக டதிர்ந்து விண்த லங்களும்

அரிய பகிரண்ட மும்பி ளந்திட

உதறுதோகை மயூரனைத் தோற்ற முற்றெழும்

உபநிடத மந்த்ர தந்த ரந்தனில்

அசபையி லடங்கும் ஐம்பு லன்களில்

உவகை கூரும னோகரக் கூத்த னைப்பொரு   


    தரியலர் நெருங்க செங்க ளம்புகு

நிசிரர் துணிந்த வெம்ப றந்தலை

தழுவுபாடல் விசாகனைப் பாற்க டற்றரு

தரளநகை செங்க ருங்கண் இந்திரை

குறமகள் மணம்பு ணர்ந்த திண்யுய

சயிலமோகன மார்பனைத் தோட்டி தழ்ப்பொதி

தழைமுகை யுடைந்து விண்ட ரும்பிய

புதுநறவு சிந்து பைங்க டம்பணி

தருணசீதள வாகனைக் கோட்ட கத்துயர்

சரவண மிலங்க வந்த கந்தனை

முருகனை விளங்கு செந்தில் வந்திடு

சமரமோகன வேலனைக் காத் தளிக்கவே.


(அ-ரை) சந்ததம்-எப்பொழுதும். பரசடையநம்பர்-மழுவைக் கொண்ட

சிவபெருமான்.  ஆதரம்-விருப்பம் அனுபூதி-உண்மை, அனுபவம்.  உரக

பணபந்தி-பாம்பின் படவரிசை.  அகளம்-கள்ளமின்மை.  அபினம்-பின்ன

மில்லாத.  கங்கணி-கங்கணத்தையுடையவள். மறலி-இமயன்.  பூரணி -

நிறைந்தவள்.  வித்து-முளை.  கொந்தளம்-கூந்தல்.  மவுலி-முடி, கிரீடம்.

வாலை-இளம்பெண்.  இறும்-ஒடியும் மருங்க இரங்க-இடைவருந்த. 

கோமளம்-அழகு.  புரை-ஒத்த.  நிற்குதும்-நிற்போம். பகிர்அண்டம்

புறக்கோளம்.  அசபை - வெளிப்படாமல் உள்ளே செபித்தல்.  உடு-

ட்சத்திரம். மனோகரம்-மகிழ்ச்சி. தரியலர்-பகைவர்.  நிசிசரர்-இரவில்

இயங்குவார்.  வெம் பறந்தலை - கொடிய போர்க்களம். இந்திரை-இலக்குமி.

சயிலம்-மலை.  மோகனம்-புணர்ச்சி.  தோடு-இதழ். முகை-மொட்டு. 

விண்டு-விரிந்து.  தருணம்-புதுமை, இளமை.  கோட்டகம்-இமயமலை. 

சமரமோ கனவேலன்-போர் விரும்பும் முருகன்.  சரவணம்-இமயமலை

அடிவாரத் தடாகம்.  நாணற்புல் அடர்ந்த பொய்கை.  ஆகுபெயர்.


(3) 


பிள்ளையார்


    கருணையின் வழிபடு முதியவள் தனையுயர்

கயிலையி னொருமுறை உய்த்த விதத்தினர்

கனவட கிரிமிசை குருகுல மரபினர்

கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்

கலைமதி யினைஇரு பிளவுசெய் தொருபுடை

கதிரெழ நிறுவிய ஒற்றை மருப்பினர்

கடுநுகர் பரமனை வலமுறை கொடுநிறை

கனிகவர் விரகுள புத்தி மிகுத்தவர்

பொருவரும் இமகிரி மருவிய பிடிபெறு

பொருகளி றெனமிகு பொற்பு விளைத்தவர்

பொதி அவிழ் நறுமலர் அணைமிசை தமதுடல்

புனகம் தெழவொரு சத்தி தரித்தவர்


பொதுவற விடுசுடர் முழுமணி யொளிவிடு

பொலிவெழு பவளம தித்த நிறத்தினர்.

புகர்முகம் உடையவர் குடவயி றுடையவர்

புகழிரு செவியில்நி றுருத்தி வழுத்துதும்



இருமையும் உதவிய சிவபர சமயமும்

இமையவர் உலகும ளித்த களிப்பனை

இசைமுரல் மதுகர முறைமுறை பெடையுடன்

இடறிய முகைவிரி செச்சை வனப்பனை

இளகிய புளகித மலைமுலை யரமகள்

இகலிய புலவிய கற்று மழுப்பனை

இகல்புரி பரநிசி சரர்குல கலைகனை


எனைவழி யடிமைப டைத்திடு நட்பனை



அருமறை யுரைதரு பிரமனை அமரரும்

அடிதொழ விடுசிறை விட்ட திறத்தனை

அடியவர் கொடுவினை துகள்பட நடமிடும்

அழகிய சரணம் அளித்த வரத்தனை

அளவறு கலவியின் முழுகிய குறமகள்

அழகினில ஒழுகியி ருக்கு மயக்கனை

அலையெறி திருநகர் மருவிய குமரனை

அறுமுக முருகனை நித்தல் புரக்கவே.



(அ-ரை) வழிபடு முதியவள் - பூசித்த மூத்தவளாகிய ஒளவை.  உய்த்த - செலுத்திய, உய் : பகுதி.  வடகிரிமிசை-


வடமலையாகிய மேருவில்.  குருகுல மரபினர் கதை-கவுரவபாண்டவர்களின்

கதையாகிய பாரதம்.  “வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன

நாள், ஏடாக வடமேரு வெற்பாக வெங்கூர் எழுத்தாணி தன்.  கோடாக

எழுதும் பிரான்” என்ற வில்லிபாரதச் செய்யுளால் அறிக.  புடை-பக்கம்.

மருப்பு-கொம்பு.  கடுநுகர்-நஞ்சுண்ட, விரகு-நுட்பம்.  பொருவரும்-ஒப்பற்ற. 

புளகிதம்-மயிர்ச்சிலிர்ப்பு, மகிழ்ச்சி.  புலவி-ஊடல், பிணக்கம், குலம்-கூட்டம்,

இளம்.  துகள்பட-பொடியாக.  நடம்-நடனம், கூத்து.  மழுப்பனை-இங்கித

நயம் பேசுபவனை.  மயக்கனை-மயக்கமுடையவனை.  நித்தல்-தினம்; நித்தம்

என்பதன் போலி.


(4)


கலைமகள்



    அவனி பருகிய மால்திரு உந்தியில்

அமரு மொருபிர மாவெனும் அந்தணன்

அரிய சதுமறை நாவிலி ருந்தவள்

அளவில் பலகலை யோதியு ணர்தவள்

தவள முளரியில் வாழ்வுபு ரிந்தவள்


தவள மணிவட மாலைபு னைந்தவள்

தவள வடிவுள வாணிசு மங்கலி


தனது பரிபுர பாதம் இறைஞ்சுதும்

உவரி முதுதிடர் பாயவி டம்பொதி

உரகன் மணிமுடி தூள்பட மந்தரம்

உலைய எறிசுழல் மாருதம் எங்கணும்

உதறு சிறைமயில் வாகனன் இன்புறு

கவரில் வரிவளை சூல்கொடு தங்கிய

கமட முதுகினில் ஏறநெ டுந்திரை

கதறு கடலலை வாய்முரு கன்பெறு

கருணை தருகவி மாலைவி ளங்கவே.


(அ-ரை) அவணி பருகிய மால்-ஊழிக்காலத்து உலகம் உண்ட திருமால். 

உந்தி-உந்திக்கமலம், கொப்பூழ்.  தவளமுளரி-வெண்டாமரை.  இறைஞ்சுதும்-வணங்குவோம். உவரி-கடல், உவர்ப்புடையது, பௌவம்.  உரகன்-ஆதி

சேடன், உலைய-கெட.  மாருதம்-காற்று.  கவரில்-பிளப்பில், வெடிப்பில்,

வளை-சங்கு.  சூல்-கருப்பம்.  கமடம்-ஆமை.  அலைவாய்-திருச்செந்தூர்.


(5) 


 


அரிகரபுத்திரன்



    வரியு நீள்சடி லத்திடை மகுட ராசித ரித்தவர்

வளையு  நீடுக ருப்புவில் மதுர வாளிதொ டுத்தவர்

அரிய பூரணை புட்கலை அரிவை மார்இரு பக்கமும்

அழகு கூரும கிழ்ச்சியர் அடிவிடி டாமல்வ ழுத்துதும்

உரிய நான்மறை நித்தலும் உறுதி யாகவ ழுத்திய

உவமை யாசுக வித்துறை உதவு நாவலன் முற்றிய

பரிய வாளைகு தித்தெழு பரவை சூழுந கர்க்கிறை

பழநிவேலவ னைப்புகழ் பனுவல் மாலைத ழைக்கவே.


 


 


(அ-ரை) சடிலம்-சடை.  மகுடராசி. கிரீடக்கூட்டம்.  வாளி-அம்பு.  பூரணை

புட்கலை-ஐயன் தேவிகள்.  பரவை-கடல் ஆசுகவி-பொருளடி பாவணி

முதலியன கொடுத்து விரைந்து பாடுக எனப் பாடும் கவி.  மற்றைக் கவிகள்

மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும்.         


(6)


 


பகவதி



    விளையுஞ் செழுந்தேன் உடைந்துமுகை விண்டொழுகு

வெண்டா மரைப்பொகுட்டுவேதா முடித்தலை முடிக்குஞ் சடாடவியள்

 வெங்கொலை மடங்கலேறி 


வளையும் பனிப்பிறை மருப்புக் குறுங்கண்நெடு

மயிடாசு ரன்சிரத்தில்

வலியநடம் இடுகுமரி பகவதிச ரோருக

மலர்த்தாள் வணக்கமுறுவாம் 


உளையுந் தடந்திரைத் திமிரதம ரக்குழி

உவர்ப்பறா மகரவேலை

ஓலியிடுங் குண்டகழி சுவறிமே டாகவேல்

உள்ளுறை கழித்துநிருதக் 


களையுங் களைந்துகலன் அணிபுலோ மசைதன்மங்

கலநாண் அளித்தபெருமாள்

கடியமயில் வாகனப் பெருமாள் உவந்தெனது

கவிமாலை கொண்டருளவே.



    (அ-ரை) வேதா-பிரமன்.  சடாடவி-சடைக்காடு. மடங்கல்-சிங்கம். 

மகிடாசுரன்-எருமைக்கடா வடிவினனான அசுரன்.  மகிடம்-எருமை. 

சரோருகம்-தாமரை; நீரில் முளைப்பது.  திமிரம்-இருள்.  தமரம்-பேரொலி. 

குண்டு அகழி-ஆழமாகத் தோண்டப்பட்ட கடல்; சாகரம், சுவறி-வற்றி. 

புலோமசை-இந்திராணி, புலோமன் மகள்.  மங்கலநாண்-தாலி. கடிய-

வேகமான.          


(7)


காளி


  காயுங் கொடும்பகைத் தாருக விநாசினி

கபாலிகங் காளிநீலி

காளிமுக் கண்ணிஎண் தோளிமா தரிவீரி

கவுரிகலை யூர்திகன்னிபாயுந் தழற்புகைப் பாலைக் கிழத்திவெம்

பண்ணம் பணத்திமோடி

பரசுதரன் உடன்நடனம் இடுசூலி சாமுண்டி

பாதார விந்தநினைவாம்



ஆயும் பெருபனுவ லாசுகவி மதுரகவி

அரியசித் திரகவிதைவித்

தாரகவி இடுமுடிப் புக்குள மயங்காமல்

அடியவர்க் கருள்குருபரன்



தேயும் பனிப்பிறைத் திருநுதற் கடல்மகளிர்

தெள்நித் திலங்கொழித்துச்

சிற்றில்விளை யாடல்புரி யுந்திருச் செந்தில்வரு

சேவகன் புகழ்பாடவே.



(அ-ரை) காயும்-கோபிக்கும். தாருக விநாசினி-தாருகாசுரனைக் கொன்றவள்.

கலையூர்தி-மானை வாகனமாக உடையவள். கங்காளி-முழு எலும்பு

அணிந்தவள். பாலைக்கிழத்தி-பாலைநிலத்தேவி. மோடி-வனக்காளி. பரசுரன்-மழுவாளி. பாதாரவிந்தம்-அடிமலர். முடிப்புக்குஉளமயங்காமல்-முடிவுகளுக்கு

மனம் கலங்காதபடி, பனி-குளிர்ச்சி. நித்திலம்-முத்து. சேவகன்-வீரன்       


(8)


ஆதித்தர்



வெள்ளப் பெருந்துளி இறைக்கும் பெருங்காற்று

வெண்டிரையின் மூழ்கியேழு

வெம்புரவி ஒற்றையா ழித்தடந் தேரேறி

வேதபா ரகர்இறைஞ்சப்பள்ளக் கடல்நிரை கலக்கியூ ழியின்இருட்

படலமுழு துந்துடைத்துப்

படர்சுடர் விரித்துவரு பன்னிரு பதங்கர்பொற்

பாதமலர் சென்னிவைப்பாம்



உள்ளக் கறிப்பறா வரிவண்டு பண்பாட

ஓதிம நடிக்கமுள்வாய்

உட்குடக் கூன்வலம் புரிமுத்தம் உமிழநீர்

ஓடையிற் குருகுகாணக்

கள்ளக் கருங்கட் சிவந்தவாய் வெண்ணகைக்

கடைசியர் நுளைச்சியருளங்

களிகூரும் அலைவாய் உகந்தவே லனையெங்கள்

கந்தனைக் காக்கவென்றே.



(அ-ரை) திரை-அலை. ஆழி-சக்கரம், உருளி. புரவி-குதிரை, வேத பாரகர்-வேதத்தை மேற்கொண்டவர். மறைவோர். படலம்-திரை, கூட்டம். பதங்கர்-சூரியர். ஓதிமம்-அன்னம். கூன் வலம்புரி-வளைந்த வலம்புரிச்சங்கு. குருகு-நாரை. நுறைச்சியர்-நெய்தல்நில மகளிர்.                        


(9)



முப்பத்துமுக்கோடி தேவர்கள்



    பொதுவி லாடு மத்தற்க நீடு

பொருளை யோதி ஒப்பித்தசீலர்

புணரி தோய்ந கர்க்குச்ச காயர்

புலமை நீதி யொப்பற்ற கேள்வர்



குதலை வாய்மொ ழிச்சத்தி பாலர்

குருதி பாய்க திர்க்கொற்ற வேலர்

குறவர் பாவை சொற்கத்தின் மோகர்

குமரர் காவ லுக்கொத்த காவல் 


மதுர கீத விற்பத்தி வாணர்

மகுட வேணி முத்துத்த ரீகர்

மவுன போன பத்திக்க லாபர்

மனையில் வாழ்வு வைப்புற்ற நேயர் 


முதுமை யான சொற்பெற்ற நாவர்

முனிவர் வேள்வி இச்சிக்கும் ஊணர்

முடிவி லாதகற்பத்தின் ஊழி

முதல்வர் தேவர் முப்பத்து மூவரே. 


    (அ-ரை) பொது-அம்பலம். மத்தர்க்கு-ஊமத்த மாலையணிந்த

சிவனுக்கு, நீடு பொருளை-பிரணவப் பெரும்பொருளை. சகாயர்-உதவியாளர்.

கேள்வர்-உரியவர். சத்திபாலர்-சத்திகட்குப்பாலராய் இருந்தவர். சொற்கம்-கொங்கை; முலை. உத்தரீகர்-மேலாடையர். கலாபர்-மயிலுடையவர்.                        


(10)


-----


2,செங்கீரைப் பருவம் 


  வெங்காள கூடவிடம் ஒழுகுபற் பகுவாய்

விரித்துமா சுணம் உமிழ்ந்த

வெங்கதிர் மணிக்கற்றை ஊழியிரு ளைப்பருக

வேய்முத் துதிர்ந்து சொரியக் 


கங்காளர் முடிவைத்த கங்கா நதிக்கதிர்

கடுப்பக் குறுங்க வைக்காற்கவரியின் பருமுலைக் கண்திறந் தொழுகுபால்

கதிர்வெயிற் படமு ரிந்து 


மங்காமல் இரசதத் தகடெனச் சுடர்விட

மலைக்குறவர் கண்டெ டுத்து

வண்தினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற

மகளிருளம் ஊச லாடச் 


செங்காவி விழுபருகு பன்னிருகை மேகமே

செங்கீரை யாடி யருளே

திரையெறியும் அலைவாய் உசுந்தவடி வேலனே

செங்கீரை யாடி யருளே. 


(அ-ரை) வெங்காளகூடம்-கொடிய நஞ்சு. பகுவாய்-பிளந்த வாய். மாசுணம்-பாம்பு, மணி-இரத்தினம். ஊழி-உகந்தகாலம். வேய்-மூங்கில். கங்காளர்-முழு

எலும்பணிந்த சிவபெருமான். கடுப்ப-ஒப்ப. சுவை-பிளப்பு. கவரி-எருமை.

முரிந்து-ஒடிபட்டு. இரசதம்-வெள்ளி. வணிதினைக்கு எருஇடும்-வளவிய தினைப்பயிர்க்கு உரமாகப்போடும். ஊசல்-ஊஞ்சல். சாரல்-மலைப்பக்கம்,

அலைவாய்-கடலிடம். உகந்த- விரும்பிய.                                     


(11)


 


  கறைகொண்ட முள்ளெயிற் றுத்துத்தி வரியுடற்

கட்செவிப் பஃற லைநெடுங்

காகோ தரச்சிர நெளிக்கவட பூதரங்

கால்சாய மகரம் எறியுந் 


துறைகொண்ட குண்டகழ்ச் சலராசி யேழுஞ்

சுறுக்கெழ முறுக்கெ யிற்றுச்

சூரன் பயங்கொளச் சந்த்ரசூ ரியர்கள்செந்

தூளியின் மறைந்தி டத்திண்பொறைகொண்ட சுரர்மருவும் அண்டகோ ளகைமுகடு

பொதிரெறிய நிருதர் உட்கப்

பூச்சக்ர வாளகிரி கிடுகிடென வச்சிரப்

புருகூதன் வெருவி வேண்டுந்



திறைகொண்ட ளக்கவரு மயிலேறு சேவகா

செங்கீரை யாடியருளே

திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலவனே

செங்கீரை யாடி யருளே.



(அ-ரை) கறை-விடம், நஞ்சு; முள்எயிறு-முள்போன்ற பல். துத்தி-புள்ளி. கட்செவி-கண்ணையே காதாகவுடையது; பஃறலை-பலதலை. காகோதரம்-ஆதிசேடனாகிய பாம்பு. வடபூதரம்-வடமலை. சலராசி-நீர்த்திரள் சுறுக்குஎழ-வற்ற. செந்தூளி-சிவந்த தூசி. கோளகை-வட்டம். பொதிர் எறிய-ஓட்டை பட, உட்க-பயப்பட. உட்கு என்னும் பகுதியடிப் பிறந்த வினையெச்சம், கிரிமலை; திறை-கப்பம், வெருவி-பயந்து; அஞ்சி. வெருவு; பகுதி.                     


(12)


    ஏர்கொண்ட பொய்கைதனில் நிற்குமொரு பேரரசின்

இலைகீழ் விழின்ப றவையாம்

இதுநிற்க நீர்விழின் சுயலாமி தன்றியோர்

இலையங்கு மிங்கு மாகப்



பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்

பாதியுஞ் சேல தாகப்

பார்கொண்டி ழுக்கஅது நீர்கொண் டிழுக்கவிப்

படிகண்ட ததிச யமெனநீர்கொண்ட வாவிதனில் நிற்குமொரு பேழ்வாய்

நெடும்பூதம் அதுகொண் டுபோய்

நீள்வரை யெடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு

நீதிநூல் மங்கா மலே 


சீர்கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா

செங்கீரை யாடி யருளே

திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே

செங்கீரை யாடி யருளே. 


    (அ-ரை) விழின் - விழுந்தால், கயல்ஆம் - கயல்மீன் ஆகும். சேல் - மீன். அதிசயம் - வியப்பு. வாவி - தடாகம், பேழ்வாய் - பெரிய வாய்.

பூதமது - அது : துணைமொழி. வரை எடுத்ததன் கீழ் - மலையிலுள்ள

குகையில், திருப்பரங்குன்றத்திலுள்ள சரவணப் பொய்கையில் சிவவழிபாடு

புரியலான நக்கீரனார் அப் பொய்கையில் விழுந்த அரசிலையின் ஒருபாதி

நீரிலும் மற்றொரு பாதி நிலத்திலும் பொருந்தும்படி வீழ்தலைக்

கவனிக்கையில்; நீரில் விழுந்த பகுதி மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி

பறவையாகவும் வடியுற்று ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருக்கும்

காட்சியில் மயங்கியது கண்ட சிவபூதம் இதுவே வாயிலாக. இவரைப் பற்றித்

தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பூசைவழுவியர்களுடன் சேர்த்துக்

குகையில் அடைத்துப் பின் புசிக்கவேண்டும் என்றிருப்பது உணர்ந்த

நக்கீரனார் முருகப் பெருமானை முன்னிலைப்படுத்தி, திருமுரு

காற்றுப்படை பாடவே, முருகன் தோன்றிப் பூதத்தையும் துரத்திச்

சிறையிடப்பட்டவர்கள் அனைவரையும் சிறைவீடும் செய்து மகிழ்வித்தார்

என்பது இதிலடங்கிய வரலாறு.                 


கந்தமலி நெட்டிதழ்க் குறுமுகைக் பாசடைக்

கமலமல ரைக்க றித்துக்

கடைவாய் குதட்டும் புனிற்றெருமை தன்குழக்

கன்றுக் கிரங்கி யோடிக் 


கொந்தவிழ் கருங்குவளை ஓடைத்தத டாகக்

குரம்பைக் கடந்து செந்நெற்

குலைவளைக் கும்பழக் குலைமடற் கதலிக்

குருத்தற மிதித்து மீளப் 


பந்தரிடு சூலடிப் பலவுதரு முட்குடப்

பழமெலாம் இடறி வெள்ளைப்

பணிலஞ் சொரிந்தநித் திலமுறுத் தப்பதை

பதைத்துமுலை பாலு டைந்து


சிந்தமக ராழியலை யொடுபொருத செந்தூர

செங்கீரை யாடி யருளே

செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்

செங்கீரை யாடி யருளே.


(அ-ரை) கந்தமலி - மணம் நிறைந்த, குறுமுகை - சிறிய அரும்பு. நெட்டிதழ்க் குறுமுகை என்பதில் சொல் முரண் அமைந்துள்ளது. பாசடை - பச்சிலைகறித்து - கடித்து. குதட்டும் - அதக்கும். புனிறு - இளமை. கொந்து - வாசனை. குரம்பு - கரை. கதலி - வாழை. பலவு - பலா “குறியதன் கீழ் ஆக்குறுகலும்” என்ற நன்னூல் சூத்திரப்படியாயிற்று. முட்குடப்பழம் - முள்ளயைுடைய குடம் போன்ற பழம் (பலாப்பழம்) இடறி - எற்றி. பணிலம் - சங்கு. உறுத்த - அழுத்த: பொருத - தாக்கிய, பதாகை - கொடி, செந்நிறக் குடுமி வெண்சேவல் - இவ்வடியில் சேவலின் கொண்டை நிறச் செம்மையும்,  உடைலில் வெண்மையும் விளங்கும்.                                   


வீறாட வெங்கதிர்ப் புகர்முகக் கூரிலை

மிகுத்தவே லுறை கழித்து

வெவ்வாய் பிளந்துசிறு கட்பேர் இடாகினிகள்

விளையாட வெங்க வந்த


மாறாட முதுபகட் டுயர்பிடர்க் கரியநிற

மறலிஇரு கைச லித்து

மன்றாட உடல்விழிக் குரிசல்கொண் டாடநெடு

மாகமுக டிடைவெ ளியறப் 


பாறாட அம்பொற் கிரீடம் பரித்தலகை

பந்தாட விந்தா டவிப்

பாலைக் கிழத்திமுக் கவரிலைச் சூலம்

பசுங்கொழுங் குருதி வெள்ளச் 


சேறாட வென்றுசிறு முறுவலா டுங்குமர

செங்கீரை யாடி யருளே

செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்

செங்கீரை யாடி யருளே. 


(அ-ரை) வீறு ஆட - பெருமை பாராட்ட. கதிர்ப்புகர் - சூரியன் நிறம். கூர்இலை - கூர்மையான தகட்டுவடிவமுள்ள. இடாகினிகள் - துர்க்கை ஏவற் பெண்கள். வெம் கவந்தம்-கொடிய உடற்குறைப் பிணங்கள். மாறுஆட-விரோத மாகக் குதிக்க. பகடு-எருமைக்கடா. மன்றாட-வேண்ட, இரங்கிக் கேட்க. மாகம்-விண்; ஆகாயம். பாறுஆட-பருந்துகள் விளையாட. உடல் விழிக்குரிசில்-மெய்யில் கண்களையுடைய இந்திரன். பரித்து-தாங்கி. அலகை-பேய். விந்தாடவி-மலைக்காடு. குருதி-இரத்தம். சேறுஆட குழம்பு தோய. முறுவல் ஆடும்-புன்சிரிப்புச் செய்யும்.               

மகரசல ராசிதனில் வருணன்வந் தடிபரவி

வைத்தமணி முத்து மாலை

வடபூ தரத்தில்விழும் அருவியென உத்தரிக

மார்பிலூ டாடமன்னுந் 


தகரமல ரிதழ்முருகு கொப்புளிக் குஞ்சிகைத்

தமனியச் சுட்டி ஆடத்

தவளமுழு மதியமுத துளியெனத் திருமுகத்

தரளவெயர் வாட முழுதும்   


பகரவரு மறைமுனிவர் கொண்டாட மழுவாளி

பங்காளி திருமு லைப்பால்

பருகக் குழைந்துசிறு பண்டியுந் தண்டையும்

பாதமும் புழுதி யாடச்  


சிகரவரை அரமகளிர் சிறுமறுவ லாடநீ

செங்கீரை யாடி யருளே

செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்

செங்கீரை யாடி யாருளே. 


(அ-ரை) சலராசி-கடல். உத்தரிகம்-மேலாடை. தகரம்-மயிர்ச்சாந்து. முருகு-வாசனை. தமனியம்-பொன். தவளம்-வெண்மை. தரள வெயர்வு ஆட-முத்துப்போன்ற வேர்வையுண்டாக. மழுவாளி பங்காளி-மழுப்படை தாங்கும

சிவனுடைய செம்பாதியைப் பங்காகக் கொண்ட உமாதேவி. பண்டி-வயிறு.

புழுதியாட-தூசிபடிய. சிகரம்-உச்சி, முகடு.                                   


(16) 


வேறு


    இந்திர னுஞ்சசி யும்பர வும்படி

யிங்கே வந்தார்காண்இந்திரை யுங்கர சங்கமு குந்தனும்

இந்தா வந்தார்பார்


அந்தண னுங்கலை மங்கையு நின்சர

ணஞ்சேர் கின்றார்போய்

அண்டரு டன்பல தொடர்ப ணிந்தனர்

அஞ்சே லென்றாளாய் 


முந்துத டந்திரை யுந்துவ லம்புரி

மொண்டே கொண்டேக

முன்றில்தொ றுந்தர ளங்கள் உமிழ்ந்திட

முந்தூர் நந்தூருஞ் 


செந்தில்வ ளம்பதி வந்தரு ளுங்குக

செங்கோ செங்கீரை

தென்றல்ம ணங்கமழ் குன்றுபு ரந்தவ

செங்கோ செங்கீரை. 


(அ-ரை) சசி-இந்திராணி. பரவும்படி-போற்றும்படி. இந்திரை-இலக்குமி. முகுந்தன்-திருமால். அந்தணன்-பிரமன். அஞ்சேல்-பயப்படாதே. ஆளாய்-ஆட்கொள்வாய். உந்து-தள்ளும். முன்றில்தொறும்-முற்றமெங்கும். நந்து-சங்கு. ஊர்-நகர், தவழ். தென்றல்-தெற்கிருந்து வருங்காற்று. செங்கோ செங்கீரை; செங்கீரையாடியருளே என்பதன் மரூஉ.                          


(17)


  வரைபொரு புளகித மலைமுலை அரிவையர்

வந்தார் பந்தாட

மறிகட லிறைதரு நவமணி வடமது

வண்டார் தண்தார்பார்உரையொரு கவிஞரு முனிவரும் அமரரும்

உன்போ லுண்டோதான்

உரையெமர் வழிவழி யடிமையி துளதென

உன்பா லன்பானார் 


கரைபொரு கடறிட ரெழமயில் மிசைவரு

கந்தா செந்தூரா

கழிமட அனமொடு முதுகுரு கொருபுடை

கண்சாய் தண்கானல் 


திரைபொரு திருநகர் மருவிய குருபர

செங்கோ செங்கீரை

செருவினில் எதிர்பொரு நிசிசரர் தினகர

செங்கோ செங்கீரை. 


(அ-ரை) புளகிதம்-மயிர்ச் சிலிர்ப்பு. அரிவையர்-பெண்கள். மறி-மடங்கி எறிதல். இறை-தலைவன். தண்தார்-குளிர்ந்த மாலை. எமர்-எம்மவர். திடர்-மேடு. கண்சாய்தல்-தூங்குதல். கானல்-கடற்கரைச் சோலை. மருவிய-பொருந்திய


(18)           


வேறு


  உரைசெய் வரையர மகளிர் முறைமுறை

உன்பேர் கொண்டாட

உலகும் இமையவர் உலகும் அரகர

உய்ந்தோம் என்றாட 


வரைசெய் வனமுலை மகளி ரெழுவரும்

வந்தே பண்பாடமலய முனியொடு பிரம முனிதொழ

வந்தார் கண்டாயே 


கரையின் மணலிடு கழியில் நெடியக

லஞ்சே குஞ்சார்பிற்

கரிய முதுபனை அடியில் வலைஞர்க

ணஞ்சூழ் மென்கானில்


திரையில் வளைதவழ் நகரில் வருகுக

செங்கோ செங்கீரை

செருவில் நிசிசர திமிர தினகர

செங்கோ செங்கீரை 


    (அ-ரை) உரைசெய்-புகழ்கின்ற. இமையவர்-தேவர். வரைசெய்-மலையை ஒத்த. மகளிர் எழுவர்-எழு கன்னிமார். கழி-கடல்நீர் கழிந்துநிற்கும் இடம். கணம்-கூட்டம். வளை-சங்கு. செரு-போர். திமிரம்-இருள். தினகர-சூரியனே! 


(19) 


வேறு


    குறுமுகை விண்ட நெட்டிலைத் தாழை

        அடியில்வி ளைந்த முட்குடக் காயில்-இனிய

       குவளை யோடையில் விண்தோ யுந்தேவர்


    குணலைபு ரிந்த கற்பகச் சோலை

        நிழலிடு பந்த ரிட்ட பொற்றூணில் - அளவர்

       குடிலில் வாசலில் நின்றோடுந் தோணி


    குழுவொடு வந்து விட்டிளைப் பாறு

        துறைமணல் வண்ட லிடடுவற் றாத - பழைய

        குமிழி வாலியில் வண்டா னந்தாவுங்குரவுநெ ருங்கும் எக்கரிற் கானல்

        உழுநர்ப ரம்பின் நெற்குலைத் தாளில்-இளைய

        குமரர் ஊர்சிறு திண்டேர் மென்காவில் 


    இறுகுகு ரும்பை யொத்தபொற் பார

        நகிலரி ருந்து வைத்தவைப் பூசல்-அருகில்

        இளைஞர் ஊடலில் வண்டார் தண்டாரில்


    எவரும கிழ்ந்த சித்திரச் சாலை

        நிழன்மணி துன்று தெற்றியில் தேவர்-மகுடம்

       இடறு பூழியில் வங்கா ளஞ்சீனம்


    எனமொழி தங்கும் அற்புதத் தீவில்

        வணிகரின் வந்த மிக்கபட் டாடை-வகையில்

        ஏறியும் ஆரவடம்பூ ணும்பூணில்


    இரைகவர் ஞெண்டு முக்குளித் தூறும்

        அளறுகி டங்கில் வித்துவித் தாரத்-துரவில்

        இடுமுள் வேலியில் வெங்கா மன்காண


    முறுகவி ளைந்து முற்றி முத்தேறு

        கரியக ரும்பு சுற்றுசிற் றாலை-நிலையின்

       முதிய தாழியில் வெந்தா றும்பாகின்


    முடியைவி ளம்பி வைத்துமுட் டாது

        கடைசிதர் கின்ற கட்குடப் பானை-முதுகின்

        முளைகொள் சாலியின் மென்பூ கந்தோறு


    முருகுது ளும்பு கொத்துடைப் பாளை

        சிதறியு திர்ந்த பித்திகைப் பீட-மறுகின்

        முதல்வர் தேவியர் பந்த டூங்காவின்

முனிவர்வி ரும்பு கற்புடைப் பான்மை

மகளிர்கள் மொண்டெ டுத்தகைச் சாலின்-மடுவில்

முழுது மேதியில் வம்பே செஞ்சேல்பாய்


செறுவில்வி ளைந்த நெற்குலைக் காயில்

உழவிலு டைந்த கட்டியிற் பார-மதகு

செறியும் ஏரியின் மண்டு கம்பானல்


செருமிமு ழங்கு கற்பிளப் பான

புடையின்வி ழும்பு னற்பெருக் கான-தமர

திமிர வாவியி லெங்கே யுந்தாவுந்


திரையில் வலம்பு ரிக்கணத் தோடு

பணிலமு ழங்கு பட்டினக் காவல்-திகிரி

முருக வேலவ செங்கோ செங்கீரை


தினகரர் அஞ்ச விட்புலத் தேவர்

மகபதி முன்கு வித்த வித்தார-மவுலி

திறைகொள் சேவக செங்கோ செங்கீரை


    (அ-ரை) விண்ட. விரிந்த, குணலை-ஒரு கூத்து, வீராவேசக் கொக்கரிப்பு, குடில்-குடிசை. வற்றாத-சுருங்காத, வண்டல்-நீர்ச்சுழி. வண்டானம்-நாரை. குரவு-குராமரம். நகிலர்-கொங்கையையுடைய சிறு பெண்கள். தெற்றி - திண்ணை, இடறு-தட்டு; எற்று. ஆரம்-முத்து, பூண்-நகை. ஞெண்டு-நண்டு. முக்குளித்து-அமிழ்ந்தி, அளறு-சேறு, வித்தாரம்-அகலம். துரவு-தோட்டம். முறுக-மிக. ஆலை-கரும்பு ஆட்டும் இயந்திரம். விளம்பி-கள். கடைசி-மருதநிலப் பெண். சாலி-நெற்பயிர். முருகு-தேன், பித்திகைப் பீடம்-சுவர்த் தலங்களையுடைய ஆசனம். மறுகு-தெரு. முதல்வர்-மும்மூர்த்திகள். பான்மை-தன்மை. கைக்கால் - சிறிய காலவாய். மடு - தடாகம். மேதி - எருமை. வம்பு -


புதுமை. செறு-வயல். மண்டூகம்-தவளை, பானல் - நீலோற் பல மலர். செருமி - இருமி. புடையில் - குழியில். தமரம் - பேரொலி. விட்புலம் - ஆகாயத்திடம். மகபதி - இந்திரன்; நூறு மகங்கள் செய்து தேவர் தலைவன் ஆனவன். 


(20)


----- 


3.தாலப் பருவம் 


அடரும் பருநவ மணிமுடி அமரரும்

அமரர்க் கிறைவனுநீ

டளகைந ராதியும் ஈரொன் பதின்மரும்

அருமறை முனிவோருஞ்


சுடருந் தருமிரு சுடரும் பரவிய

தோகைய ரெழுவருமுத்

தொழின்முக் கடவுளும் அவரவர் தங்குறை

சொல்லித் துதிசெய்தார்


படருங் கிரணப் பரிதி நெடுங்கதிர்

பாயும் பகிரண்டம்

பழுமரம் என்னப் பனையென நிமிரும்

பாழிக் கைந்நீட்டித்


தடவும் புகர்முக தந்திக் கிளையாய்

தாலோ தாலேலோ

சந்த மணங்கமழ் செந்திற் பதியாய்

தாலோ தாலேலோ.


(அ-ரை) அடரும் - நெருங்கும். அமரர் - தேவர். மரணமில்லாதவர். அமரர்க்கு இறைவன் - இந்திரன். அளகைநராதி-அளகாபுரி மன்னனாகிய குபேரன். ஈரொன்பதின்மர்-பதினெட்டுச் சிவகணத்தர். சுடரும் - இரு சுடரும்  - ஒளிதருகின்ற சூரிய சந்திரர் இருவரும். பரவிய - துதிக்கப்படும்  அல்லது துதித்த. தோகையர் எழுவர் - கன்னியர் எழுவர். பரிதி - சூரியன். பகிர் அண்டம் - வெளியுலகம். பழுமரம் - ஆலமரம். பாழி - பருத்த. புகர்- புள்ளி. தந்தி - யானை, இங்கு யானை முகக் கடவுள். சந்தம் - சந்தனம்; அழகு.                                                   


(21)


கங்குல் பொருந்திய குவளைக் குழியில்

         கழியில் பழனத்தில்

    கரையிற் கரைபொரு திரையில் வளைந்த

         கவைக்கால் வரி அலவன் 


பொங்கு குறுந்தளி வாடையின் நொந்து

         பொறாதே வெயில்காயும்

    புளினத் திடரில் கவரில் துரவில்

         புன்னை நறுந்தாதில் 


கொங்கு விரிந்த மடற்பொதி தாழைக்

         குறுமுட் கரியபசுங்

    கோலச் சிறிய குடக்கா யில்புயல்

         கொழுதுஞ் செய்குன்றிற்   


சங்கு முழங்கிய செந்திற் பதியாய்

         தாலோ தாலேலோ

    சமய விரோதிகள் திமிர திவாகர

         தாலோ தாலேலோ. 


(அ-ரை) கங்குல்-இரவு. பழனம் - வயல், கரை பொரு திரை - கரையை மோதுகின்ற அலை. அலவன் - நண்டு. காயும் -கொதிக்கும், எரியும். புளினத்திடர் - மணல்மேடு. கவர் - வெடிப்பு நிலம்.

துரவு - தோட்டம். கொங்கு - வாசனை. குடக்காய் - குடம் போன்ற

தாழங்காய். புயல் - மேகம். கொழுதும் - கோதும்; கிண்டும். சமயம் - மதம்.             


(22) 


வேறு 


தண்தே னொழுகு மொழிமடவார்

        தாமங் கொழுதிச் சுருண்டிருண்டு

    தமரக் களிவண் டடைகிடந்து

        தழைத்து நெறித்த குழற்பாரங் 


கொண்டே மெலிந்த தல்லாது

       குரம்பைக் களப முலைசுமந்து

    கொடிபோல் மருங்குல் குடிவாங்கக்

       குழையிற் குதித்த விழிக்கயலைக்


கண்டே வெருவிக் கயல்மறுகக்

        கனக வெயில்மா ளிகையுடுத்துக்

  ககனம் தடவுங் கோபுரத்தைக்

        கருதி வடவெற் பெனக்கதிரோன் 


திண்தேர் மறுகுந் திருச்செந்தூர்ச்

       செல்வா தாலோ தாலேலோ

    தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த

       சிறுவா தாலோ தாலேலோ.


(அ-ரை) தாமம்-பூமாலை. நெறித்த-செறிப்பையுடைய குழற்பாரம் - கூந்தற்சுமை. மருங்குல் - இடை. குடிவாங்க - குடியிருப்பில்லாமற் போக, இற்றுப்போக. மறுக - கலங்க. ககனம் - விண்   


 பாம்பால் உததி தனைக்கடைந்து

        படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்

    பரிய வரையைக் குடைகவித்துப்

        பசுக்கள் வெருவிப் பதறாமற் 


காம்பால் இசையின் தொனியழைத்துக்

கதறுந் தமரக் காளிந்திக்

கரையில் நிரைப்பின் னேநடந்த

கண்ணன் மருகா முகையுடைக்கும் 


பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்

புனிற்றுக்கவரி முலைநெரித்துப்

பொழியும் அமுதந் தனைக்கண்டு

புனலைப் பிரித்துப் பேட்டெகினந் 


தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்

செல்வா தாலோ தாலேலோ

தெய்வக் களிற்றை மணம் புணர்ந்த

சிறுவா தாலோ தாலேலோ. 


(அ-ரை) உததி - கடல். படரும்-விரியும். பரியவரை-பெரிய கோவர்த்தன மலை.  பதறாமல் - நடுங்காமல். காம்பால் மூங்கிற்குழலால். காளிந்தி-யமுனையாறு. நிரை-பசுக்கூட்டம். அடை - இலை. புனிற்றுக்கவரி-இளமையுடைய எருமைகள். நெரித்து-கட்டுவிட்டு. பேட்டு எகினம். பெட்டையன்னம் தீம்பால்பருகும் - இனியாபாலைக்குடிக்கும்.  தெய்வக்களிறு-தெய்வயானையம்மை.         


(24) 


 


வேறு 


  மங்கல மங்கல நூல் எங்குமொ ழிந்தனர்காண்

வானோர் ஏனோர்போய்வந்துவ ணங்கினர்மேல் அந்தர துந்துபிகேள்

வாரு டாடாதே.


கொங்கைசு மந்திடைநூ லஞ்சும் அணங்கனையார்

கூடா ஊடாரோ

கொண்டவ ரந்தருவாய் அண்டர்பெ ருந்தவமே

கோமான் ஆமாநீ 


செங்கமலந்தனிலே பைங்குமு தங்களிலே

சேல்பாய் வானாடா

தென்றலு டன்றமிழ்தேர் தென்பொதி யம்பயில் வாழ்

தேனார் தார்மார்பா 


சங்குவ லம்புரிசூழ் செந்தில்வ ளம்பதியாய்

தாலோ தாலோலோ

சங்கரி தன்குமரா மங்கையர் தங்கணவா

தாலோ தாலேலோ. 


(அ-ரை) மங்கலம்-சுபம். அந்தர துந்துபி-தேவவாத்தியம். வார்-கச்சு. ஊடாரோ-ஊடல்செய்யமாட்டாரோ. கோமான் ஆமா-தலைவன் ஆகுமா தேன்ஆர்-தேன்பொருந்திய-சங்கரி-உமை.                                


(25) 


வேறு 


    மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்

வாகாய் வாடாதோ

மதிமுக முழுதுந் தண்துளி தரவே

வார்வேர் சோராதோ 


கரமலர் அணைதந் தின்புறுமடவார்

காணா தேபோமோகனமணி குலவுங் குண்டலம் அரைஞா

ணோடே போனால்வார் 


பொருமிய முலையுங் தந்திட வுடனே

தாய்மார் தோடாரோ

புரவலர் எவருங் கண்டடி தொழுவார்

போதாய் போதாநீள் 


சரவண மருவுந் தண்டமிழ் முருகா

தாலோ தாலேலோ

சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்

தாலே தாலேலோ. 


(அ-ரை) மரகதம்-பச்சை. வாகாய்-ஒழுங்காய், வார்வேர்-நீண்ட வேர்வை. வேர்: முதனிலைத் தொழிற்பெயர். கரமலர்-கைத்தாமரை. மடவார்-இளம்பெண்டிர். மடம்-அழகுமாம். அரைஞாண்-அரைநாண், ஞாண்என்பது நாண் என்பதன் போலி. பொருமிய-விம்மிய. போதாய்-வருவாய். போது-விரியுந் தருணப் பூ. 


(26) 


வேறு 


கூருமிகல் சாய்த்த வீரா தீரா தார்மார்பா

கூறுமியல் பார்த்துன் மேலே யாரார் பாடாதார்   


மேருவரை நாட்டு வாழ்வார் வானா டாள்வார்போல்

வேளையென் மீட்டுன் மேலே வீழ்வார் சூழ்வார்பார் 


ஆருமிரை பார்த்து நீள்நீ ருடே தாராமே

யானகழி நீக்கி மேலேநாவா யோடேசேல்   


சேருமலை வாய்க்கு நாதா தாலோ தாலேலோ

தேவர்சிறை மீட்ட தேவா தாலோ தாலேலோ


(அ-ரை) கூரும் இகல்-மிகும் போர். சாய்த்த-அழித்த. இயல்-நன்மை. மேருவரைநாடு-பாண்டி நாடு; பாண்டிய னொருவன் மீனக்கொடியை மேரு மலையிலே நாட்டி அரசாண்டதனாலே பாண்டி நாடு மேருமலை நாடெனப்பட்டது. ஆரும்-உண்ணும். தாரா-பறவை. மேயான-மேய்தலான. கழி-உவர்நீர் நிலம். நாவாய்-கப்பல்.                                                        


(27)


வேறு 


அரைவடமுந் தண்டையும் மின்புரை யரைமணியுங்

கிண்கிணி யுங்கல னணியு மாறா வீறார்சீர்

அறுமுகமுந் தொங்கல் சுமந்தபன் னிருகரமும்

குண்டல முங்குழை யழகும் ஆரார் பாராதார் 


விரைபொருமென் குஞ்சிஅ லம்பிய புழுதியுமங்

கங்குழை பண்டியு மெலியு மேலே வீழ்வார்பார்

வெகுவிதமுங் கொண்டு தவழ்ந்திடில் அவரவர்தங்

கண்கள் படும்பிழை விளையு மேதே னேகாதே 


வரைமணியும் தங்கமும் ஒன்றிய கனபரியங்

கந்தனில் இன்றுகண் வளர வாராய் வாழ்வேநீ

மணிநகையுங் கொண்டு துயின்றிலை விரலமுதங்

கொண்டுகி டந்தனை மதுரமாய்நீ பேசாயோ 


திரைபொருதென் செந்தில் வளம்பதி வளரவருங்

கந்தசி வன்பெறு சிறுவா தாலோ தாலேலோ

திசைமுகனுஞ் சங்கரி யுஞ்சது மறையும் இறைஞ்

சும்பரை அம்பிகை சிறுவா தாலோ தாலேலோ. 


(அ-ரை) அரைவடம்-அரைநாண். மின்புரை-மின்னலை ஒத்த வீறுஆர்-பெருமை பொருந்திய. தொங்கல்-மாலை விரை-மணம். பண்டியும்-வயிறும். பொரு-பொருந்தும். புழுதி-தூசி, அலம்பிய-கழுவிய குஞ்சி-குடுமி. வீழ்தல்-விரும்புதல். படும்பிழை-உண்டாகுங் குற்றம். ஏதேன் ஏகாது-ஏதேனும் நீங்கமாட்டாது. கனபரியங்கம்-மேன்மையானகட்டில், திசைமுகன்-பிரமன், நான்முகன்


(28) 


வேறு


அரவுசிறு பிறைஇதழி தரிபதகை பொதிசடிலர்

பாலா வேலாதேர்

அருணவெயில் இரவிசுழல் இமகிரியில் அரிவைபெறு

வாழ்வாய் வாழ்வோனே 


குரவருள மகிழஉயர் குருவடிவு தருபெருமை

கோடாய் தாடாளா

குமரகுரு பரமுருக குதலைமொழி தெரியவுரை

கூறாய் மாறாதே


இரவலரும் முனிவர்களும் இமையவரும் உனதடிமை

ஆமே ஆமேநீ

எமைமுனியில் ஒருதுணையும் இலையடிமை யடிமை

வீழ்வார் சூழ்வார்பார்             (யென) 


பரசமய குலகலக சிவசமய குலதிலக

தாலோ தாலேலோ

பணிலம் உமிழ் மணியையலை யெறியுநகர்வரு கடவுள்

தாலோ தாலேலோ. 


(அ-ரை) இதழி-கொன்றை. திரிபதகை-கங்கை. இரவி கழல்-சூரியன்சூழ்கின்ற. இமகிரி அரிவை-இமயமலையரசன்பெற்ற பார்வதி. குரவர்-பெற்ற மாதாபிதாக்கள், கோடாய்-கோணுதலில்லாதவனே! தாள் தாளா!-முயற்சியுள்ளவனே! குதலை-மழலை மொழி. இரவலர்-யாசகர். முனியில்-கோபிக்கில். மணி-முத்து. பணிலம்-

சங்கு                


(29) 


வேறு


    பங்கயன் முதலோர் இந்திரன் இமையோர்

        பாரோர் ஏனோர்பார்

    பண்புடன் உனையே சிந்தையின் நினைவார்

        பால்நீ மால்கூராய்


    வெங்கட கரிசூ ழெண்திசை நிறைவார்

        வீணாள் காணாதே

    மின்பரி புரதாள் பொன்புரை முடிமேல்

        வேய்வார் வீறாலே


    செங்கனி மணிவாய் தங்கி நகைதா

        தேவா சீறாதே

    திண்திறல் முருகா தண்டமிழ் விரகா

        சேரார் போரேறே


    சங்கரி மருகா சங்கரி சிறுவா

        தாலோ தாலேலோ

    சந்ததம் இயல்தேர் செந்திலை உடையாய்

        தாலோ தாலேலோ.


    (அ-ரை) பங்கயன்-பிரமன். மால்கூராய்-ஆசைப்படாய் கூர்வாய் என்பது பாடமாயின் ஆசைப்படுவாய் என்க, வீணாள்-வீண்நாள்; பயனற்ற நாள். காணாதே-காணாமல், பொன்புரை-பொன்னை ஒத்த, வேய்வார்-சூடுவார். சீறாதே-கோபியாமலிரு. சங்கரி மருகா-சங்கைக் கையிற்கொண்ட திருமாலின் மருகனே! சங்கரி-சங்கரன் மனைவியாகிய உமாதேவி. இயல்தேர்-தமிழை ஆராய்கின்ற.            


(30)



4. சப்பாணிப்பருவம்


பரவிய நவமணி அழுத்துகல னுக்கழகு

பாலித்து வீறு பெற்ற

பன்னிரு புயங்குலுங் காமல்நீள் குழைதொறும்

பருவயிர குண்ட லங்கள்


இரவியொளி மட்கநின் றசையாமல் அமுதொழுகு

        இந்துமுக மண்ட லத்தில்

    எழுதரிய திருநுதற் புண்டரங் குறுவெயர்

        விறைக்கச் சிதைந்தி டாமல்


    கரகமல மலர்விரல் சிப்புறா மல்கடக

        கங்கணம் ஒலித்தி டாமல்

    கழிவண் டலம்புங் கருங்குவளை ஓடைசூழ்

        கழிதொறுங் கானல் தோறுந்


    தரளமுழு மணிநிலவு தருசெந்தில் வேலவா

        சப்பாணி கொட்டியருளே

    சமரமுக ரணவீர பரசமய திமிராரி

        சப்பாணி கொட்டி யருளே.


    (அ-ரை) பரவரி - புகழ்தற்கருமையான. கலன் - அணி குழை-காது. மட்க - மழுங்க, இந்துமுகமண்டலம்-சந்திரன் போன்ற முகவட்டம். புண்டரம்-திருநீற்றின் முக்கீற்றுத்தொகுதி, குறுவெயர்வு-சிறுவேர்வை. கரகமல மலர்-கையாகிய தாமரைப்பூ. கடககங்கணம் - கையணி. மீமிசை மொழி. கானல்-கடற்கரைச் சோலை, சமரமுகம்யுத்தகளம். ரணவீர-பகைவர்க்குப் புண்செய்யும் வீரனே திமிராரி-இருளைக் கெடுப்பவன். சப்பாணி-இரண்டு கையுங் கூட்டி.                                  


(31)


 


அண்டர் தந்துயரொழித் தனமென்று கொண்டாடி

ஆவலங் கொட்ட மன்னும்

அயிராணி கலவியமு துண்டனம் எனத்தேவர்

அரசிரு கரங்கள் கொட்டத்


துண்டவெண் பிறைபுரை எயிற்றுவெஞ் சூருளந்

துண்ணெனப் பறைகொட் டநீள்

சுருதியந் தணர்இடந் தொறுமங் கலப்பெருந்

தூரியங் கொட்ட முட்டப்


பண்டரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன

படிதிண்டி மங்கொட டவெம்

பகைநிசா சரர்வளம் பதிமுழுது நெய்தலம்

பறைகொட்ட வெள்வ ளைதருந்


தண்தரள மலைமொண்டு கொட்டுநக ராதிபா

சாப்பாணி கொட்டி யருளே

சமரமுக ரணவீர பரசமய திமிராரி

சப்பாணி கொட்டி யருளே.


    (அ-ரை) ஆவலங் கொட்டுதல்-வாயல்துதித்து விளை யாடல் வெம்சூர் -கொடிய சூரன். பறைகொட்ட-பதைக்க, தூரியம்-வாச்சியம், திண்டிமம்-தம்பட்டம். நிசாசரர்-அசுரர், நெய்தலம் பறை-நெய்தல் நிலத்து வாச்சியம்; சாப்பறை. நகராதிபா- திருச்செந்தூர்த் தலைவனே.   


பௌவமெறி கடலாடை உலகிலொரு வேடுவன்

பறவைக்கு நிறைபு குந்த

பார்த்திவன் பாவையும் இயற்குலச் சிறையும்

பணித்தருள மதுரை புக்குத்


தெவ்வரிடு திருமடத் தெரிசெழிய னுடலுறச்

சென்றுபற் றலும்எ வர்க்குந்

தீராத வடவையனல் வெப்புமுது கூனுந்

திருத்தியொரு வாது வென்று


வெவ்வழலில் எழுதியிடும் ஏடும் பெருக்காற்று

விட்டதமி ழேடும் ஒக்க

வேகாம லெதிரே குடக்கேற வெங்கழுவில்

வெய்யசமண் மூகர் ஏறச்


சைவநெறிஈடேற வருகவுணி யக்குழவி

சப்பாணி கொட்டி யருளே

சமரமுக ரணவீர பரசமய திமிராரி

சப்பாணி கொட்டி யருளே.


(அ-ரை) பௌவம்-உப்புடைய. கடலாடை-கடலாகிய உடை. பறவை-புறா. பார்த்திபன்-சிபிச்சக்கரவர்த்தி. நிறை-துலாத்தட்டு. சோழ மன்னனாகிய சிபி யாகம் செய்த காலத்தில் இவன் உத்தம குணத்தைப் பரீட்சிக்க விரும்பிய இந்திரன் பருந்தாகவும், அக்கினி புறாவாகவும் வடிவுற்று பருந்து புறாவைத் துரத்தப் புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. பருந்து புறாவைத் தன்னிடம் கொடுத்கும்படி பன்முறை வேண்டியும் இசையாமல் அடைக்கலப் பொருளுக்கு ஈடாகத் தன் உடலில் தசையை அறுத்தத் தராசில் வைக்கவும் சமமகாமை கண்டுதானே தராசில் ஏறினன். இவ்வருமை கண்ட இந்திரனாகிய பருந்தும், புறாவாகிய

அக்கினியும் மகிழ்ந்து வாழ்த்திச் சென்றனர் இவன் குலத்துப் பாவை மங்கையர்க்கரசி. இவர் மதுரைக் கூன் பாண்டியனை மணந்து தம்முடன் வந்த குலச்சிறை நாயனார் என்னும் மந்திரியுடன், திருஞானசம்பந்தர் திருவருளால் பாண்டிய நாட்டை மூடியிருந்த சமணிருளை ஓட்டி அரசனையும், நாட்டாரையும் சைவ சமயந் தழுவச் செய்தவர். தெவ்வர்-பகைவராகிய சமணர். எரி-தீக்கொடுமை. செழியன்-பாண்டியன் முதுகூன்-முதிர்ந்த கூனல். குடக்கு-மேற்கு. மூகர் - ஊமையர். இவ்வடிகளில் கவுணியக் குழந்தையாகய திருஞானசம்பந்தர் பாண்டியன் சுரநோய் தீர்த்தபின் அமணர் விருப்பப்படி அனல்வாதமும் புனல்வாதமும் புரிந்துவெற்றி கண்டு அமணர் சொற்படி அவர்களே கழுவேறும்படி செய்தனர் என்னும் வரலாறு குறிக்கப்படுவதாம்.                                          


(33)


    பைந்தாள் தழைச்சிறைக் கானவா ரணமருவு

        பந்திரிடு முல்லை வேலி

    பாயுமுட் பணைமருப் பேறுதழு வியுமுடைப்

        பாலாறா மேனி மடவார்


    கொந்தார் குரும்பைஇள வனமுலை முகக்கோடு

        குத்தக் குருந்தொ சித்துங்

    குறுங்கழைத் துண்டந் தனில்சிறு துளைக்கருவி

        குன்றுருக நின்ற ழைக்குஞ்


    செந்தா மரைக்கைவிரல் கொடுபுதைத் துஞ்சுருவி

        தெரியவிரல் முறையில விட்டுந்

    தேனுவின் பிறகே திரிந்துங் கவுட்குழி

        திறந்துமத மாரி சிந்துந்தந்தா வளந்தனக் குதவுதிரு மால்மருக

        சப்பாணி கொட்டி யருளே

    தரளமெறி கரையில்வளை தவழ்செந்தில் வேலவா

        சப்பாணி கொட்டி யருளே.


(அ-ரை) கானவாரணம்-காட்டுக்கோழி. முல்லை வேலி-முல்லைக் கொடியாகிய வேலி, பைணமருப்பு-பருத்த கொம்புகள். முடைப்பால் அறா மேனி மடவார்-மொச்சை வீசும் பால்மணம் நீங்காத உடம்புடைய இடைச்சியர். கொந்து - குலை, கொத்து ஓசித்தும்-ஒடித்தும். கழை-முங்கில் சுருதி தெரிய-இராகத்தின் ஒலி வெளிப்பட. தேனு-பசுக்கள். கவுள்-கன்னம். தந்தாவளம்-யானை; கசேந்திரன்.     


(34)


 


கார்கொண்ட பேரண்ட கூடமோ ரேழுநீ

        கற்பிக்கு மந்த்ர சாலை

    கற்பதா ருவுநின் புயத்தினுக் கணிமாலை

        கட்டவளர் நந்தன வனஞ்


சீர்கொண்ட புருகூத னுந்தேவர் குழுவுநின்

        திருநாம மறவா தபேர்

    சிகரகன காசலமும் உனதுதிரு வாபரண

        சேர்வைசேர் பேழை கடல்நீர்


போர்கொண்ட வேலின் புலால்கழுவு நீரேழு

        பொழிலுமத் தனைதீ வுமோர்

    பொலிவினுட னேநின் கலாபமயில் வையாளி

        போய்மீளும் வீதியெனவேதார்கொண்ட மணிமார்ப் செந்தில்வடி வேலனே

        சப்பாணி கொட்டி யருளே

    தரளமெறி கரையில்வளை தவழ்செந்தில் வேலவா

        சப்பாணி கொட்டி யருளே.


    (அ-ரை) கார்கொண்ட-மேங்களாற் சூழப்பட்ட சாலை-கூடம். இடம். கற்பதாரு-கற்பகவிருட்சம். நந்தனவனம்-பூந்தோட்டம் குழு-கூட்டம். சிகரம்-குடுமி கனகாசலம்-பொன்மலை. பேழை-பெட்டி. புலால்-மாமிசம். பொழில்-உலகம் பொலிவு. பிரகாசம்; தோற்றம் வையாளி-குதிரை நடந்து போம் வழி.   


(35)


 


    கவளமத வெற்புநிலை உலகுபர வப்ரபைகொள்

        கைத்தா மரைக் கடகபூண்

    கதிரொளி விரிக்கவளர் சிகையினிடு சுட்டிமிசை

        கட்டாணி முத்தொ ளிரவே


    பவளஇதழ் புத்தமுதம் ஒழுகுமத லைக்குதலை

        பப்பாதி சொற்றெ ரியவே

    பரிபுரம் ஒலிக்கவரு குறுநகை யெழுப்பியிடு

        பைச்சேடன் உச்சி குழிபாய்


    உவளகம் அனைத்துமின் வரிவளை முழக்கவெடி

        யுற்றேபெ ருத்த கயல்போய்

    ஒருபுடை குதிக்கவரி யலவனைளை யுற்புகுத

        உப்பூறு நெட்ட கழிதோய்


    தவளமணி முத்தையலை எறியுநக ருக்கதிப

        சப்பாணி கொட்டி யருளே

    சருவிய புறச்சமய விரதியர் குலக்கலக

       சப்பாணி கொட்டி யருளே.



   (அ-ரை) மதவெற்பு-யானை. நிலையுலகு-நிற்றலையுடைய பூமியிலுள்ளார். அணி முத்து-முதன்மையான முத்து. பப்பாதி-குதலைமொழி ஒவ்வொன்றிலும் பாதிபாதி. குறுநகை யெழுப்பி-புன்சிரிப்புச் செய்து. பை-படம். உவளகம்-அகழி அளை-சேற்றின் குழி. சருவிய-மாறுபட்ட          


(36)


 


வேறு


 


    கருதிய தமனிய மணியரை வடமிடு

        கட்டுவ டத்தோடுங்

    கழலிடு பரிபுரம் ஒலியெழ மணியுமிழ்

        கைக்கட கப்பூணும்


    இருசுட ரொளிபெற மருவிய தளர்நடை

        யிட்டும திப்பாக

    எழுமதி புரைதிரு முகமலர் குறுவெயர்

        இட்டுவ ரத்தாமஞ்


    சொருகிய நறுமலர் முகையவிழ் சிகையிடு

        சுட்டிநு தற்றாழத்

    தொழுதுளை வழிபடும் அடியவர் இளையவர்

        சொற்படி தப்பமற்


    குருமணி யலையெறி திருநக ரதிபதி

        கொட்டுக சப்பாணி

    குருபர சரவண பவசிவ மழவிடை

        கொட்டுக சப்பாணி.


    (அ-ரை) தமனியம்-பொன் கழல்-திருவடி: தானியாகு பெயர். மருவிய - பொருந்திய. தளர்நடையிட்டு-தடுமாற்றமாக நடந்து தாமம்-கடப்பமாலை. குரு-நிறம். மழவிடை-இளமை யுடைய இடபம் போல்பவனே.                                         


(37)



    வரைபுரை புயமிசை இடுதொடி அணிகலன்

        மற்றுள முத்தார

    மணிமுடி குழையிடும் இருசிகை யழகெழ

        மைக்குவ ளைப்போதின்


    விரைசெறி குழலியர் செவிலியர் அவரவர்

        மிக்கவி ருப்பானார்

    விபுதரு முனிவரும் உனதடி பரவியுன்

        வெற்றியு சைப்பார்சீர்


    அரைமணி யுடைமணி கணகண கணவென

        அத்திமு கத்தோனும்

    அரிபிர மனுமுமை கணவனும் மனமகிழ்

       அற்புவி ளைத்தார்பார் 


    குறைகடல் அலையெறி திருநக ரதிபதி

        கொட்டுக சப்பாணி

    குருபர சரவண பவசிவ மழவிடை

        கொட்டுக சப்பாணி.


    (அ-ரை) தொடி-தோள்வளை. விரைசெறி-வாசனைநெருங்கிய. விபுதர் - தேவர். உடைமணி-மேகலா பரணத்திற் கோத்த மணி. அத்திமுகத்தோன்-யானைமுகம் உடையோன். அற்பு-அன்பு. 


கந்தத் தகட்டினர விந்தந் தனிக்கடவுள்

        கற்பா யெனச்சுருதி நூல்

கண்டித் துரைத்திடவும் இந்தக் கரத்திலுரை

கற்பா லுரைத்தி யெனவே


    அந்தப் பொருட்பகுதி அந்தத் தினைப்பகரும்

        அப்போ வெறுத்து முனிவாய்

   அஞ்சத் திருக்குமயன் அஞ்சச் சிறைக்குளிடும்

அப்பா சிறக்கும் அமலா


    பந்தப் பிறப்பொழிய வந்தித் திருக்குமவர்

        பற்றாக நிற்கு முதல்வா

    பண்டைக் குடத்திலுறு முண்டச் சிறுத்தமுனி

        பற்றாசை யுற்று மிகவாழ்


    சந்தப் பொருப்பிறைவ செந்திற் பதிக்குமர

        சப்பாணி கொட்டி யருளே

    சங்கத் தமிழ்ப்புலவ துங்கக் கொடைக்குமர

        சப்பாணி கொட்டி யருளே


    (அ-ரை) கந்தம்-வாசனை.. இந்தக்கரத்தில்-இந்தப் பிரணவ எழுத்தில்.  உரை கற்பால்-பொருளைப் படித்த விதத்தால்.  அந்தம்-முடிவு.  ஆஞ்சத்து இருக்கும் அயன்-அன்ன ஊர்தியில் அமரும் பிரமன்.  அமலன்-குற்றமற்றவன்.  பந்தம்-பாசம் சிறுமுனி-அகத்தியமுனி. குறுமுனி.சந்தப் பொருப்பு-சந்தனமலை, பொதிகைமலை.   துங்கம்-உயர்ச்சி 


வேறு


    முதுமொழி நினைவுதெ ரிந்த நாவலர்

        முட்டா துனைப்பு கழவே

    முளரியில் மருவிய ருந்த நான்முகன்

       முக்கா லுமிச்சை சொலவே


    புதுமலர் சிதறிம கிழ்ந்து வானவர்

        பொற்றா ளினைப்ப ரவவே

    புகலரும் இசைதெரி தும்பு ராதியர்

        புக்கா தரித்து வரவே


    மதுகரம் இடறிய தொங்கல் மாலிகை

        மற்பூத ரத்த சையவே

    மணியொளி வயிரம் அலம்பு தோள்வளை

        மட்டாய் நெருக்கம் உறவே


    சதுமரை முனிவர்கள் தங்கள் நாயக

        சப்பாணி கொட்டி யருளே

    சரவண பவகுக செந்தில் வேலவ

        சப்பாணி கொட்டி யருளே.


    (அ-ரை)  நாவலர்-நாவன்மையுடையவர். முளரி-தாமரை: முள்ளையுடைய தண்டையுடையது.  ஆதரித்து-விரும்பி.  மதுகரம்-வண்டு; தேனைச் சேர்ப்பது. மல்பூதரம்-மற்போர் செய்கின்ற தோளாகிய மலை.  மட்டு-அளவு.       


5. முத்தப்பருவம்


    கத்துந் தரங்கம் எடுத்தெறியக்

        கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

    கரையில் தவழ்ந்து வாலுகத்திற்

        கான்ற மணிக்கு விலையுண்டு


    தத்துங் கரட விகடதட

        தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

    தரளந் தனக்கு விலையுண்டு

        தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்


    கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்

        குளிர்முத் தினுக்கு விலையுண்டு

    கொண்டல் தருநித் திலந்தனக்குக்

        கூறுந் தரமுண் டுன்கனிவாய்


    முத்தந் தனக்கு விலைஇல்லை

        முருகா முத்தந் தருகவே

    முத்தஞ் சொரியுங் கடலலைவாய்

        முதல்வா முத்தந் தருகவே.


    (அ-ரை)  கத்தும்-முழங்கும்.  தரங்கம்-அலை. கடுஞ்சூல்-கடுமையான கருப்பம்.  உளைந்து-வருந்தி.  வாலுகம்-வெண்மணல்.  கான்ற மணி - சொரிந்த முத்து.  கரடம்-மதம்.  விகடம்-விகடக் கூத்து, உன்மத்தமுமாம்.  தடம்-மலை.  தந்திப் பிளைக்கூன் மருப்பு-யானையின் பிறைச் சந்திரன்போல் வளைந்திருக்கின்றகொம்பு.  தரளம்-முத்து.  சாலி-நெல். கொண்டல்-மேகம்.  நித்திலம்-முத்து.  கனிவாய் முத்தம்-கொவ்வைக் கனிபோன்று வாயின் முத்தம்


வளைக்குந் தமரக் கருங்கடலின்

வளைவாய் உகுத்த மணிமுத்துன்

வடிவேற் கறைபட் டுடல்கறுத்து

மாசு படைத்த மணிமுத்தம்


துளைக்குந் கழையிற் பருமுத்தம்

துளபத் தொடைமால் இதழ்பருகித்

தூற்றுந் திவலை தெறித்த முத்தம்

சுரக்கும் புயலிற் சொரிமுத்தம்


திளைக்குங் கவன மயிற்சிறையிற்

சிறுதூட் பொதிந்த குறுமுத்தஞ்

செந்நெல் முத்தங் கடைசியர்கால்

தேய்த்த முத்தஞ் செழுந்தண்தேன்


முளைக்குங் குமுதக் கனிவாயான்

முருகா முத்தந் தருகவே

முத்தஞ் சொரியுங் கடலலைவாய்

முதல்வா முத்தந் தருகவே.


(அ-ரை)  தமரம்-ஒலி வளை-சங்க. கறை-களங்கம், கறுப்பு.  மாசு-அழுக்கு. துளைக்குங் கழை-துளைக்கப்படும் மூங்கில்.  துளபத்தொடைமால் - துளசி மாலையணிந்த திருமால்.  திவலை-துளி.  திளைக்கும்-நெருங்கம்.  கவனம்-வேகம்.  குமுதம்-ஆம்பல்.                                       


(42)


  கலைப்பால் குறைந்த பிறைமுடிக்குங்

கடவுள் உடலின் விளைபோகங்

கனலி கரத்தில் அளிக்க அந்தக்

கனலி பொறுக்க மாட்டாமல்மலைப்பால் விளங்கஞ் சரவணத்தில்

வந்து புகுத ஓராறு

மடவார் வயிறு குலுளைந்து

மைந்தர் அறுவர்ப் பயந்தெடுப்பக்


கொலைப்பால் விளங்கும் பரசுதரன்

குன்றி லவரைக் கொடுசெல்லக்

கூட்டி அணைத்துச் சேரவொரு

கோலம் ஆக்கிக் கவுரிதிரு


முலைப்பால் குடித்த கனிவாயால்

முருகா முத்தம் தருகவே

முத்தஞ் சொரியுங் கடலலைவாய்

முதல்வா முத்தம் தருகவே.


(அ-ரை) கலைப்பால் கலையின் பகுதி. போகம் - இன்பமாகிய அக்கினிப் பொறி, கனலி - அக்கினிதேவன். மலப்பால் - மலையின் பக்கம், பயந்து- பெற்று பரசுதரன் - மழுப்படையனான சிவபெருமான். கொபைால் - கொலைக்கூறு. கோலம் - வடிவம்; இவ்வடிவு கந்தன் என்று அழைக்கப்படும்; கந்தன் - சேர்க்கப்பட்டவன். கவுரி - உமை                          


(43)


    கத்துங் கடலில் நெடும் படவில்

        கழியில் சுழியில் கழுநீரில்

    கானற் கரையில் கரைதிகழுங்

        கைதைப் பொரும்பில் கரும்பினங்கள்


    தத்துங் கமலப் பசும்பொகுட்டிற்

        சாலிக் குலையில் சாலடியில்

    தழைக்குங் கதலி அடிமடல்

        தழைவைத் துழுத முதுகுரம்பைக்குத்துந் தரங்கப் புனற்கவரில்

        குவளைத் தடத்தின் மடைவாயில்

    குட்க்கூன் சிறுமுட் பணிலமொரு

        கோடிகோடி யீற்றுளைந்து


    முத்தஞ் சொரியுங் கடலலைவாய்

        முருகா முத்தந் தருவே

    மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு

        முதல்வா முத்தந் தருகவே.


    (அ-ரை) படவு - தோணி, கைதைப் பொதும்பு - தாழஞ்சோலை; சாலிக்குலை - நெற்கதிர், சாலடியில் - உழுசால் சென்ற வழியில், குரம்பை - வரம்பை. குவளைத் தடம் - குவளைக் குளத்தில், ஈற்றுளைந்து - ஈற்றால் வருந்தி; கருவுயிர்த்து.                                                       


(44)


    வயலும் செறிந்த கதலிவன

        மாடம் செறிந்த கதலிவன

    மலர்க்கா வெங்குந் தேனினிரை

        மாலைதோறுந் தேனினிரை


    புயலுஞ் செறிந்த கனகவெயில்

        புடையே பரந்த கனகவெயில்

    பொதும்பர் தோறு மோதிமமென்

        புளினந் தோறு மோதிமஞ்செங்


    கயலுஞ் செறிந்த கட்கடையார்

        கலவி தரும்போர்க் கட்கடையார்

    கருணைபுரியும் அடியாருன்

        காதல் புரியும் அடியார்சீர்


    முயலும் படிவாழ் திருச்செந்தூர்

        முருகா முத்தந் தருகவே

    மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு

        முதல்வா முத்தந் தருகவே.



அ-ரை) கதலிவனம்:- (1) வாழைச்சோலை, (2) கொடிக்கூட்டம். தேனின் நிரை:- (1) மதுவரிசை, (2) வண்டினம். கனக வெயில் (1) கல்நக எயில். கல்மலையாகிய மதில் (2) பொற்கிரணம். பொதும்பர்-சோலை. புளினம் தோறும்-மணற்குன்றெங்கும் ஓதிமம்-அன்னப்பறவை. கட்கடையார்- (1) கடைக்கண்களுடைய பெண்டிர். (2) போர் கட்கடையார் யுத்தத்திற்கு நெருங்கார். அடியார்-தொண்டர். சீர்-புகழ், கீர்த்தி.                                       


(45)


தொழுதுந் துதித்துந் துயரற்றிச்

சுரருக் கிறையுஞ் சுரரு முடன்

சூழ்ந்த கடம்பா டவியிலுறை

சொக்கக் கடவுள் தனைமூன்று


பொழுதும் பரவி எழுத்துச்சொற்

போலப் பொருளும் புகறியெனப்

புகலு மாறஞ் சிரட்டி திணைப்

பொருட்சூத் திரத்தின் பொருள்மயங்கா


தெழுதும் பனுவற் பரணன் முதல்

ஏழேழ் பெருமைக் கவிப்புலவர்

இதயங் களிக்க விருப்பமுடன்

இறையோன் பொருட்குப் பொருள்விரித்து


முழுதும் பகர்ந்த கனிவாயான்

முருகா முத்தந் தருகவே

மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு

முதல்வா முத்தந் தருகவே.


(அ-ரை) சுரருக்கிறை-இந்திரன். சுரர்-தேவர். கடம்பாடவி-கடம்பமரக்காடு. சொக்கக்கடவுள்-சொக்கலிங்கம்.சொக்கு-பேரழகு. புகறி-புகல்வாய். ஆறு அஞ்சிரட்டி-அறுபது. திணைப்பொருள்-அகத்திணைப் பொருள்: இஃது இறையனாரால் செய்யப்பெற்ற அகப்பொருள் நூல் ஏழேழ் புலவர்-கடைச் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர்.


பொருள் விரித்து முழுதும் பகர்ந்த கனிவாயால்-உருத்திரசன்மராய்த் தலைமை தாங்கிப் புலவர் கூறும் பொருளுரை கேட்டுச் சிறந்ததிதுவெனக் கூறிய கனிபோன்ற வாயால்.                                           


(46)


வேறு


    கடுந டைச்சிந் துரம ருப்பின்

        கதிர்கொள் முத்துஞ் சரவைநீள்

    கடல ளிக்கும் பணில முத்தும்

        கழையின் முத்தும் கரடுவான்


    உடுமு கட்டம் புயல்க ருக்கொண்

        டுமிழு முத்தம் கருகல்தேன்

    ஒழுகு பொற்பங் கயம டல்தந்

        தொளிரு முத்தந் திருகல்காண்


    படுக ரைக்குண் டகழி நத்தின்

        பரிய முத்தந் தெரியவே

    பரவை யெற்றுந் திரைகொ ழிக்கும்

       படியில் முத்தஞ் சிறுமகார்


    கொடுப ரப்பும் பதிபுரக்குங்

        குமர முத்தம் தருகவே

    குறுமு னிக்குந் தமிழு ரைக்குங்

       குழவி முத்தம் தருகவே.


(அ-ரை) பணிலம்-சங்கு. முரண்-வலிமை. (1) புறவு-புறா; குறியதன் கீழ் ஆகுறதி உகரம் பெற்றது. (2) புறவு-காடு புளினம் மணற்குன்று; பறவைக்கூட்டம். குவளை-கருங்குவளை; அதன் கருநிறத்தைத் தன் இனமெனக் கருதி வண்டுகள் மொய்த்தனவென்க, குருகு-நீர்வாழ்பறவை, பதி-ஈண்டுத் திருச்செந்தூர். குழவி-இளம் பருவ முருகப்பெருமான்: அண்மைவிளி இயல்பாயிற்று.          


(48)


வேறு


    பையரவின் உச்சிகுழி யப்பொருங் குண்டகட்

        படுகடற் பணில முத்தம்

    பார்வையா னுஞ்சிறிது பாரோம் இதன்றிப்

        பசுங்கழை வெடித்த முத்தஞ்


    செய்யசிந் தையினுமிது வேணுமென் றொருபொழுது

        சிந்தியோ முந்திவட்டத்

    திரைமுழங் கக்கொழுந் திங்கள்வட் டக்குடைச்

        செழுநிழற் சம்ப ராரி


    எய்யுமலர் வாளியை எடுத்துத் தெரிந்துநாண்

        இறுகப் பிணித்த வல்வில்

    ஈன்றகுளிர் முத்தத்தை முத்தமென் றணுகோம்

        இதழ்க்கமல முகையு டைக்குந்


    துய்யமணி முந்தந் தனைத்தொடேம் உன்னுடைய

        துகிரில்விளை முத்த மருளே

    தோகைமே காரவா கனசெந்தி லாயுனது

        துகிரில்விளை முத்த மருளே.


(அ-ரை) பை அரவு-படத்தையுடைய பாம்பு, ஆதிசேடன். குண்டகட்படு-குண்டு. அகழ்படு; ஆழமாகத்தோண்டுதல் பொருந்திய. சம்பராரி-மன்மதன் பிணித்த வல்வில்-கட்டிய வலிய வில்லாகிய கரும்பு. துகிரில்-பவளம் போன்ற வாயில். மேகாரம்-மயில்.                                            


(49)


இறுகல்கரு குதல்முரிவி லட்சுமி புடாயமுமுள்

ளேறல்புகை யேறல் செம்மண்

ஏறல்வெச் சந்திருகல் மத்தகக் குழிவன்றி

இரவியொளி யிற்க ரத்தல்


மறுவறு தகட்டிலோ ரத்திலுயர் தூக்கத்தின்

மன்னுமா தளைக விர்ப்பூ

மாந்தளிர் முயற்குருதி செவ்வரத் தங்கோப

மருவுமணி வகைய ளிப்பேர்


முறுகல்வளி யேறல் கல்லேறல்சிப் பிற்பற்று

முரிதல்திரு குதல்சி வப்பு

முருந்திற் குருத்துச் செருந்துருவி யிடையாடி

மூரிகுதை வடிவொ துங்கல்


துறுமுக் கக்கலொளி மட்கல்கர டென்னாத

துகிரில்விளை முத்தம் அருளே

தோகைமே காரவா கனசெந்தி லாயுனது

துகிரில்விளை முத்தம் அருளே.


(அ-ரை) இறுகல்-உள்ளொடுங்குதல். இப்பாடற்கண் மாணிக்கமணியின் குற்றங்களையெல்லாம் எடுத்துக்காட்டி, இதழின்நிறம் மாணிக்கம் போன்ற செந்திறத்ததாகலின், அதைப்பவளமாக்கி அப்பவளத்திண்கண் தோன்றிய முத்தந்தருதலை துகிரில் விளை முத்தமருள்’ என இளங்கோல முருகப் பொருமானை விளித்துக் கூறியவாறு                                        


(50)


    கோதிவரி வண்டுமது உண்டுகுடி கொள்ளுமெங்

குழலுக் குடைந்து விண்ணிற்

குடிகொண்ட கொண்டற் குறுந்துளியின் நித்திலக்

கோவையொரு கால் விருப்பேம்


காதிலுறும் வள்ளிமக ரக்குழை கடக்குமெம்

கண்ணுக் குடைந்து தொல்லைக்

கயத்திற் குளித்தசேல் வெண்தரள மென்னிலொரு

காலமுங் கருதி நயவேம்


போதிலுறு பசுமடற் பாளைமென் பூகம்

பொருந்துமெங் கந்த ரத்தைப்

பொருவுறா வெள்வலம் புரியாரம் இன்புறேம்

பொற்றோள் தனக்கு டைந்த


சோதிவேய் முத்தந் தனைத்தொடேம் நின்னுடைய

துகிரில்விளை முத்தம் அருளே

தோகைமே காரவா கனசெந்தி லாயுனது

துகிரில்விளை முத்தம் அருளே.


    (அ-ரை) குழலுக்குடைந்து-கூந்தலுக்குத் தோற்று, கயம்-குளம். பூகம்-கமுகு. கந்தரம்-கழுத்து. நயவேம்-விரும்பேம். பொருஉறா-ஒப்பாகாத. வேய்-மூங்கில். தோகை-மயில் வால்.       


6. வாரானைப்பருவம்


மூரிப்ப கட்டு வரிவாளை

முழங்கிக் குதிக்கக் கால்சாய்ந்து

முதிர விளைந்து சடைபின்னி

முடங்கும் பசுங்காய்க் குலைச்செந்நெல்


சேரிக் கருங்கை மள்ளர்குயந்

தீட்டி அரிந்த கொத்தினுக்குத்

தெண்முத் தளப்பச் சிறுகுடிலிற்

சேரக் கொடுபோய் அவர் குவிப்ப


வேரிக் குவளைக் குழியில்வரி

வெண்சங் கினங்கள் ஈற்றுளைந்து

மேட்டில் உகுந்த பருமுத்தை

வெள்ளோ திமந்தன் முட்டையென


வாரிக் குவிக்குந் திருச்செந்தூர்

வடிவேல் முருகா வருகவே

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


(அ-ரை)  மூரிப்பகட்டு வரிவாளை-வலிமையுடைய வரிபொருந்திய ஆண் வாளைமீன்.  சடைபின்னி - ஒன்றொடொன்று சுற்றி, முடங்கும்-வளையும்.  சேரிக் கருங்கைமள்ளர்.  பட்சேரியிலிருக்கும் வலிய கையையுடைய மள்ளர்கள் (பள்ளர்) குயம்-அரிவாள். குடில்-சிறுவீடு வேரி-தேன்.  ஈற்றுளைந்து - கருவுயிர்த்து.  உகுத்த-சொரிந்த.  வெள்ளை ஓதிமம்-வெள்ளை அன்னம். 


    புள்ள மரிந்த கதிர்ச்செந்நெற்

போரிற் பகடுதனைநெருங்கப்

பூட்டி அடித்து வைகளைந்து

போதக் குவித்தபொலிக்குவையை


விள்ள அரிய குடகாற்று

வீசப் பதடி தனைநீக்கி

வெள்ளிக் கிரிபோற் கனகவட

மேரு கிரிபோல் மிகத்தூற்றிக்


கள்ளம் எறியுங் கருங்கடைக்கட்

கடைசி பிரித்த மணிமுத்தைக்

களத்தி லெறிய அம்முத்தைக்

கண்டுகுடித்த கட்குவிலை


மள்ளர் அளக்குந் திருச்செந்தூர்

வடிவேல் முருகா வருகவே.

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


    (அ-ரை)  புள்ளம்-அரிவாள். பகடு - எருமைக்கடா, வை - வைக்கோல். போதகுவித்த - போகுமாறு செய்து குவிக்கப்பட்ட, குவை - குவியல். விள்ள - பிரிய. குடகாற்று - மேல்காற்று, கோடை, பதடி - பதர். கிரி - மலை. கள்ளம் - வஞ்சம். கடைசி - உழத்தி. கட்கு - கள்ளுக்கு. குரும்பை - தென்னம்பிஞ்சு; இளநீர்.                                                  


(53)


தேட அரிய மணியதைஞாண்

சேர்க்க வருக விரற்காழி

செறிக்க வருக திலதநுதல்

தீட்ட வருக மறுகில்விளையாட வருக மடியிலெடுத்

தணைக்க வருக புதுப்பனிநீர்

ஆட்ட வருக நெறித்தமுலை

அமுதம் பருகவருக முத்தஞ்


சூடவருக உடற்புழுதி

துடைக்க வருக ஒருமாற்றஞ்

சொல்ல வருக தள்ளிநடை

தோன்ற வருக சோதிமணி


மாட நெருங்குந் திருச்செந்தூர்

வடிவேல் முருகா வருகவே

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


(அ-ரை) விரற்கு ஆழி செறிக்க வருக - விரலில் மோதிரம் நெருக்கிச் சேர்ப்பதற்கு வருவாயாக. நுதல் திலகம் தீட்ட - நெற்றியிற் பொட்டு எழுத. நெறித்த-சிலிர்த்த அமுதம்பருக-பால் குடிக்க. சூட-கொடுக்க. மாற்றம்-மொழி. தள்ளி - நெருக்கி.                                              


(54) 


 இறுகும் அரைஞான் இனிப்பூட்டேன்

இலங்கு மகர குண்டலத்தை

யெடுத்துக் குழையின் மீதணியேன்

இனியுன் முகத்துக் கேற்பஒரு


சிறுகுந் திலதந் தனைத்தீட்டேன்

திருக்கண் மலர்க்கு மையெழுதேன்

செம்பொற் கமலச் சீறடிக்குச்

சிலம்பு திருத்தேன் நெறித்துவிம்மி

முறுகு முலைப்பால் இனிதூட்டேன்

முகம்பார்த் திருந்து மொழிபகரேன்

முருகா வருக சிவசமய

முதல்வா வருக திரைகொழித்து


மறுகு மலைவாய்க் கரைசேர்ந்த

மழலைச் சிறுவா வருகவே

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


(அ-ரை) இறுகும் - நெருங்கும். இலங்கு - விளங்கு. குழை - காது. சிறுகும் - சிறிதாயிருக்கும். சீறடி - சிறிய அடி பகரேன் - சொல்லேன். மறுகும் - சுழலும்.                                                        


(55)


 எள்ளத் தனைவந் துறுபசிக்கும்

இரங்கிப் பரந்து சிறுபண்டி

எக்கிக் குழைந்து மணித்துவர்வாய்

இதழைக்குவித்து விரித்துழுது


துள்ளித் துடிக்கப் புடைபெயர்ந்து

தொட்டில் உதைந்து பெருவிரலைச்

சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்

தோளின் மகரக் குழைதவழ


மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்

விளைத்து மடியின் மீதிருந்து

விம்மப் பொருமி முகம்பார்த்து

வேண்டும் உமையாள் களபமுலைவள்ளத் தமுதுண் டகமகிழ்ந்த

மழலைச் சிறுவா வருகவே

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


(அ-ரை) இரங்கி-வருந்தி. பரந்து-சென்று. எக்கி-ஒரு புறம் வற்றி வளைந்து. குழைந்து-வாடி. மகரக்குழை-மகர குண்டலம். குறுமூரல்-புன்சிரிப்பு. உமையாள் களபமுலை வள்ளத்தமுதுண்டு-பார்வதியின் களபமணிந்த கொங்கையினின்று ஒழுகிய பாலைக்  கிண்ணத்தில்  ஏந்திக்கொடுக்க  உண்டு;  இதனால்  உமைமுலை எவராலும்  வாய்வைத்து  உண்ணப் பெறாதாக உண்ணாமுலை யென்பர்.               


(56)


 வெண்மைச் சிறைப்புள் ஓதிமங்கள்

விரைக்கே தகையின் மடலெடுத்து

விரும்புங் குழவி யெனமடியின்

மீதே இருத்திக் கோதாட்டித்


திண்மைச் சுரிசுங் கினிற்குவளைத்

தேறல் முகந்து பாலூட்டிச்

செழுந்தாமரைநெட் டிதழ்விரித்துச்

சேர்த்துத் துயிற்றித் தாலாட்டப்


பெண்மைக் குருகுக் கொருசேவற்

பெரிய குருகு தன்வாயிற்

பெய்யும் இரையைக் கூரலகு

பிளந்து பெட்பின் இனி தளிக்கும்


வண்மைப் புதுமைத் திருச்செந்தூர்

வடிவேல் முரகா வருகவே

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


அ-ரை) சிறை-சிறகு. விரைக்கேதகை-மணம் பொருந்திய தாழை. கோது ஆட்டி-குற்றம் போக்கி, திண்மை-உறுதி. தேறல்-தேன் துயிற்றி-தூங்கச் செய்து. துயில் என்னும் தன்வினைப் பகுதியடியாகப் பிறந்த பிறவினையெச்சம். பெட்பின்-ஆசையுடன்.                                           


(57) 


ஓடைக் குளிர்தண் துளிப்பனியால்

உடைந்து திரையில் தவழ்ந்தேறி

ஒளிரும் புளினத் திடையொதுங்கி

உறங்குங் கமடம் தனைக்கடந்து


கோடைக் குளிர்காற் றடிக்கஉடல்

கொடுகி நடுங்கி ஊன்கழிந்த

குடக்கூன் பணிலத் துட்புகுந்து

குஞ்சுக் கிரங்கி இரைகொடுக்கும்


பேடைக் குருகக் கொருசேவற்

பெரிய குருகின் சிறைப்புறத்துப்

பிள்ளைக் குருகு தனையணைத்துப்

பிரச மடற்கே தகைப்பொதும்பின்


வாடைக் கொதுங்குந் திருச்செந்தூர்

வடிவேல முருகா வருகவே

வடிவேல் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


    (அ-ரை) புளினத்திடை-மணல்மேட்டில். கமடம்-ஆமை. குடக்கூன்-குடம்போல்விளைந்த பேடை. பெடடை. இதன் எதிர்மொழி சேவல். புறத்து-இடத்து. பிரசம்-தேன்.   



விண்டு மாவின் கனிதடத்தின்

மீதோ வீழக் குருகினங்கள்

வருவி இரியக் கயல்வெகுண்டு

வெடிபோய் மீள மண்டூகம்


கண்டு பாய வரிவளை

கழிக்கே பாயக் கழிக்கானற்

கம்புள் வெகுண்டு துண்ணெனக்கட்

கடைதாள் விழித்துத் தன்பார்ப்பைக்


கொண்டு போயக் கருவாளைக்

குலைக்கே பாயக் குடக்கனியின்

குறுங்காற் பலவு வேர்சாய்ந்த

குழிக்கே கோடி கோடிவரி


வண்டு பாயுந் திருச்செந்தூர்

வடிவேல் முருகா வருகவே

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா வருகவே.


(அ-ரை) விண்டு-காம்பாற்று, தடம்-தடாகம், குளம்-வெருவிஇரிய-

அஞ்சியோட. வெடிபோய்-தாவி. மண்டூகம்-தவளை. கழி-உப்பங்கழி. கம்புள்-சம்பங்கோழி. பார்ப்பை-குஞ்சை. குலைக்கே-மணல்மேட்டில் செய்கரையில். குழிக்கே-குழியில்.                                                  


(59) 


 பேரா தரிக்கும் அடியவர்தம்

பிறப்பை ஒழித்தப் பெருவாழ்வும்

பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்

பெருமா னென்னும் பேராளாசேரா நிருதர் குலகாலா

சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்

தேவா தேவர் சிறைமீட்ட

செல்வா என்றுன் திருமுகத்தைப்


பாரா மகிழ்ந்து முலைத்தாயர்

பரவிப் புகழ்ந்து விருப்புடனப்

பாவா வாவென் றுனைப்போற்றப்

பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்


வாரா திருக்க வழக்குண்டோ

வடிவேல் முருகா வருகவே

வளருங் களபக் குரும்பமுலை

வள்ளி கணவா வருகவே.


(அ-ரை) பேராதரிக்கும்-பெயரை விரும்பும். பேறும்-பிரயோசனமும். பேராளா-புகழுடையவனே. பிள்ளைப் பெருமான்-இளையபெருமாள். நிருதர்குல காலா-அசுரர் கூட்டத்துக் குக்காலனே. பாரா-பார்த்து, பரவிப்புகழ்ந்து-மிகவும் புகழ்ந்து. வழக்கு-முறை.                                           


(60)


வேறு 


    கலைதெரி புகலி வளமுற மருவு

கவுணிய வருக வருகவே

கருணையின் உரிமை அடியவர் கொடிய

கலிகெட வருக வருகவே


சிலைபொரு புருவ வனிதையர் அறுவர்

திருவுள மகிழ வருகவே

சிறுதுளி வெயர்வு குதிகொள உனது

திருமுக மலர வருகவேகொலைபுரி விகட மணிமுடி நிருதர்

குலமற வருக வருகவே

குருமணி வயிரம் இருசிகை நெடிய

குழைபொர வருக வருகவே


மலைமகள் கவுரி திருமுலை பருகு

மழவிடை வருக வருகவே

வளையுமிழ் தரளம் அலையெறி நகரில்

வரபதி வருக வருகவே.


(அ-ரை) கலைதெரி புகலி-கலைகள் தெளிந்த சீகாழி.  கவுணிய-கவுணிய  குலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தனே! கலி-வறுமை. துன்பம். சிலை-வில் வனிதையர். அறுவர்-பாலூட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர்.   பொர-மோத. கவுரி-பார்வதி. வரபதி-மேலான தலைவ!


(61)


அணிநெடு மவுலி எறிசிறு புழுதி

அழகுடன் ஒழுக வருகவே

அடியிடு மளவில் அரைமணி முரலும்

அடியொலி பெருக வருகவே 


பணிவிடை புரிய வருமட மகளிர்

பரவினர் புகழ வருகவே

பலபல முனிவர் அனைவரும் உனது

பதமலர் பரவ வருகவே 


பிணிமுக முதுகில் அரியணை யழகு

பெறவகு முருக வருகவே

பிறைபொரு சடிலர் தமதிட மருவு

பிடிபெறு களிறு வருகவே



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم