பாயிரவியல் - வான்சிறப்பு

வான் சிறப்பு

வானம் என்று மழையின் சிறப்பை உணர்த்துவதால் இயற்கையின் அவசியத்தையும் ஆற்றலையும் இன்றியமையாமையும் சொல்லப்படுகிறது...


11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

உரை : இயற்கை தன் சிறப்பான உயர்வான வானத்திலிருந்து உலகத்திற்கு வழங்கி வருவதால் தான் மழை அமிழ்தம் என்று உணரப்பட்டது..

அதாவது இயற்கை தன் உயர்வான தன்மையில் இருந்து தருவதால் மழை தான் உலகம் எப்போதும் போற்றும் அமுதம் என்று உணரக்கூடியது.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

உரை : உண்பவர்க்கும் தானே உணவாகி , உண்பவர்கள் உண்ணும் பயிர்களை உருவாக்க அவைகளுக்கும் தானே உணவாகுவதும் மழையே.

அதாவது உண்ணும் பயிர்களுக்கு உணவாவதும் மழையே . உண்ணும் உயிர்களுக்கு நீராவதும் மழையே.

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

உரை : வானத்திலிருந்து தரப்படும் மழை பொய்த்தால் வராது போனால். விரிநீரான கடலிருந்தும் வியப்பான உலகத்தை (உயிர்கள் அனைத்தும்) உள்ளே நின்று வருத்தும் பசி..

அதாவது வானத்தில் இருந்து வழங்கும் இயற்கை பொய்யானால் கடலிருந்தும் உயிர்கள் எல்லாம் பசியால் வாடும்..

14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

உரை : மழை வருவதற்கான அறிகுறியான புயல் என்னும் காற்று வளம் குன்றினால் கூட உழவர்கள் ஏரெடுத்து உழமாட்டார்.

அதாவது மழை வருமென்ற நம்பிக்கை குறைந்தால் கூட உலகில் பசி தீர்க்கும் வேளாண்மை நடக்காது. என்று மழையின் சிறப்பை வள்ளுவ பேராசான் விளக்குகிறார்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

உரை : பெய்யாமல் வறட்சியால் உயிர்களை கெடுப்பதும் . கெட்டார்க்கு சார்பாக பொழிவதும் . மற்றும் அங்கே அதிகமாய் பொழிந்து  அவர்தம் துயர் எடுப்பதும் எல்லாம் செய்ய வல்லது மழை .

அதாவது பெய்து துயர் துடைப்பதும் பெய்யாமல் வறண்டு கெடுப்பதும் என எல்லாம் செய்ய வல்லது மழை.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

உரை : வானத்திலிருந்து துளி வீழாது போனால் பூமியில் பசும் புல்லின் தலைக்கூட பார்ப்பது கடினம்.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

உரை : அரசும் அழகும் உடைய இயற்கையானவள் தான் மழையை தராததாகி விட்டால் பெரிய கடலும் தன் நீரளவு குறையும் .

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

உரை : வானம் (மேகம்) வறண்டு மழை இல்லாது போனால் உலகில் தேவர்களுக்கும் சிறப்பும் பூசனையும் இருக்காது.

19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

உரை : வானம் மழை தராது என்றால் பரந்த உலகில் பஞ்சம் விரிந்து தானமும் . பசி வந்து தவமும் இருக்காது.

20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

உரை : நீரில்லாது உலகம் அமையாது என்பதால் உயிர்களுக்கும் இறைவர்களுக்கும் ஞானியர்க்கும் மழையின்றி அமையாது அவரவர் ஒழுக்கம்.

அதாவது மழையில்லாது பஞ்சம் வந்தால் ஞானியும் கூட ஒழுக்கம் தவறி திருடுவான் . என்பதால் மழையின் அவசியத்தை பேராசான் விளக்குகிறார்.


1 تعليقات

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم