இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்பவர்கள் சமூகத்தோடு ஒன்றி வாழ்வதால். இல்லறத்தின் கடமைகளோடு . சில நற்குணங்களும் அவசியப்படுகின்றன . அவற்றை வள்ளுவ பேராசான் வரிசையாக விளக்கம் செய்கிறார். அடக்கம் ஒருவருக்கு எத்தனை நன்மை தரும் என்று இங்கு விளக்குகிறார்..
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
உரை : அடக்கம் என்னும் குணம் உயர்ந்தால் ஒருவன் துறவிகளுக்கு ஒப்பாக கருதப்படும் தேவர்களில் முன்னவனாவான். அடங்காமையினால் ஒருவன் பொறுமையற்ற இருள் வாழ்வில் முன்னவனாக விழுவான்.
122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
உரை : அடக்கத்தை விட உயிர்க்க பெரிய சிறப்பில்லை என்பதால் அக்குணத்தை பாதுகாக்க வேண்டிய பொருளாக கருதி காக்க வேண்டும்..
123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
உரை: அறிய வேண்டியவைகளை மெத்த கற்றும் ஒருவன் அடக்கத்தோடு வாழ வேண்டும் என்று உணர்ந்து வாழ்கிறான் என்றால் அக்குணத்தினாலே அவனுக்கு பெருமையும் மதிப்பும் ஏற்படும்.
124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
உரை: தன் நன்னிலையில் இருந்து மாறுபடாது அடக்கம் பேணுவனின் புகழும் பேரும் மலையை விடவும் பெரியதாக போற்றப்படும்.
125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
உரை : குணத்தளவில் அனைவருக்கும் பணிவு என்பது நன்றே ஆயினும் செல்வந்தர்களுக்கு அதுவே தனித்த செல்வமாக மதிப்பூட்டும்..
126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
உரை : ஒற்றைச் சிந்தையில் ஒருவர் ஆமைதனது ஓட்டுக்குள் அடங்குவது போல ஐம்புலனை அடக்குவான் என்றால் எப்போதும் அரணாய் இருக்கும்.
127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
உரை : எதை காக்காமல் விட்டவர் என்றாலும் பேசும் நாவை அடக்கிக் காக்கவும். காக்காவிட்டால் சொல்லால் அவமதிப்பு பட்டு மனம் வருந்துவர்
இங்கு நாகாக்க என்பதை உணவிற்கும் ஏற்கலாம். உணவின் மேல் கொண்ட பற்றால் அவமானம் அடையும் பலரும் இன்றுள்ளனர். பெரும்பாலும் குடிக்கு நா மயங்கியவர்கள்.
128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
உரை : தீயசொற்கள் பேசியதால் விளைந்த பயன் ஒன்றுதான் என்றாலும் அதுவே ஒருவனின் குணத்தை கெடுப்பதாகி விடும். சொல்லால் ஏற்பட்ட இழுக்கு வஞ்சகமாகி பழிவாங்க செய்யும் என்பதால் தீய சொற்கள் பேசாதீர்.
129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
உரை : நெருப்பது சுட்ட காயம் வலித்தாலும் மனமானது ஆறிவிடும் ஆனால் தீய சொல்லால் தாக்கப்பட்ட மனம் ஆறாது பழிசெய்யும் என்பதால் தீயசொல் பேசாதீர்.
130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
உரை : சினத்தை அடக்கி ஒதுக்கி அறிவினால் உயர்ந்தும் அடக்கம் பேணுபவனின் வழியில் பல்வேறு அறங்கள் அவன்பாதம் பட காத்திருக்கும் . அதாவது மற்ற அறங்கள் அவனுக்கு அதுவாக வந்துவிடும்.
إرسال تعليق