#மீள்...
#சமர்ப்பணம்
சமர்ப்பணம்.. ஆம் சமர்ப்பணம்
என் வாழ்வின் உணர்வனைத்தும்
என் வாழ்வின் நிகழ்வனைத்தும்
சமர்ப்பணம் சில உயிர்க்கு சமர்ப்பணம்...
முதல்மரப் பழந்தின்று விதையெச்சம் விட்டு
முதல்காடு தனைச்செய்த உயர்பறவைக்கு
என் ஆனந்த கண்ணீர் அனைத்தும் சமர்ப்பணம்..
வயிற்பசி தீர்க்க நற்றுணவு காண
உயிர்நீக்கும் விஷமுண்ட உயிர்தமக்கு
என் விரதங்கள் அனைத்தும் சமர்ப்பணம்..
உயிர்பசி தீர்க்க உற்பத்தி உத்திகண்ட
உயிர்தனக் கெல்லாம் உறுதுணையாகியவைக்கு
என் பகிர்தல் அனைத்தும் சமர்ப்பணம்..
மனிதகுலம் தழைக்கும் மாபெரும் வழியறிந்து
மனிதவுயிர் தொடர முதற்பிரசவம் பொருத்தவளுக்கு
என் வாழ்நாள் அனைத்தும் சமர்ப்பணம்..
தூரங்கண்டு ஈரங்கண்டு நேரங்கண்டு வாழ்வினை
சீராய் வகுத்த வீரமறங்கண்ட முன்னோர்தமக்கு
என் வாழ்வின் இன்பங்களனைத்தும் சமர்ப்பணம்..
மருந்தறிந்து விருந்தமைத்து சுற்றம் வளர்த்த
கரும்பினிய சித்தர் ஞானியர் தமக்குமே
என் வாழ்வின் அறிவெல்லாம் சமர்ப்பணம்..
போதையும் கீதையும் நீதியும் சதியும்
கோதையும் விதியும் விளக்கி எழுதியவர்க்கு
என் வாழ்வே முழுதாய் சமர்ப்பணம்..
சமர்ப்பணம் ஆம் சமர்ப்பணம்
உலகம் தர்ப்பணம் தந்தவர்க்கு
إرسال تعليق