ஒரு கவிதை என்ன செய்யும்?
பால்வெளித் தொட்டிலில் படர்கிற உயிர்களை
பார்க்காமலேயே தடவி விடும். - இருந்தவிடத்தே
ஆல்மரத்தடியில் ஊஞ்சல் செய்து தரும்.. - விண்கலமின்றி
நிலவில் வீடுசெய்து ஒருயுகம் வாழச்செய்யும்..
எப்போதோ நட்ட மரத்தின் மலர்களை
அவ்வப்போது கையில் கொண்டு தரும். - சிலநேரம்
காகித்திற்குள் கானகத்தை காட்சி காட்டும்
பூவுலகில் கொஞ்ச நேரம் புதுமைகாட்டும் - ஒருவேளை
உணவாகும் பசிநேரம் அமுதாகும் விருந்தாகும்
நினைத்தாலே நினைவூரும் அணைக்காமல் அனைத்தாளும்
எலிசபத்தையும் ஏழையாக்கும் அரைக்கிறுக்கனையும் ஐன்ஸ்டீனாக்கும்.. - பித்தாகிப்
பின்சென்றால் போதியாகி புத்தனாக்கும் இல்லையேல்
புத்தனையே உங்கள் பக்தனாக்கும் - கவிதை..
எழுதப்படும் மந்திரக்கோல் சுவைதீர ருசிப்பார்க்கு
மன்மதனின் அம்பாகும் மனமாற சுகிப்போர்க்கு - போர்வைதரும்
குளிராகும் எங்கிருந்தோ நமைப்பார்த்து கண்சிமிட்டும்
விண்மீனுக்கு இங்கிருந்தே நாம் செய்யும் பரிபாஷையே கவிதை..
தென்றலுக்குள் சூரியனையும் எரிமலைக்குள் மல்லிகையையும் வைத்துவிட்டு சிரிக்கும் குழந்தை கவிதை..
காமம் தொட்டுவிடா இடத்தை எட்டிநலம் செய்யும். கவிதை..
إرسال تعليق