இல்லற வாழ்வில் இணைந்து வாழும் தம்பதியர் சமூகத்தை சந்திக்கும் பாகத்தில் இது இரண்டாவது குணம். விருந்து அல்லாதவரிடம் இனிமையாக பேசுவதால் வரும் நன்மைகளை பேராசான் விளக்கம் செய்கிறார்.
91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உரை : எது இனிய சொல்? என்று வகைபட சொல்லுங்கள் பேராசானே..
அறம் மற்றும் உண்மையை அறிந்த அறிஞர் அன்பொடு கலந்து சொல்லும் சொல் இனிய சொல் ஆகும் பிள்ளாய்.
92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
உரை : அகம் மலர்ந்து பொருளை தருபவனை விடவும் முகம் மலர்ந்து இனிய சொல் கூறுபவன் சிறப்புடையவன்.
93. முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
உரை : பிறருடன் பேசும்போது மனம் மகிழ்ந்து அதனால் முகம் மலர்ந்து அவரது மனம் இனிமை பெறும்படி இனிய சொல்லை சொல்வதே அறம்.
94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
உரை : அனைவரிடத்தும் இன்பம் தரும் இனிய சொல் பேசுபவர்க்கு துன்பம் தரும் வறுமை இல்லாமல் போகும்
95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
உரை : பணிவு கொண்டவனாகவும் இனிய சொல் பேசுபவனாகவும் ஆவது ஒருவருக்கு சிறப்பும் கவர்ச்சியும் தரும் அணிகள். அவையற்ற மற்ற பிறவை அணிகளல்ல.
96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
உரை : நல்லவை பற்றி இனிமையாக சொல்லிட அனைவருக்கும் தீயவை ஒழியுமாறு அறம் பெருகும் .
97. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
உரை : இனிய பண்பிலிருந்து விலகாத சொல் . பிறருக்கும் பேசுபவருக்கும் நன்மையையே தரும்.
98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
உரை : ஒழுக்கத்திற்கு மாறான செயல்களில் இருந்து நீங்கிய இன்சொல் , அதனை பேசுபவருக்கு இப்பிறப்பிலும் இனிவரும் பிறப்பிலும் இன்பத்தை தரும்.
99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
உரை : இனிய சொல் இனியது தருவதை அறிந்த பின்னும் எவன் தான் வன்மையான சொற்களைப் பேசுவது.
100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
உரை : இனிமை கொண்டதாக இல்லாத கூற்று என்பது கனி இருக்கும் போது காயை விரும்புவது போலானது.
அதாவது கனி இனிமை தருவது தெரிந்தும் காயை விரும்புவது மடமை என்கிற நோக்கில் இனிமை இல்லாத கூற்றும் மடமை என்கிறார் பேராசான்
إرسال تعليق