வான மத்தியில் நீயி ருந்திட
வாவி வந்துதித் தாறு சோதியாய் நின்றவேளே
ஞான பண்டித னாகி நின்றிட
ஞால முன்புகழ் பாடி போற்றிட
ஞாழல் சூடிய நாதன் கொஞ்சிடும் சாமிநாதா.
தேன ருஞ்சுவை யாயி னித்திடும்
தேவ குஞ்சரி வாய்மொ ழிந்தினுந்
தேடி வந்தவர் தான்வ ணங்கிட காவலாகி
மான னைந்தநல் மாத வள்மலை
மாய மாமகள் மேவு சத்தியை
மாறி ஆறதும் கூடி ஒன்றென வந்தவேளே. 1
போக மாமுனி தான்வ ணங்கிட
போத ஞானமும் தான்வ ழங்கியே
பேத மைதிரித் தாண்ட நாயக கந்தமாகி
யோக சித்திகள் யாவும் பெற்றிட
யோக நாதனும் தான்ப ணிந்திட
யோக சேதிகள் போத னைதரும் செந்திலோனே.
பாக மங்கையும் பாதி தந்தவர்
பார்வை யிற்சுட ராக வந்தநற்
பாகு சொல்லினில் போத னைசெயும் பாலநாதா
தாக மேலிட பூமி மேல்பிழை
தான்பெ ருத்திட வேபொ ருத்தருள்
தாரு மென்றடி தான்ப ணிந்திட என்னைகாப்பாய் 2
நேருஞ் சிந்தையில் நேர்மை வந்திட
நேயம் பொங்கிட நேசம் ஊறிட
நெஞ்ச மஞ்ஞையில் ஏறி ஆளவா கந்தவேளே
பாரும் தூளென பார்வை கொண்டிட
பாத மண்ணென பாவம் தீர்ந்திட
போக வாழ்வினில் யோகி யாகிட நன்மையாலே
ஊரும் போற்றிட ஊக்கம் கூடிட
ஊசல் கோள்களும் ஊட்டம் சேர்த்திட
ஊறு நீங்கிட உள்ளம் நின்றுநீ என்னவாதான்
தீரு மார்க்கமே தோய சேர்த்திடு
தீய துன்பமும் தீர தீய்த்திடு
தூய உள்ளமாய் தூய்மை செய்திடு என்குகனே. 3
வீணை கம்பியாய் மீட்டி என்னுயிர்
ஞான ராகமே நாளும் பாடிட மீட்டிடாயோ
சேனை தூள்படும் சேவல் கொற்றனே
சோகம் தீர்க்கவே சோதி யாகிவா
சீதம் நீங்கவே சீலம் நீதர வேண்டுவேனே.
ஊனை கோயிலாய் ஊட்டி பேணியே
ஊரை தேடியே உள்ளம் நோகிறேன்
உண்மை சொல்லியே உன்னில் சேர்க்கவே நீயும்வாவா.
மானை கையிலே ஏந்தி ஆடுமோர்
மோன நாதனின் போத ஞானனே
மேதா வேதனே மேக சித்தனே வல்லமைதா. 4
நாக நஞ்சுடை நீல கண்டகொள்
நாத ஈசனார் ஞான நாதனே செந்திலோனே.
பாகு செந்தமிழ் பாடி உன்பதம்
போது சூடிட போத தான்பெற தந்தவேளே
நோகு நெஞ்சமும் நேச மேவியுன்
நீண்ட பொற்பதம் தன்னில் சேர்த்திட முக்திசேர
வேகு தீயினில் விட்ட கையென
கர்மம் சுட்டிட கன்மம் கெட்டிட வல்லமைதா. 5
எண்ணில் என்னுயிர் ஏற்ற தோன்றலை
எண்ணி எண்ணியே என்னில் தேய்ந்திட கைதருவாய்
மண்ணில் முன்வினை மர்மம் மண்டிட
மன்னன் உன்னருள் மின்னி என்வினை துண்டாக
கண்கள் சிந்திடும் கண்ணீர் மாறிட
கண்கள் மூன்றுடை காலன் தன்குக கந்தவேளே
பண்ணில் உன்புகழ் பாடி என்மனம்
புண்ணில் புண்ணியம் பொங்கி வந்திடும் வல்லமைதா. 6
வண்ண மஞ்ஞயில் வந்து எம்துயர்
விட்டு ஓடிட வேலை வீசிடும் வீரசேனா
அண்மை நின்றுநீ அன்பு சிந்திட
அங்கம் மின்னிடு ஆறு சோதிநீ கூடநிற்பாய்
உண்மை மின்னிட உள்ளம் செய்திடு
என்னை உன்னுடை என்று மாற்றிடு ஞானநாதா
திண்மை கைவருந் தன்மை தந்திடு
திங்கள் சூடிய தேசன் தன்மக வேலவனே. 7
போதம் வேண்டியுன் பாதம் பற்றிட
போது என்மனம் பூவாய் வைத்திட ஞானமொன்றை
ஓதி என்வினை ஓய போர்புரிந்
தோடும் வாழ்வினில் ஓடி முக்தியை யானுமேவ
கீத ராகமும் கான நேசனே
கோர சங்கட சோர நாயக காந்தனாகி
பூத பஞ்சமம் போக நித்தியம்
பேணி முக்தியில் யோக சித்தியை தந்துஆள்வாய் 8
பாசம் பற்றிட பாவம் போர்த்திய
பூஞ்ஞை மிக்கிடு பூத சங்கம என்னுடலை
காசில் பொன்னென காயம் மின்னிட காயும் முன்வினை காய்ந்து முற்றிய ஞானமெய்தி
பூசை கண்டடி போற்றி பாடிட
பாசை பட்டுடல் பாரை விட்டிட கண்டமேவ
வாசி மேவியே வாதம் மக்கிட
வேச மாயைகள் வேறு மாகிட சித்தனாகி. 9
பற்று கொள்ளுடற் பற்றி புண்ணிய
புற்றை எட்டிட பூவில் தேனதை உண்ணுமாறு
உற்று வாசியை ஊக்கி உள்மிக
வெப்பம் ஓயவே நீர்மம் சாயவே என்குருவாய்
குற்றங் குன்றிட கொற்றம் கொண்டுநீர்
சற்று வந்தமர் தென்னில் கோனென நின்றுஆள
வெற்றி பெற்றிட வேத சக்தியாய்
உற்று என்னுடன் ஊறி வந்திடு சாமிநாதா. 10
إرسال تعليق