ஆறிரு தோளும் அருள்தரும் முகமும்
சீறிடும் வேலும் சிவனவர் உருவும்
ஏறிய மஞ்ஞம் எழிலுடை வடிவும்
மாறிலா நெஞ்சும் மகிழ்வுர வருக. 1.
காரிருள் மேனிக் கரிமுகன் இளையோய்
ஆரிருள் தாளா அடியவர்க் கருளாய்
போரிருள் தாக்கிப் பொசுக்கிடுஞ் சுடரே
பேரிடர் நீக்க பெருங்குகன் வருக 2
யாரிடம் போவோம் யதுகுல பெருமாள்
ஓரிடம் தோற்ற ஒருசுடர் எடுத்து
வேரிடம் வைக்க வெளிபடு குமரா
ஊரிடம் போற்றும் உமைகுகா வருக 3
சேரிடம் தேர்ந்து சரிவரக் குவிந்தோம்
ஈரிடம் போகா இறைநிலை தருவாய்
சீரிடம் தேடி சிவநிலை அடைய
சேரிடம் நீயே சிவகுகா வருக 4
தீயொடு காற்றும் திருந்திய நீரும்
வீயொடு மண்ணும் விரும்பியே தாங்க
வேயொடு தோன்றி விளைநிலம் கண்டாய்
சேயொரு ஆறாய் சிசுவென வருக 5
ஆறிரு கரமும் அத்தனை விழியும்
கூறிடு வேலும் குக்குட கொடியும்
நீறிடு நெற்றி நிர்மல வடிவும்
ஏறிடு மஞ்ஞம் என்றுநீ வருக 6
இயம்பிய வாயில் இதந்தரு இசையும்
நயம்படு நாவில் நவிழ்ந்திடும் அழகும்
புயம்படு வீரம் புகழ்தரக் களிப்பின்
அயம்படு புவியில் அமைதலும் நலமே 7
எழுதிய கவியில் எழுகிற சுவையில்
வழுவிலா நிலையில் வளர்ந்திடு முருகா
பழுதென கிடக்கும் பழம்பொதி மனத்தை
உழுதுன தெனவே உருசெய வருக 8
இருநிலத் தெனையே இடர்வரு முன்னே
பருப்பதம் கொடுத்தே பதஞ்செயல் வேண்டும்
கருமுதல் எனக்கும் கடைதுணை நீயே
உருவென உடனே கடனென வருக 9
செருக்களம் அதிலே செருக்கினை அழித்த
குருகுகன் உனையே குவியத்தில் நினைத்தேன்
அருளுடை இறைவா அரிஅரண் தலைவா
பொருளுடை புவியில் புகழ்பட வருக. 10
إرسال تعليق