#மார்கழி_திங்கள்
மூங்கில் போன்ற மென்னுடலில் ஒன்பதாம்
ஏங்கும் துளையிட்டு ஏழையெனை வாசியில்
தாங்கும் உயிர்தந்து வாசிக்கும் கண்ணன்.
வாங்கும் மூச்சினால் வாழியான் குழலாம்
நீங்கும் காற்றும் மொழியும் இசையாம்
யாங்கும் நிறைந்த யாதவன் இதழ்பட
காங்கும் உடல்கண்டு துஞ்சீரோ காணிவாழிகளே..
#மார்கழி_திங்கள்
ஆலயந் தன்னில் அமர்ந்திடு வானெனை
காலதர் வாயிலாய் கவர்ந்திட வந்தான்கால்
போலவன் வந்திங்கு புலர்ந்தான் மனதினில்
நூலது போலவே நுழைந்தான் யாதவன்
மாலனவன் மாயசெயு மாதவன்
சீலன் புகழை பாடேலோ எம்பாவாய்..
#நேரிசை_ஆசிரியப்பா..
கேசவன் மாதவன் கோவிந்தன் யாதவன்
கோசல நாயகன் கார்முகில் மேனியன்
மாசறு மாயவன் மாமறை மூர்த்தியின்
மாசில் குழலே மயங்கிடா யோஎங்கள்
ஆசறு மாயன் அருட்கரந் தொட்டிட
ஆசைகள் தீர்ந்ததோ அவ்விதழ் தீண்டலில்
தாசனென் றானாயோ தர்மங்கள் கற்றாயோ
நேசனின் குழலினை கேட்டிலையோ எம்பாவாய்
#எண்சீர்_வெள்ளைவிருத்தம்..
#மார்கழி_திங்கள்
மாருதி தாள்சேரு மாயனை ராமனை
நீருறை பாம்பினை நீரினில் வென்றானை
பாருலகில் பாடிடுவோர் பாவமதை போக்குவனை
பேருருளை பெற்றிட நாமுயர
பேருதவி செய்யவானை பாடாயோ எம்பாவாய்..
#நேரிசை_ஆசிரியப்பா
நாரணன் தன்னையே நிற்கும் எமையாளும்
நாரணன் வந்திங்கு நர்த்தனம் செய்யானோ
காரணம் யாதோ கொடும்பா வந்தானோ
காரணம் யான்செய் கருமங்கள் தானோ
ஆரணமாய் காதிலாடும் ஆபரணமே கேட்டுரைப்பாய்
ஆரணமாய் இவ்வுலகை ஆழியில் நின்றுகாப்பான்
பூரணமாய் தூணினுள் புத்துருவில் நின்றானை
பூரணமாய் நம்பினேன் பூவுலகில் எம்பாவாய்..
#எண்சீர்_வெள்ளைவிருத்தம்..
#மார்கழி_திங்கள் 4
பாற்கடல் துயில்வோனை பாரதத்தின் சாரதியை
வேற்றென எண்ணுமீர்காள் வேற்றிலை தானுமே
சேற்றுறை நல்விதை சேனென மாறுதற்
போற்புவி தன்னில் புல்லிலும் உள்ளோனை
ஏற்பதெம் புண்ணியம் ஏற்ப அமைந்தோனை
வேற்றினில் தேடுகிறீர் நம்முள்ளே
ஊற்றென உள்ளோனை பாடேலோ எம்பாவாய்..
#நேரிசை_ஆசிரியப்பா..
சாரதியாய் நம்பிரான் சாந்துணையும் வந்திடுவான்
தேரதுவாய் வாழ்க்கையில் தேசாய் அமர்ந்தவன்
போரதுநாம் செய்கையில் போர்வையாய் காத்திடுவான்
போகுமிந்த காலமவன் போக்கிலே மாற்றுவான்
நாரணன் நம்கண்ணன் நாளையை நன்றாக்கும்
நூதனம் செய்வான் நாடினர்க்கு நற்றுணையாய்
வாரதில் வாழும்நம் வானவர்த் தெய்வம்
வருமழகை கண்டிங்கு பாடேலோ எம்பாவாய்..
#எண்சீர்_வெள்ளைவிருத்தம் ...
#மார்கழி_திங்கள்
யாதவன் மாதவன் யாவையும் உண்டவன்
யாதவ மங்கையர்க்கு யாவுமாய் ஆனவன்
காதலன் என்கண்ணன் கைக்கொண்ட குழலே
காதல் இசைத்தானோ கண்ணனை கேளாய்
பேதங்கள் பாராதே பேதையான் நீயன்றோ
பேதங்கள் ஏதிங்கு பேராவல்
கீதங்கள் கேட்டுநின்ற கூட்டத்தொன் றேம்பாவாய்.
#நேரிசை_ஆசிரியப்பா..
உலகளந்தான் தன்கரத்தால் உண்டமண்ணால் உலகுண்டான்
உலக உயிரெக்குள்ளே உள்ளதெல்லாம் தானாய்
அலமுண்டான் தன்மணத்தில் அன்பாய் துணையாய்
அலந்தரு நாகம் அடக்கி அருள்செய்
நலந்தருவான் நாரணன்தான் நம்மையாளும் மாயன்
நலன்மிகு நண்பனாவான் நாதனாவான் நாளும்
நிலம்போல் நமைதாங்கும் நாரணன் எம்கண்ணன்
நிலமகள் கேள்வன் நினையாயோ எம்பாவாய்..
#எண்சீர்_வெள்ளைவிருத்தம்..
#மார்கழி_திங்கள்
வையம் அளந்தீரோ வானலை புள்ளினங்காள்
தேயம் அலைந்தீரோ தேசுடை மாயனிடம்
ஆயம் புரிந்தீரோ ஆளறிந்தீ ரோகண்டு
நேயம் பகர்ந்தீரோ நெஞ்சம் மொழிந்தீரோ
தீயம் சிறிதிலா திரிபுடை
காயம் கலங்குதற் கண்டுரைத் தீரோ..
#நேரிசை_ஆசிரியப்பா #புள்ளினங்காள்..
#மார்கழி_திங்கள்
கார்குழல் பாணிநம் கண்ணன் வருகிறான்
சீர்தரு செல்வஞ் சேர்த்துநாம் படைக்கின்றோம்
தார்தனை சூடிநம் திருமாலே வருகிறான்
கார்வண்ணங் கண்டுநாம் கால்மறக்க போகிறோம்
வார்துயிலும் மாயன்தான் வந்தருள
நேர்துயரம் யாவையும் மறந்தேலோ எம்பாவாய்
#நேரிசை_ஆசிரியப்பா..
பாணி - கரம்
தார் - ஆண்கள் அணியும் இணைக்கப்படாத மாலை
கால் - காற்று இங்கு மூச்சு எனக்கொள்க
வார் - கடல்..
#மார்கழி_திங்கள் #இலக்கணம்_கற்றபின்
அன்பால் இணைத்த அரங்கன் நமதுளத்தே
அன்பால் நிறைத்த அருமைபாடி நாமுமிங்கு
நன்மைபல செய்து நலமுய் துணைசெய்யும்
நன்றன் துயிலன்நம் நாரணனை நம்பியே
இன்றை துவங்கினோம் இன்பம் பெறுகிறோம்
கன்றை பசுவினை காத்திடுங் கோவிந்தன்
தன்னை மார்கழி திங்கள் கதிர்வரும்
முன்பே புகழினை பாடேலோ எம்பாவாய்
#எண்சீர்_விருத்தம்
إرسال تعليق