விட்டுவிடுங்கள்
அந்த ஈரம் கசியும் பாறைகள்
துரோகங்களுக்கு பழகவில்லை
விட்டுவிடுங்கள்
உங்கள் ஆலயங்களின் மதில்சுவரின்
கற்கள் மதங்களுக்கு பழக்கப்படவில்லை..
விட்டுவிடுங்கள்
நம் ஈசல்களுக்கு
பட்டாம்பூச்சியின் வர்ணங்கள் பிடிக்கவில்லை.
விட்டுவிடுங்கள்.
அந்த தேனீக்களின் வாயில்
பாகற்ப்பூவின் தேனும் இனிக்கிறது..
விட்டுவிடுங்கள்
இந்த மந்திர நதியிடம்
ஆசைக்கு மாற்று இல்லை.
விட்டுவிடுங்கள்.
வர்ணங்களில் குழையும் தூரிகைக்கு
வறுமையின் வலி தெரிவதில்லை
விட்டுவிடுங்கள்
எங்கள் கொண்டாட்டங்களின் சப்தங்கள்
உங்கள் மௌனங்களுக்கு பழக்கப்படவில்லை.
விட்டுவிடுங்கள்
நம் கடவுள்களுக்கு கொண்டாட தெரியாது..
விட்டுவிடுங்கள்
அந்த இறகுள்ள குதிரைக்கு
கால்கள் அவசியப் படாது..
விட்டுவிடுங்கள்..
அந்த மறதிச் செடிகளுக்குள்
மலர்களின் வாசனை தோன்றுவதில்லை..
விட்டுவிடுங்கள்
அந்த நெருப்புக்கு கழிவுகள் பற்றிய
படிப்பு ஏதும் இல்லை
விட்டுவிடுங்கள்
உங்கள் சோதிகளில் நாங்கள் கற்பூரமாக
பற்றியெறிய கற்கவில்லை.
விட்டுவிடுங்கள்
இங்கு யாரும் நீங்களாக மாறப் பிறக்கவில்லை.
إرسال تعليق