கருக்காவூராள் பதிகம்

கோயில் தெரியாது  நேத்துவரை கேள்விப்பட்டது கூட கிடையாது அதனால அங்கங்க குறையிருந்தால் மன்னிக்கவும்.  எந்த பதிகம்நாளும் பாத்துட்டேன் 8,9,10 வது பா மட்டும் எப்படியும் சிறப்பா வந்துடுது.. அதுல தான் தெரியுது என்கையில ஒன்னும் வரதில்லன்னு. 

#கருக்காவூராள்_பதிகம் #கலித்துறை

முல்லை வனத்து முழுமதி யாளே கருத்துணையாள்
தில்லை வனத்து திகம்பரர் போற்று கருத்துணையாள்
சொல்லில் அடங்காத சொர்ணாம் பிகையே கருத்துணையாள்
இல்லம் செழிக்க இனிமை கொழிக்கும் கருத்துணையே 1

முருகு முருகும் முருகனின் தாயே கருத்துணையாம்
அருகு அணியும் இபமுகன் தாய்நம் கருத்துணையாம்
அருவி அனைய கருணை உடையாள் கருத்துணையாள்
மருந்தி விருந்தி மதங்கி தருவாள் அருள்பலவே 2

நன்மை நிறைய உதரம ருள்வாள் கருத்துணையாம்
அன்னை அவளே அமைந்திடும் பிள்ளை அதுமவளே
முன்னைக் குறைகள் முழுதும் கரைத்தாள் கருத்துணையாம்
தன்னை சிவத்தில் திளைத்து கிளைத்தாள் திருத்துணையே. 3

முனிக்கடன் மறந்திட்ட வேதகிக் காக கருத்துணையாள்
பனிக்குடக் காவல் பணிசெய்ய ஏற்றாள் கருத்துணையாள்
நனிமிகு நல்லாள் நமக்கென உள்ளாள் கருத்துணையாள்
பனிக்குடம் தானே பயிர்ப்பதும் தானே கருத்துணையே. 4

கனிந்திட செய்யும் கருத்தரும் மாயி கருத்துணையாம்
இனிமொழி பிள்ளை இலாதவ ரில்லை கருத்துணையாள்
பனிமலர் பாதம் பணிந்தவர் நாளும் மறந்திலரே
தனித்துயர் நீங்கி திளைப்பது எல்லாம் அவளருளே. 5

பிறைமதி சூடி பிறப்பருள் வாளாம் கருத்துணையாள்
நிறைவயிற் றார்க்கே நினைந்திட நிற்பாள் கருத்துணையாள்
இறைவியாள் நாமும் இடும்வினைக் காளாம் கருத்துணையாள்
முறைதரும் தாயாய் முழுமையும் தந்தாள் மணிவயிற்றை 6

மழலை தருவாள் மகிழக் குடையாள் கருத்துணையாள்
குழவும் குழந்தை கொடுக்கும் உமையாள் கருத்துணையாள்
உழவோர் பயிரை வளர்க்கும் பெரியாள் கருத்துணையாள்
அழகும் அறிவும் அமைந்த குழந்தை தருபவளே. 7

மனதில் நிலைத்த மலர்பதம் போற்றி கருத்துணையாள்
எனது உதரம் எழுதிடும் ஊற்றே கருத்துணையாள்
தனது அடியை நினைந்து தொழுவார் கருத்துணையாள்
சனங்கள் புகழும் சிறுமலர் போற்றி சரணமிட்டே. 8

முழுதாய் மனதாய் முனித்த தவத்தால் கருத்துணையாள்
விழுதாய் வளரும் விருதை கொடுத்தாள் கருத்துணையாள்
தொழுவார் துயரை துடைப்பாள் துடுப்பாள் இருந்திடுவாள்
எழுமை பிறப்பும் எனக்கோர் துணையாய் அருள்பவளே 9

எண்ணாமல் விட்டாலும் என்னுள்ளம் சேர்வாள் கருத்துணையாள்
கண்ணாக பொன்னாக மண்மேலே காப்பாள் கருத்துணையாள்
விண்வாழும் தேவர்தாம் வந்தருளச் செய்வாள் கருத்துணையாள்
மண்மேலே என்வேண்டும் மன்னவள் தான்நம் துணைவரவே. 10.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم