சடையுடை மலர்சிகை தாடகம் ஏந்தும் மூர்த்தியே
உனைவலம் புரிவதால் மனம் பெறும் மெய்ஞானமே
தடங்கடக்க தோணியாய் தயைபுரிந்த சோதியும்
சதாசிவத்தின் தாண்டவம் உலகிசைக்கும் ஓர்வயம்.. (1)
தொடாதுயர்ந்து நின்றவா தொழும் எளியர்க் கெளியன்நீ
விடாதுயெம்மை காக்கிறாய் விநோத ஆட்சி செய்கிறாய்
தகத் தகக் தகவென ஓளிரும் மேனி கொண்டவா
விடாதுஉன்னை வேண்டினேன் வினைகள் வென்று ஆடவே.. (2)
உமையணிந்த பாதிநீ உலகியக்குஞ் சோதிநீ
புறத்தில் நின்று ஆடுவாய் பிரம்மாண்ட மான நீதி நீ..
கரத்தில் மானை ஏந்தினாய் நீறுற்ற மேனி நீழலே
இமையணைய காவலே இமையோர் சிந்தை நாதனே (3)
குளிர்மிகுந்த மாமலை குடியமர்ந்த சோதியன்
வெளிர்நிறத்து சாம்பலை விரும்பிச்சூடும் வேதியன்
தளிர்மனத்தி லாடுவாய் தனைபடைத்த தாளத்தில்
அளிக்குங் கருணை அற்புதம் அழற்கடத்தும் பொற்பதம் (4)
சகன் சமர்த்த நாயகன் சரம் உடுத்த தோரணன்
அறம் வகுத்த அரணிவன் அகம் கொடுத்த இறையவன்
புறம் படைத்த பூதனன் பரம்பொருளும் ஆனவன்
முகம் பறித்த சேகரன் முடிபடர்ந்த சந்திரன்.. (5)
தானாட அண்டம் ஆக்குவாய் தாளாத கோபம் கொண்டவா
தானாடி துன்பம் போக்குவாய் தாயாக எம்மை தாங்குவாய்
ஊனாக தன்னை தந்தவா உமையோர் பாகம் கொண்டவா
யானாக உன்னை மாற்றியே தானாக என்னை மாற்றினாய்.. (6)
கேளாத இன்ப ராகத்தில் ஓயாது ஆடும் ராசனே
தாளாலே எம்மை காக்கிறாய் தாராத இன்பம் தந்துநீ
வாளாலே தீமை வீழ்த்தினாய் வீடேற எம்மை வார்க்கிறாய்
மாளாத மாய ரூபனே மாறாத மாற்றக் காரனே. (7)
கரத்தில் மானைப் போலவே தகத் தகத் தகித்திடும்
கரத்தில் சோதி தாங்கினாய் புரத்தில் தீயை இட்டவா
சிரத்தில் உன்னை ஏந்துவார் சிந்தைக்கு விந்தை செய்பவா
வரங்கள் சிந்தும் நாயகா விரோதம் நீக்கவே நம (8)
நதியை தாங்கும் சிகையிலே நாகத்தை கட்டி வைத்தவா
விதியை மாற்றும் மாயவா விடத்தை உண்ட கண்டனே
பதியாய் நின்ற பாவலா பரந்து நின்ற சோதியே
மதியை சூடும் ஏகனே தகிக்கும் கட்சிதன் மம (9)
அகன்ற சிந்தை அற்புத அரசன் நீயும் அல்லவா
கலைகள் கற்ற வித்தகா களத்தில் வீர சித்தனே
சராந்தகன் புராந்தகன் மகாந்தகன் பராந்தகன்
சதாந்த காந்த காந்தகன் ஏகாந்த காந்தகன் சரண் (10)
தடத்தடத் தடவென தடம்பதிக்கும் தாளதில்
மடவுடல் சடமிதை விடபணிந்து ஏத்தினேன்
கடக்கட கடவென கடந்துவந்த போதிலும்
மடத்திடை விடைபெற முடிவின்றியே நீள்கிறேன். (11)
சிறந்த சிந்தை ஞானமே இறப்பில் காக்கும் மூலமே
பிறந்த என்னை காக்கவே பரந்து நின்ற பரமனே
மறந்து நின்ற போதிலும் மனத்துள் மருவி நின்றவா
உறங்குகின்ற வேளையும் உடனிருக்கும் தோழனே (12)
தமித் தமித் தமியென தவித்த நெஞ்சம் தாங்குமோ
உமிக் குமிந்த வேதைனை உறுத்தல் என்றும் நியாயமோ
அமிழ்தம் உண்ட தேவரும் அறிதலாகா நாதனே
தமிழ் தெரிந்து என்னிடம் தயை தந்தாய் சரண் (13)
அழிக்கும் அந்த தாண்டவம் அணையும் இந்த காலத்தே
செழிக்கும் மேனி தன்னிலே சேர்த்து வைத்து கொள்ளவே
கொழிக்கும் தாண்டவம் தனை மொழிக்குள் வைத்து பாடினேன்
கழிக்கும் அந்த காலத்தில் கடக்க வேண்டுமே துணை (14)
விழிகள் மூன்று கொண்டவா விழியம் ஐந்து கொல்லவே
பழிகள் விட்டு போனதும் பலனும் விட்டு போனதும்
வழியில் இட்டு போகவே வரனும் எந்தன் சோதியே
அழியும் என்னை நீக்கியே அருளும் மூர்த்தியே சரண் (15)...
إرسال تعليق