#தமிழெனும்_வியன் #வரிதரும்_எண்ணம்
பொய்யான மெய்
தெளிந்தால்
மெய்யான பொய்..
இந்த வரிக்கு 11 விதமான விளக்கம் தருவதாக சொன்னேன்.. 2 அல்லது 3 என்றால் தாங்களே கண்டுபிடித்துவிடலாம்.. ஆனால் 11 ம் சொல்ல வேண்டுமென மனம் ஏங்கியமையால்..
1) பட்டினத்தாரின் போதனையை கையில் எடுத்து.. உறவுகள் என்பது பொய் என்று கொள்ளும் போது.. இதனை சுட்ட விரும்புகிறேன். உறவு என்பது நடைமுறையில் நிஜம்.. அந்த உறவினால் செயல் நிகழ்கிறது.. ஆனால் எப்படி உறவு என்றால் நம்மிடம் கண்ணுக்கு புலப்படாத அன்பு மட்டுமே உணரப்படுகிறது.. பொய்யான மெய் என்பதை சரிவர சொல்லவியலாத ஒன்றை பொய் என்று கொண்டால் பொய்யான உறவு.. தெளிந்தால் உணர்ந்து நோக்கினால் உறவு என்பதே மாயை என்றானால் பொய்யான மெய்.. அட இப்படி சொல்லி முடிக்கலாம்.. உறவு மெய் தான் ஆனால் நிலையாமை என்பதனால் அது பொய்யாகிறது. ஆனால் கொண்ட அன்பு உண்மை.. அஃதே பொய்யான மெய்.. தெளிந்தால் மெய்யான பொய்.
2) கனவுகளை இதற்கு ஒப்பிடலாம்.. ஒரு கனவு கிட்டதட்ட உண்மையை போலே நிகழ்கிறது .. விழித்தால் கனவு வந்தது உண்மை ஆனால் நிகழ்வு பொய்.. சைக்கார்டிஸ்ட்கள் நம்மை ஆழ்மனத்துயில் ஆழ்த்து கையில் ஒரு கூழாங்கல்லை கொடுத்து நெருப்பு சுடும் என்கிறார். துயிலிலிருப்பவன் ஆவென்று சுடுபட்டது போல் வீசுகிறான்.. இது பொய்தான். ஆனால் அவன் கை வெந்ததுபோல இருக்கும்.. இதனை மெய் என்று கொள்ளத்தான் வேண்டும்.. சில கனவுகள் நிகழும் .. ஆகையால் கனவுகள் மெய்யான பொய்.. தெளிவானபின்.. அது பொய்யான மெய்.. சுருங்க சொன்னால்.. நீங்கள் வீடுகட்ட கனவு கண்டு வீடும் கட்டிவிடுகிறீர். உங்கள் கனவு பலித்தது.. ஆனால் ஒரு கோணத்தில் இவை மாயை என்று பார்த்தால் . மெய்யான பொய்..
3) நினைவுகள்.. நிகழ்ந்த வொன்றை நினைவில் வைத்திருப்பது மனித குணம்.. நிகழ்ந்த உண்மை நினைவெனும் பொய்யாக பதிவாகிறது. ஞானத்தின் பார்வையில் நிகழ்வுகளும் மெய்யானாலும் மாயையெனும் பொய்.. அதனால் நினைவுகளை சுமப்பதும் அவசியமற்றவை.. ஆனால் சிலர்க்கு நினைவே நிகழ்கால்திற்கான அச்சாணி.. இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்கிற நினைவே சிலருக்கு பெரும் ஆறுதல். ஆதலால்.. மெய்யான நிகழ்வு பொய் என்று தெளிந்தால் பொய்யான நினைவு மெய்..
4) திருமூலரை எடுத்துக்கொள்வோம்.. உடல் பொய்தான் என்றாலும் உயிராகிய மெய்க்கு அதுதான் இடம் என்பதால். பொய்யான மெய்..எனினும் இறை என்பதை கண்டு அதையடையும் தெளிவினால் அவரொன்றை சொன்னார் மெய் என்பது உயிரல்ல மெய்யான இறையின் ஒரு துளி என்று அதனை மெய்யான பொய் என்றும் கொள்ளலாம். அதாவது பொய்யான உடல் மெய்.. தெளிவினால் .. மெய்யான உயிர் பொய் என்றறிந்தார்..
5) ஒரு குளம் இருக்கிறது அந்த குளத்தில் சூரியனின் பிம்பம் தெரிகிறது.. இப்போது குளத்தில் இருப்பது சூரியனல்ல என்று சொல்ல முடியுமா?.. அது சூரியனின் பிம்பம் அல்லவா ஆனால் அது சூரியனாகுமா?.. அதுவே பொய்யான மெய்.. சூரியன் உண்மை ஆனால் பிம்பம் பொய்யானது.. ஒரு வேளை தண்ணீர் தெளிந்துவிட்டால் சூரியனின் பிம்பம் அதில் தெரியாது ஆனால் சூரியன் இருப்பதற்கான தடயமனைத்தும் அதிலிருக்கும்.. தடயங்கள் பெய்யானவை ஆனால் சூரியன் மெய்.. அதாவது பொய்யான பிம்பம் மெய்யாக தெரிகிறது தெளிவடைந்தால் மெய்யான பிம்பம் பொய்யாகிறது..
6) ஒரு மரம் நிழல் தருகிறது.. ஒரு மனிதன் அதனை இருளென நினைத்து நிழல்விழும் நிலத்தில் ஒரு தீமூட்டி வெளிச்சம் கொண்டுவரப் பார்க்கிறான்.. அங்கே தீயின் மீதும் நிழல் விழும் அதனால் தீயானது பொய்யாகுமா?.. தீ மெய் அதன்மேல் விழும் நிழல் பொய்யானது.. ஆனால் நிழல் விழவேண்டிய நிலத்தில் ஔி தெரியும்.. இங்கே நிழல் மெய்யானது ஔி பொய்.. அதாவது பொய்யான ஔி மெய் தெளிவானால் மெய்யான ஔி பொய்..
7) அதிகாலை வேளையில் கடற்கரை சென்று பார்த்தால் சூரியன் கடலிலிருந்து எழுவது போல் தோன்றும்.. உண்மையில் சூரியன் கடலுக்குள் செல்லுமா? சென்றால் கடல்தாங்குமா?.. ஆனால் தோற்றத்தில் உண்மையாலுமே கடலிலிருந்து எழுவது போலத்தான் தோன்றும் இதனை யாரும் மறுக்கவியலாது.. யாரும் மறுக்கவியலாதது எவ்வாறு பொய்யாகும். ஆனால் இது பொய் தானே.. அதாவது சூரியன் கடலிலிருந்து தோன்றுவது போலான தோற்றம் பொய்யான மெய்.. தெளிந்தவர்க்கு அது மெய்யான பொய்..
8) பள்ளிக்குழந்தைகளின் பாடபுத்தகத்தில் ஒன்று வரும் சூரியன் நகராது நிற்கிறது பூமியதனை சுற்றுகிறது.. என்று.. இன்றுவரை பலர் அப்படி தான் நம்புகிறோம்.. அதுதான் உண்மையென வாதாடுகிறோம். அது மெய்யான பொய்.. தெளிவானது என்னவென்றால் 2016 மார்ச் மாதத்தில் நாசா அறிவித்தது சூரியன் ஒரு திசையில் பயணிக்கிறது என்று.. இது பொய்யான மெய்.. அதாவது சூரியன் பயணிப்பது பொய்யாக கருதப்படும் மெய்.. தெளிவாக அறிந்தவர்க்கு பள்ளிகள் சொன்னது மெய்யான பொய்..
9) பிரதிகளை பற்றி நீங்கள் அறிவீர்கள் ஜெராக்ஸ். என்பர்.. ஒரு மூல பக்கத்தை 5 பிரதி எடுப்பதாக கொள்ளுங்கள்.. இந்த 5 ல் எது உண்மை.. அனைத்தும் நகலான உண்மையல்லவா. அது பொய்யான மெய்.. கொஞ்சம் யோசிக்கலாம்.. இந்த நகலினை ஒருவரிடம் கொடுத்தால் அதுவே அவர்க்கு மூல பக்கமாகிறது.. இதனை மெய்யான பொய் எனலாம்..
10) மஞ்சள் பிடியை பற்றி அனைவருக்கும் தெரிந்ததே.. மருந்தாகவும் உணவு பொருளாகவும் பயன்படுத்துகிறோம்.. அதனை பிடித்து வைத்து கடவுளென பூசிக்கிறோம்.. மெய்யாகவே மஞ்சள் கடவுள்தானா?.. அல்ல அது மெய்யான பொய்.. ஆனால் வணங்கப்படும் வரையில் ஒருவர்க்கு மஞ்சளுக்குள் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையினால் அது பொய்யானாலும் மெய்.. அதாவது மஞ்சளாக காணும் வரையில் பொய்யான மெய்.. நம்பிக்கை எனும் தெளிவு வந்து கடவுளாக காணும் வரையில் மெய்யான பொய்..
11) ஆத்மா உடலினை நான் என்று நினைக்கும் அது பொய்யான மெய்.. பின் உயிர்தான் நான் என்ற தெளிவு வந்து பின்னர் உயிரும் நானல்ல என்று உணருமாம்.. அதாவது உடலினை நான் என்று நினைப்பது பொய்யான மெய் தெளிவினால் .. உயிரினை நான் என்றுநினைப்பது மெய்யான பொய்..
12) உடல் என்பது மெய் என்போம் ஆனால் அழிவுக்கு உள்ளாவது மெய் என்று சொல்லலாகாது.. ஆதலால் உடல் பொய்யான மெய் ஞானத்தால் தெளிந்தவர்க்கு உடல் மெய்யான பொய்.. அதாவது மெய் என்று அழைக்கப்படும் பொய்..
இதை ஏன் தமிழெனும் வியன் தலைப்புல சேர்த்தேன் என்றால்.. சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல சமகால எழுத்தும் பெரும் ஞானம் தருவது தமிழ் மொழியின் பெரும் சிறப்பு.. அட திருக்குறள் அளவு கூட இல்லங்க இத்தனை விசயம் பேச முடியுது.. அதான் தமிழும் தமிழரும்..
இதுல என்னயா ஆச்சரியம் இது எல்லா மொழியிலும் இப்படி சொல்லலாமேனு கேக்குறது காதுக்குள்ள வந்துபோது.. அட இதயும் கேளுங்க... அக்கா இங்கிலீஷ்ல எழுதுறவங்க இதுல தமிழ்ல எழுதிருக்காங்க அதுக்கு பலகாரணம் இருக்கலாம்.. இங்க என் காரணத்துக்கு வாங்க..
இங்கிலீஷ் மொழிபெயர்த்தா..
False falsehood
If telint
True lie ..
இப்படி வரும்னு வெச்சுக்கங்களே.. 11 னு சொல்லிட்டு 12வதா ஒன்னு இருக்கே கவனிச்சீங்களா.. மேல இருக்க 11ம் எந்த மொழியிலும் சொல்லலாம்.. 12 வதா இருக்குறதுக்கு மட்டும் யாராயிருந்தாலும் தமிழுக்கு வந்தே ஆகனும்.. உடம்புக்கு மெய்னு பேரு தமிழ்ல மட்டுந்தாங்க. அதனால தான் தமிழெனும் வியன்..
إرسال تعليق