பாவகை - கலிவிருத்தம்
சுடரது கொடுத்த சுடரிந்த ஞாலம்
உடலினை தந்தவள் உலகமைத்து சுமந்தாள்
மடலினை விரித்த மலரென நின்றுநமை
குடலினில் சுமக்கா குகையுடை தாயே
அகழ்ந்தால் ஆயிரமாம் ஆச்சர்யம் தந்தாளை
புகழ்ந்தால் வளராதோ புதுமையில் நற்றமிழ்
அகலாது எம்மையே அன்னையாய் தாங்கும்
பகலவன் பிள்ளையை புகழ்ந்தே போற்றுதுமே.
நகலென வொன்றும் நல்லண்டத் தேயில்லா
புகழுடை பூமியிவள் புன்னகை பேரலை..
தகவுடை தாயிவள் தண்கருணை பெரிதே
அகவும் மயிலொடு அயலும் கொண்டாளே..
நீர்தரு மாமழை தருந்தரு சுமப்பளை
கார்மேகந் தன்னை தாவணியாய் சூடினளை
பார்போற்றும் பாரினை பாராட்ட சொல்லுண்டோ
தேர்போல செல்வாளை தேயாது காப்போமே..
விதையினை வாங்கி விளைபயிர் தந்தாளின்
கதையது அறிவீரோ கங்காய கதிரோன்
சதையின்று வந்தாளே சாந்தமாகி தன்னுள்
புதைந்து எழுந்தாளை யாதென்று மொழிவதோ!..
அண்டக் கடலின் அருமீன் இவளே
வண்ணப் பொருள்பல வாரித் தருவாளே
விண்ணின் மமழை முதியா பதுமை
கண்ணாய் காக்கும் ககனக் குடுவையே..
إرسال تعليق