யாதில் லிருள்வெளியில் யாவுமாய் வந்தாயே
சோதியாய் நீதியாய் நின்றாய் - ஔியாய்
மிளிர்ந்தாய் கருவாய் குருவாய் இருந்தாய்
வெளியாய் வளியாய் அனலொடு - நீரே
நிலையாய் நிலைத்திட்டாய் நன்மனத் துள்ளே
சிலையாய் அமர்ந்தாய் அமரத் - தமிழே
கலையாய் கவியாய் கதையாய் கனிந்தாய்
அலையும் மனதில் அமிழ்தாய் - அமர்ந்தாய்
வலையம் அடைந்தாய் வளைந்தாய் வளர்ந்தாய்
தலையாய் நிமிர்ந்தாய் தகைவாய் - இனித்தாய்
புனைந்தாய் புவியில் புதிதாய் தினமும்
தனையே அடைந்தால் தயவும் - தமிழே
முகிலெனக் காய்ந்தாய் முழுதாய் பொழிந்தாய்
அகிலம் அதனின் பழமை - உடைத்தாய்.
பகலில் கதிராய் இரவில் நிலவாய்
பகரின் தமிராய் பணிந்தாய் - மழலையின்
பிள்ளைத் தமிழேநின் பிள்ளை எனக்குமே
கள்ளமிலா நற்புல மைருளினாய் - நீயே
பகைமை நிறைபுவி என்னும் பெரிய
குகைவாயில் கண்ட ஔி..
إرسال تعليق