எழுதபடாத கவிதைகள்-12 - தனிமை

நாடில்லா நாடோடியுமில்லா அரசன் நான்
நாளில்லா நாட்களுமில்லா ஆண்டுகள் நான்

ஊரில்லா உறவுமில்லா ஊன் நான்
உடலில்லா உயிரில்லா உள்ளம் நான்

கிளியுமில்லை கழுகுமில்லை என் காட்டில்
குயிலுமில்லை குரங்குமில்லை

மிருகத் துணை கூட இல்லா மிருத்யுந்ஜெயன் நான்
மீண்டும் பிறக்க வழியில்லா மீண்டோன் நான்

அழுது அறுக்கவும் ஆதரவு சொல்லவும் ஆட்களில்லை என் ராஜாங்கத்தில்
ஜெனமில்லை ஜீவனில்லை
கை நனையவோ தலை குளிரவோ கண்ணீரன்றி நீரில்லை என் பாரில்
தாவரங்களில்லை தடாகமுமில்லை
காற்றுமில்லா கானலுமில்லா காராகிரகத்தவன் நான்
காடுமில்லா கரடுமில்லா கடுமலையான் நான்


ஈக்களில்லை ஈவாரில்லை ஈனஸ்வரமில்லை என் இடத்தில்
ஈகையில்லை இரக்கமில்லை
இருந்தும் பயனில்லை காரணம் பயனாளரில்லை என் மண்ணில்
இன்பமில்லை பயமில்லை தனிமையன்றி ஏதுமில்லை


ஆடுகிறேன் நான் ஆடாத ஆட்டமெல்லாம்
கேட்கிறேன் நான் பாடாத ராகமெல்லாம்
போடுகிறேன் நான் போடாத தாளமெல்லாம்


எல்லாம் எல்லாம் இன்பம் எல்லாம்
எல்லாம் எல்லாம் மாயம் எல்லாம்
எல்லாம் எல்லாம் சூன்யம் எல்லாம்
எல்லாம் எல்லாம் ஒருநாள் எல்லாம்
நிகழும் பார்
என்கிறேன் நான் பேதலித்து


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post