கட்டளை கலிப்பா - முருகன்

#கட்டளை_கலிப்பா

மா கூவிளம் கூவிளம் கூவிளம்.. (2)

வாராய் என்றடி போற்றுவார் தம்மெதிர்
~ வருமென் வேலனே கந்தனே நல்லருள்
தாராய் என்றுனை வேண்டுவார் கேட்டதை
~ தருமென் பாணியே குன்றெலாம் நின்றவா
பாராய் என்றுனை பாடுவோர் தம்தமிழ் 
~ பாவாய் வந்துறை சுப்பனே ஒப்பிலா
வீரா போர்களம் தூள்பட புக்கெதிர்
~ வீழ்த்தும் வேந்தனே ஞானமே வீரனே... 

நீரில் தோன்றிய பாலகா ஏரகா
~ நீந்தும் மஞ்ஞையில் ஏறிய சண்முகா
போரில் குன்றையே ரெண்டென துண்டிய
~ பெருவேல் கொண்டவா வேடவா வேலவா
நேரில் வந்தெனை நேர்பட செய்தருள்
~ நெய்தல் நாயகா மாயவன் நாதனே
பாரில் காவலாய் வந்தயெம் காவலா
~ பாடி போற்றினேன் பாவங்கள் போகவே.. 

காற்றின் கையிலே கங்காய் வந்தொரு
~ காய்தழல் கையிலே காய்சுடர் ஆகவே
ஆற்றில் சிந்திய ஆறுதீ அங்கொரு
~ ஆறாய் தோன்றிய அற்புதன் நீயென
போற்றி பாடவோ பாவினில் ஆடவோ
~ பொய்யர் சேனையும் ஓயுமோர் வேலனை
ஏற்றிப் பாடவோ ஏகனின் சித்தியை
~ஏது பாடவோ சொல்லடா கந்தனே.. 

#இலக்கணம்  மேற்கண்ட வாய்பாட்டில் அமைந்தால்.. 
முதல்சீர் நேரசையில் தொடங்க அரையடிக்கு  11 எழுத்து
நிரையில் தொடங்க 12 எழுத்து.. 
மா கூவிளம் கூவிளம் கூவிளம் என்பது அரையடி.. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post