சிந்தை தனக்கொரு விந்தை யின்றியே
மந்தை நடைக்குளே மந்தம் சென்றதே
பந்த மெனவரு பற்றும் விட்டதே
இந்தப் புவியினில் இன்பம் தீர்ந்ததே. 1
பாசம் வைத்தவர் பழிகள் கொள்கிறார்
நேசம் வைத்தவர் நிலையில் தாழ்கிறார்
தேசம் கொண்டவர் தேகம் திண்கிறார்
மோசம் இங்கென மொழிதல் இல்லையே. 2
காசைத் தேடியே காயம் கெடுகிறார்
ஆசைக் கோடியே ஆழம் விழுகிறார்
வீசைக் காடியே வீணாய் கெடுகிறார்
பூசைக் கோடியே பூதம் வணங்குவார். 3
உள்ளம் திருவிடம் உயிரே குருவிடம்
கள்ளம் அறுபடும் கணமே அருள்தரும்
வெள்ளம் எதுவென வெதும்பி திரிகிறார்
பள்ளம் அவருளம் பயக்கும் கெடுதலே..4
அன்பே அருளிடம் அதுவே இறையிடம்
என்போர் உளவிடம் எனதாம் உறைவிடம்
வன்போர் வருமிடம் வகையாய் துறைவிடம்
என்போர் உளவிடம் எளியேன் இலாவிடம்.. 5
தேடித் தேடி தேகம் தேய
ஓடி ஓடி ஓசைத் தேய
நாடி நாடி நாடித் தேய
பாடிப் பாடி பாதம் கண்டேன்.6
என்றோ அன்னைக் கென்னை தந்தான்
தன்னை இன்பத் தேனை தந்தான்
தன்னை துன்பத் துள்ளும் எண்ணா
தென்னை என்மத் துள்ளே நின்று. 7
மகவாய் பிறந்து மகிழும் கொழுந்து
தகவாய் வளரத் தகவாய் விழுந்து
அகமாய் எழுந்து அகிலம் விரிந்து
இகமும் பரமும் இருந்தத் துணையை.8
அறியா தறியும் அறிவன் அல்லேன்
வறியார் விரும்பும் வரியாய் அல்லேன்
நெறியாய் நடந்து நியமம் செய்யேன்
அறியேன் அமையேன் அறிவாம் அதுவே 9
சிந்துகவி சிந்திச் சந்தமொடு பாடவல்லேன்
முந்துவினை முந்தி மும்மலத்தை கோடவல்லேன்
இந்துபிறை சூடி இன்பமதை நாடவல்லேன்
நொந்துமனம் வெந்து நோயாெடுதான் நான்வீழவோ 10
إرسال تعليق